இளைய பாரதமே... எழுக!-2: இளமைக்கால அடித்தளங்கள்!
'சதி' என்ற பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையான பழக்கத்தை முறியடித்த சமய சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன்ராய் "பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.


'சதி' என்ற பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையான பழக்கத்தை முறியடித்த சமய சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன்ராய் "பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பல தெய்வ வழிபாடு, விக்கிரக வழிபாடு, ஆண்டவன் அவதரிக்கிறான் என்ற நம்பிக்கை, குரு மூலமாகவே உபதேசம் பெறவேண்டும் என்ற கருத்து, வேதவாக்கியங்களைக் கேள்விக்குட்படுத்தாது அப்படியே ஏற்பது போன்ற அனைத்தையும் பிரம்ம சமாஜத்தினர் ஏற்கவில்லை என்பதோடு எதிர்த்தும் கருத்துக்கள் வெளியிட்டனர்.
கல்வியிலும் செல்வாக்கிலும் உயர்ந்திருந்த பலர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தனர். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர் ராஜாராம் மோகன்ராயிக்குப் பிறகு அவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பாளராக விளங்கினார். தேவேந்திரநாத் தாகூர் "மகரிஷி' என்று மதிப்போடு மற்றவர்களால் போற்றப்பட்டார். இந்த வரிசையில் இவ்வமைப்பின் பொறுப்பிற்கு வந்தவர்தான் கேசப் சந்திரசென் என்ற ஆற்றல்மிகு நாவலர்.
நரேன் பிரம்ம சமாஜத்தில் இருந்த காலகட்டத்தில் சில ஆன்மீகக் கேள்விகளுக்கான தெளிவு கிடைக்கவேண்டி மகரிஷி தேவேந்திரநாத் தாகூரைச் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளான். ஏற்கெனவே அவரைப் பார்க்கிற, அவரது கருத்துகளைக் கேட்கிற வாய்ப்பு நரேனுக்குக் கிடைத்திருந்தாலும் கங்கையாற்றுத் துறையில் ஒரு படகையே ஆசிரமமாக்கி அப்படகிலேயே வசித்துவந்த "மகிரிஷி' தேவேந்திரநாத் தாகூரை நேருக்கு நேர் சந்தித்து விளக்கம் பெறும் வேட்கையில் அவ்வாசிரமத்திற்கே சென்று அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளான் நரேன். நரேனின் கேள்விக்கு மகரிஷி அளித்த பதிலில் நரேனுக்கு நிறைவு ஏற்படவில்லை.
இவ்வாறு பல காரணங்களால் பிரம்ம சமாஜத்தில் நீடித்திருக்க முடியாவிட்டாலும் அவ்வமைப்பின் மூலம் கிடைத்த அனுபவமும் படிப்பினையும் அமைப்புரீதியாகச் செயல்படுதல் பற்றிய கருத்தும் சமூகம் குறித்த புரிதலும் நரேனுக்குக் கிடைத்துள்ளது. நரேன் சிறுவனாக இருந்த போது அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்த, உறவினராக விளங்கிய ஒரு முதியவரின் அருகில் சென்று இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தான் .
அப்பெரியவர் சமஸ்கிருத மொழியிலும் இலக்கியத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவர் நாள்தோறும் நரேன் தூங்கும் வரையில் அவனுக்கு சமஸ்கிருத சுலோகங்களை கதைபோல சொல்லிக் கொடுத்தார்.
நரேன் இயல்பாகவே வியக்கத்தக்க நினைவாற்றல் மிக்கவனாக இருந்ததால் பெரியவர் விளையாட்டாக சொல்லிக் கொடுத்த சுலோகங்களை மனதில் ஆழப்பதிய வைத்துக் கொண்டான். நினைத்தவுடன் சுலோகங்கள் சரம் சரமாக விவேகானந்தர் தனது கடைசிக்காலம் வரை மனப்பாடமாகச் சொன்னதற்கு அடித்தளமிட்டவர் அப்பெரியவரே ஆவார்.
நரேனுக்கு எட்டு வயதிருக்கும்போது காம்ப்டே என்ற ஐரோப்பிய அறிஞரின் தத்துவக் கருத்துக்களை மற்றுமொரு உறவினர் நரேனுக்குப் புரியத்தக்க விதத்தில் விளக்கியுள்ளார்.
பன்னிரண்டு வயதில் நரேன் மேல்நாட்டு அறிஞர் ஹெர்பர்ட் ஸ்பென்சருடைய நூல்களை வாசிக்கும் வாய்ப்பையும் திறனையும் பெற்றிருந்தான்.
ஸ்பென்சருடைய புத்தகங்களைப் படித்ததோடு அந்நூலில் உள்ள சில கருத்துக்கள் தொடர்பாக நூலாசிரியருக்கே விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினான் நரேன் . நரேனின் கடிதத்திற்கு பதில் எழுதிய ஸ்பென்சர் "மேலும் மேலும் இத்தகைய நூல்களை வாசித்து வந்தால் உமக்கு தத்துவஞானப் பயிற்சி எளிதாக வசப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
1877 } ஆம் ஆண்டு நரேந்திரனின் பதினைந்தாவது வயதில் அவனது தந்தையார் அவரது பணி காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் சென்று அங்கேயே வசிக்க வேண்டியதாயிற்று. குடும்பத்துடன் கல்கத்தாவை விட்டு ராய்ப்பூர் சென்றார், விஸ்வநாத் தத். இதனால் நரேனின் பள்ளிப் படிப்பு பாதிக்கப்பட்டது. பிறகு கல்கத்தாவுக்குத் திரும்பி வந்தது தத்தரின் குடும்பம். ராய்ப்பூரில் பள்ளி ஏதுமில்லாததால் அங்கு நரேன் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. இந்த இரண்டாண்டுகள் முழுவதும் தனது தந்தையார் விஸ்வநாத் தத்துடன் நெருக்கமாக உறவாடும் வாய்ப்பினைப் பெற்றான் நரேன். விஸ்வநாத் தத் தகவல் களஞ்சியமாக விளங்கியதோடு அரசியல் , சமூகம், சமயம் போன்றவை குறித்த தெளிவான பார்வையுள்ளவராகவும் விளங்கினார்.
ஆசிரியர் - மாணவர் போலவோ, குரு - சீடர் போலவோ அல்லாமல் தான் கற்றறிந்த கருத்துக்களை இயல்பாக தனது மகனிடம் பகிர்ந்து கொண்டார் தந்தை விஸ்வநாத்.
தந்தையின் சிறப்பியல்புகளில் ஒன்று எல்லா விஷயங்களிலும் முக்கியமல்லாத அம்சங்களை விலக்கிவிட்டு அதன் கருவாக விளங்கும் மையக் கருத்தை உள்வாங்கிக் கொள்வதாகும். அதிலிருந்து கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்துவது, உண்மையைத் தெளிவாகப் பிரித்தெடுத்து பல கோணங்களிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்வது போன்ற தனித்திறன்கள் அவருக்கு அமையப் பெற்றிருந்தன. தந்தையிடமிருந்த இப்பழக்கத்தையும் திறனையும் அப்படியே தனதாக்கிக் கொண்டான் நரேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் கல்கத்தா திரும்பினார் விஸ்வநாத் தத். இரண்டாண்டுகள் பள்ளிப் படிப்பில் இடைவெளி ஏற்பட்டு விட்டதால் மீண்டும் நரேன் படித்த புகழ்மிக்க பழைய பள்ளியிலேயே மீண்டும் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இருப்பினும் கடந்த காலங்களில் நரேன் படிப்பு மற்றும் இதர தளங்களில் சிறந்து விளங்கியதைக் கணக்கிலெடுத்து அப்பள்ளியிலேயே தொடர்ந்து இரண்டாண்டுகள் படித்திருந்தால் எந்த வகுப்பில் படித்திருப்பானோ அவ்வகுப்பில் நரேனை பள்ளி நிர்வாகம் சேர்த்துக்கொண்டது. இருப்பினும் அந்தஆண்டு நரேன் சிறப்பாகப் படித்து முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றான். மூன்றாண்டுப் படிப்பை ஓராண்டில் சிறப்பாக முடித்ததற்காக தந்தை மகனுக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார்.
நரேன் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோதே பாடப் புத்தகங்களோடு ஆங்கிலம் மற்றும் வங்காள இலக்கியங்களை தணியாத ஆர்வத்தோடு ஆழமாக வாசித்து வந்தான். மார்ஷ்மான், எல்பின்ஸ்டன் ஆகியோர் எழுதிய இந்திய வரலாற்று நூல்களையும் ஈடுபாட்டோடு படித்தான்.
கல்லூரியில் சேர்ந்தவுடன் முதல் இரண்டாண்டுகள் மேலைநாட்டு தர்க்கவியல் மற்றும் தத்துவ நூல்களையும் தற்கால வரலாற்று நூல்களையும் விரிவாகப் படித்தான் நரேன்.
நரேனைப் பற்றி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஹாஸ்டி, ""நரேந்திரநாத் தத் ஒரு இளம் மேதை . நான் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். நரேந்திரநாத்தைப்போல் ஆற்றலும் திறனும் படைத்த ஓர் இளைஞனை ஜெர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தத்துவயியல் பயிலும் மாணவர்களிடையே கூட நான் கண்டதில்லை'' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
நரேனுக்கு இசையில் ஆழ்ந்த நாட்டம் இருந்தது. முறைப்படி சங்கீதம் பயில வேண்டும் என்ற நோக்கில் அஹமத்கான் , வேணிகுப்தா என்ற இரண்டு இசை வல்லுநர்களிடம் நான்கைந்து ஆண்டுகள் வாய்ப்பாட்டும் வாத்திய இசையும் பயின்றான். குறிப்பாக இந்தி , உருது, பெர்ஷிய மொழிகளிலுள்ள ஆன்மீக அடிப்படையிலான பாடல்கள் பலவற்றை அஹமத்கானிடம் கற்றுக் கொண்டான்.
இது போன்று நரேன் கற்றுக்கொண்ட தனித்திறன்களில் ஒன்றுதான் பேச்சுக்கலையாகும். நரேனுடன் படித்த ஒருவர் பிற்காலத்தில் அவர்களது பள்ளி வாழ்க்கையை நினைவுகூர்ந்து சொல்லும்போது ""நரேந்திரன் பேசுவதைக் கேட்கவே எங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். அவனுடைய குரலே கானமாக இருக்கும். அவனுடைய அழகிய பேச்சை ரசிப்பதற்காகவே ஏதேனும் ஒருவிஷயத்தைப் பற்றி அவனிடம் பேச்சுக் கொடுப்போம். படித்ததிலிருந்து பேசுவதோடு தானாகவே புதிய கருத்துக்களைக் கூறும் ஆற்றலும் பெற்றிருந்தான்'' என்று குறிப்பிடுகிறார்.
பிற்காலத்தில் ஆளுமைமிக்கவராகவும், ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான கருத்துக்களைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி இளைஞர்களைத் தட்டியெழுப்பியவராகவும் விவேகானந்தர் திகழ்ந்ததற்கு இப்படியான இளமைக்கால அடித்தளங்கள் எத்தனையோ இருந்திருக்கின்றன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...