/

பாலிவுட் ஸ்டுடியோ!

அனைவருக்கும் ராணுவப் பயிற்சி : கங்கனாகங்கனா நடிப்பில் சமீபத்தில் 'சந்திரமுகி 2'  படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:12 am

டெல்டா அசோக்


அனைவருக்கும் ராணுவப் பயிற்சி:

கங்கனாகங்கனா நடிப்பில் சமீபத்தில் 'சந்திரமுகி 2'  படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.   ஏற்கெனவே அவரது நடிப்பில் 'எமர்ஜென்சி', 'தேஜஸ்' ஆகிய  இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.  இதில்,  'தேஐஸ்'  அக்.  27இல் வெளியாக இருக்கிறது. 
போர் விமானம் தொடர்பான இந்தப் படத்தை சர்வேஷ் மேவாரா இயக்கியுள்ளார்.  இதில், பைலட்டாக கங்கனா நடித்துள்ளார்.  தற்போது  புரொமோஷன் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்கனா,  'படிப்பை முடிக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும். இதனால் சோம்பேறிகளையும் பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒழுக்கத்தையும் வளர்க்க முடியும்.  
சீனா, பாகிஸ்தான் மீது பாலிவுட் கலைஞர்கள் அன்பைப் பொழியும்போதும்,   கிரிக்கெட் வீரர்கள் அவர்களைக் கட்டியணைக்கும்போதும் நான் மட்டும்தான் அவர்களை எதிரிகளாக நினைக்கிறேனா, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகை எனக்கு மட்டும்தான் பெரியதாகத் தெரிகிறதா?  என்ற கேள்வியே எனக்குள் எழுகிறது. 
இந்த 'தேஜஸ்' படம் அதை உணர்த்தும். வீரர்கள் எல்லையில் சண்டையிடும் நேரத்தில், நாட்டு மக்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் பேசும்போதும், அவர்களைக் குறை கூறும்போதும் ஒரு ராணுவ வீரர் எப்படி உணர்கிறார் என்பதை இப்படம் காட்டும்'  என்று பேசியிருக்கிறார்.

Story image

அமிதாப் 80

எண்பது வயதைக் கடந்தும் ஓய்வில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமிதாப் பச்சன்.  எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சவாலுடன் நடிப்பதை தனது விருப்பமாகக் கொண்டுள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி   அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடியிருந்தனர். அவர்களை ஏமாற்ற விரும்பாத அமிதாப்பச்சன் இரவு 12 மணிக்கு தனது வீட்டில் இருந்து வெளியில் வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பெற்றார். பின்னர், அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 
இந்த நிகழ்வுகளை அமிதாப்பச்சன் மருமகள் ஐஸ்வர்யா ராய்,  பேத்தி ஆராத்யா பச்சன், நவ்யா நந்தா ஆகியோர் வீட்டுக்குள் இருந்து பார்த்தனர். அபிஷேக் பச்சன் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால்,  பிறந்த நாள் கொண்டாடுவதை வீடியோ கால் மூலம் ஐஸ்வர்யா ராய் தனது கணவருக்கு காண்பித்தார். ரசிகர்களை சந்தித்தவுடன் அமிதாப்பச்சன் தனது சோஷியல் மீடியா பதிவில், ' உங்களது ஆசிர்வாதம் எனது நல்ல அதிர்ஷ்டம்' என்று குறிப்பிட்டுள்ளார். 
அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் நவ்யா நந்தா பகிர்ந்து தனது தாத்தா அமிதாப்பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சோஷியல் மீடியாவில் அமிதாப் பச்சனுக்கு ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். 

சீதையாக சாய் பல்லவி

ராமாயணத்தை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வந்த 'ஆதிபுருஷ்' ஓர் உதாரணம்.  தற்போது மேலும் ஒரு படம் பாலிவுட்டில் தயாரிக்கப்பட இருக்கிறது. 
'ராமாயணம்'  என்ற பெயரில் தயாரிக்கப்பட இருக்கும் இந்தப் படத்தை 'தங்கல்' புகழ் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்க இருக்கிறார்.  இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 
சாய் பல்லவி சீதையாக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இதில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கத் தொடங்கியதும்,  மது,  மாமிசத்தை விட்டுவிட முடிவு 
செய்துள்ளார். 
ரன்பீர் கபூர் எப்போதும் மது அருந்துவதையும், மாமிசம் சாப்பிடுவதையும் வெளியுலகுக்கு மறைத்தது கிடையாது. ஆனால் ராமாயணம் படத்தில் ராமராக நடிக்க வேண்டும் என்று ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளார். 
இதனால் நள்ளிரவு பார்ட்டிகளைக் கூட தவிர்த்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் முற்றிலுமாக மது,  மாமிசம் இல்லாமல் வாழ முடிவு செய்துள்ளார். 
இந்தப் படத்தில் ராவணனாக  யஷ்ஷை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.  படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடக்க இருக்கிறது.  இரண்டு பாகங்களாகவும் எடுக்கப்பட இருக்கிறது என்கிறார்கள். 
முதல் பாகத்தில் ராமர்,  சீதாவை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீதையாக ரன்பீர் கபூரின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஆலியா பட்டே நடிப்பதாக இருந்தது.  அதன்பிறகு ஆலியா பட் அதிலிருந்து விலகிக் கொண்டவுடன் சாய் பல்லவி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 
தற்போது ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இதில்,  அனில் கபூர், ராஷ்மிகா 
மந்தனா ஆகியோரும் நடித்துள்ளனர். 

கர்ணன் வேடத்தில் சூர்யா

கங்குவா, வாடிவாசல், சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்து பிரமாண்ட லைன் அப்கள் சூர்யா வசமிருக்கின்றன.   இதற்கிடையே பாலிவுட் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளிவரத் தொடங்கின.  குழந்தைகளின் படிப்புக்காக சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் குடியேறி இருப்பதை யாவரும் அறிந்ததே. 
'கங்குவா' படப்பிடிப்புக்காக,  இரண்டு மாதங்களுக்கு மேல் கோவாவிலேயே இருந்தார் சூர்யா.  மும்பையிலேயே அதிகம் இருப்பதால் சூர்யாவுக்கு ஹிந்தி சினிமாவில் வட்டாரத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். 
இந்த நிலையில் பாலிவுட்டில் சிறப்பான ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.  ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் 'கர்ணா' படத்தில் அவருக்கு கர்ணனாகவே பெரும் பாத்திரமேற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
மகாபாரதத்தின் மிக முக்கிய கேரக்டரான கர்ணன் வேடத்துக்கு ஏகப்பட்ட பரிசீலனைகளுக்கு மத்தியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  நிறைய ஹிந்தி நடிகர்கள் ஆசைப்பட்ட ரோல் அது. சூர்யா இந்தப் படத்தை ஒப்புக்கொண்டு விட்டார். மிகப்பெரிய செட், அவுட்டோர் என இரண்டு பாகங்களாக படம் தயாராகிறது.

கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். சூர்யாவை ஒப்பந்தம் செய்த கையோடு ' பொன்னியின் செல்வன்'  ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்து விட்டார்கள். 
இதற்காக இயக்குநர் ஓம்பிரகாஷ் மெஹ்ராவும், ரவிவர்மனும் காஷ்மீர் லடாக் போயிருக்கிறார்கள். நடுங்கும் குளிரில் பத்து நாள்களுக்கு மேல் தங்கி லொகேஷன் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். 

படம் 2024 ஜூலையில் ஆரம்பமாகிறது. பிற ஆர்டிஸ்ட்களின் தேர்வு, பிலிம் டிசைன் என ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகாபாரதம்,  அதன் சூழல்கள் நடைபெறும் பழம்பெரும் அஸ்தினாபுரத்தை மறுபடியும் நிர்மாணிக்கப் போகிறார்கள்.  பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் ஸ்கிரிப்ட்டை உருவாக்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.