ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலையில் அரிப்பு, எரிச்சல் குறைய...!
என் மகனுக்கு தலையில் கடந்த ஆறு வருடங்களாக வெள்ளையாக படைபடையாக தோல் உரிகிறது.


என் மகனுக்கு தலையில் கடந்த ஆறு வருடங்களாக வெள்ளையாக படைபடையாக தோல் உரிகிறது. பொழுதுபோக்கை மறந்து போய் அவன் கைகள் தலையிலிருந்து பத்தை பத்தையாக சுரண்டி, சுரண்டி கீழே போடுகிறான். இரவு தூங்கும் வரை இந்த வேலை. தலையில் அரிப்பு எரிச்சல் இல்லை. முடி அடர்த்தியாக உள்ளது. இந்தப் பிரச்னை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளதே தவிர, முழுமையாகத் தீரவே இல்லை. இதை எப்படி குணப்படுத்தலாம்?
-நிர்மலா,
துவாக்குடி.
தோலின் உட்புற வரட்சியும், வெளிப்புறத்தில் அண்டக்கூடிய கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய கிருமிகளின் உபாதையாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும், கபம் சார்ந்த நோய்களாலும் நீங்கள் குறிப்பிடும் தோல் உபாதையானது ஏற்படலாம்.
சிறு வயது முதலே தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் பிள்ளைகளுக்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து அரை- முக்கால் மணி நேரம் ஊறிய பிறகே, ஷேம்பு போட்டு குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
வெறும் ஷேம்புவை மட்டுமே தலைக்குப் பயன்படுத்தினால், அதிலுள்ள ரசாயனங்களால் தோல் உரிந்து செதில் செதிலாக உரியத் தொடங்கும். அரிப்பு எரிச்சல் என ஏதுமின்றி, வெள்ளை வெள்ளையாகப் படை போல கொட்டத் தொடங்கினால், அது தலையில் போதுமான நெய்ப்புத் தன்மை இல்லையெனத் தெரிவிக்கிறது.
புலால் உணவை விரும்பிச் சாப்பிட்டு, உடல் அசைவுகள் ஏதுமின்றி ஒரே இடத்தில் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்குத் தோல் சார்ந்த உபாதைகள் அதிகம் ஏற்படும். மேலும், வயிற்றில் ஏற்படும் கெட்ட வாயுவின் அழுத்தம், உடல் பெருக்கம், குடலிலுள்ள மலம் சரிவர வெளியேறாமை போன்றவையும் ரத்தத்தைக் கெடுத்து விடும் அபாயமிருப்பதாலும், அதன்மூலம் தோல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாலும், இவ்விஷயமும் நீங்கள் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.
சளித் தொல்லை ஏதுமில்லாமல், உடல் சூடாக இருக்கக் கூடிய நிலையில், நீங்கள் மகனுக்குத் தலைக்கு, தூர்வாதி கேர தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவி,அரை- முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு பாலில் அரைத்த கசகசாவை தலையிலுள்ள பிசுக்கை அகற்ற, தலைக்குக் குளிக்கும்போது பயன்படுத்தலாம். சளி இருந்து, உடல் குளிர்ச்சியாக இருந்தால் ஏலாதிகேரதைலம் பயன்படுத்த நன்று.
பேய்ப்புடல், கடுகுரோஹிணி, சந்தனம், பெரும் குரும்பை, சீந்தில்கொடி, வட்டத்திருப்பி போன்ற மூலிகைகளின் கலப்பினால் தயாராகும் கஷாயத்தை, காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது. கருங்காலிக்கட்டையை முக்கிய மருந்தாகக் கொண்டுத் தயாரிக்கப்படும் அரிஷ்ட மருந்தை, காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.
வயிற்றிலுள்ள தேவையற்ற மலங்கள் வெளியேறவும், குடல் சார்ந்த அவசியமற்ற கிருமிகளை வெளியேற்றவும் மாணிபத்ரம் எனும் லேஹிய மருந்தை, சுமார் பதினைந்து கிராம், மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிட நல்ல மருந்தாகும்.
உணவில் இனிப்பு, புளிப்புச்சுவை குறைக்கவும். புலால் உணவை அறவே நிறுத்தவும். பகல் தூக்கம் தவிர்க்கப்பட வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால், தலைமுடியை மூழுவதுமாக நீக்கி, தலையில் ஊற்றப்படும் "தைலதாரா' எனும் சிகிச்சை முறையை எடுத்துக் கொள்வது நல்லது.
மூச்சுக்காற்றின் வழியே தூசி நன்றாக அகற்றப்படாமல், உட்சென்று தலையில் உட்பகுதியில் சேர்வதைத் தடுக்க, அணுதைலம் எனும் மூக்கினுள் விட்டுக் கொள்ளும் நஸ்ய முறையை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...