/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி சிறுநீர் வருவதை கட்டுப்படுத்த...?

என் வயது 66. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உணவிற்குப் பிறகு 182 என்ற அளவில் உள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:39 am

எஸ். சுவாமிநாதன்

என் வயது 66. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உணவிற்குப் பிறகு 182 என்ற அளவில் உள்ளது.  தற்சமயம் சிறுநீர் அடிக்கடி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும், மாலை வேளையில் அரை மணி  இடைவேளையில் நான்கு தடவையும் போவதால் இதனைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

-எஸ்.செல்லத்துரை,
கீரனூர்.

கார்ப்பு, கைப்புச்சுவை மற்றும் வெப்பத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் சிறுநீரின் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் மட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதில் மஞ்சள் முன் நிற்கும் உணவுப் பொருளாகும்.

ஐந்து கிராம் மஞ்சள் தூளை இருநூறு மில்லி லிட்டர் கலந்து, கொதிக்கவிட்டு, நூறு மில்லியாக வற்றியதும் வடிகட்டி, இரவு உணவிற்கு முக்கால் மணி நேரம் முன்பாகப் பருகிவர, அடிக்கடி வெளியேறும் சிறுநீர் உபாதையானது  நன்கு மட்டுப்படுத்துவதுடன், சர்க்கரையின் அளவை ரத்தத்திலும், சிறுநீரிலும் நன்றாகக் குறைக்கும்.
வெப்பத்தன்மையும், துவர்ப்புச் சுவையும் கொண்ட மருதாணி இலையாலும் நீங்கள் பயன்பெறலாம்.  சுமார் எட்டு முதல் பத்து இலைகளை கொதிக்கும் இருநூறு மில்லி வெந்நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, சிறுநீர் அதிகம் கழிக்கும் உபாதையானது கட்டுப்படும்.
கேப்பை ராகி எனப்படும் கேழ்வரகு தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய உணவுப் பொருள் எளிதில் செரிக்காது. இதன் மேல் தோல் வயிற்றில் செருகிப் பேதியை உண்டாக்கும். அதனால் முளைகட்டிக் குத்திப் புடைத்தபின், இதன் மாவுக் கஞ்சி, களி, கூழ், தோசை, அடை முதலிய உணவாக்கிக் கொள்ளலாம். நீரிழிவு நோயில் அதிக அளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
மூலிகைகளில் தொட்டாற்சுருங்கி எனும் பரந்துவிரிந்த வளரியல்பு கொண்ட தாவரம், துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத் தன்மையானது இதன் இலை, மூல நோய், பவுத்திரப் புண்களைக் குணமாக்கும். உடலைத் தேற்றும். இலைச்சாறு புண்களைக் குணமாக்கும். அதிக அளவில் வெளியேறும் சிறுநீரை அடக்கும். முழுத் தாவரத்தை உலர்த்தி, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, பத்து கிராம் அளவு காலையில் வெந்நீருடன் நாற்பத்து எட்டு நாட்கள் வரை சாப்பிட்டுவர நீரிழிவு நோயும் கட்டுப்படும்.
கைப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்ட சுண்டைக்காய் வற்றலுடன் , நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து நன்கு காய வைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்து கொள்ள வேண்டும்.
இதனை இரண்டு சிட்டிகை அளவு இருநூறு மில்லி மோருடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். காலை மாலை என இரு வேளைச் சாப்பிட, சிறுநீர் வெளியேற்றும் கட்டுப்படுவதுடன் நீர்ப்பேதியும் குணமாகிவிடும்.
சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற் கொட்டை பருப்பு இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்துவைத்துக் கொண்டு பத்து கிராம் அளவு தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர வேண்டும். தொடர்ந்து காலை, மாலை வேலைகளில், நாற்பது நாட்கள் வரை சாப்பிடலாம்.
சந்திரபிரயாகுளிகை, வஸந்தகுசுமாகரம், ரஸம் மாத்திரை, நிரூர்யாதி குளிகை, சிலாசத்து பற்பம், அமருதமேஹாரி சூரணம், நிசாகதகாதி கஷாயம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் நல்ல பயனை அளிக்க வல்லவை.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.