ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம்!

அடி வயிற்றில் வலி, கண்களைச் சுற்றி நீர் தேக்கம், உடல் வெளுத்துச் சோர்வான நிலை ஆகியவற்றால் அவதிப்பட்டேன். என்டோமெட்ரியோசிஸ் எனும் சாக்லேட் நீர்க்கட்டி, சினைப்பையில் உருவாகியுள்ளதையும், சுமார் 7 சென்டிம

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:26 pm

எஸ். சுவாமிநாதன்

அடி வயிற்றில் வலி, கண்களைச் சுற்றி நீர் தேக்கம், உடல் வெளுத்துச் சோர்வான நிலை ஆகியவற்றால் அவதிப்பட்டேன். என்டோமெட்ரியோசிஸ் எனும் சாக்லேட் நீர்க்கட்டி, சினைப்பையில் உருவாகியுள்ளதையும், சுமார் 7 சென்டிமீட்டர் அளவு வளர்ந்துள்ளதையும் விரைவில் அறுவைச் சிகிச்சை செய்யாவிடில் அது வெடித்துவிடும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர் கூறினார். அறுவைச் சிகிச்சைக்குப் பின் சுமார் 2 வருடங்கள் நன்றாக இருந்தேன். இப்போது மறுபடியும் கடுமையான வலி. முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமான நிலை. இந்த உபாதையை ஆயுர்வேதத்தின் மூலம் குணப்படுத்த முடியுமா?

ரேவதி, சென்னை.

என்டோமெட்ரியம் எனும் ஒருவகை சவ்வு, கருப்பையின் உள்ளே, சுவற்றைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் வளர்கிறது. பெண், கருவை அடைவதற்கு இந்தச் சவ்வு உதவுகிறது. தாய்மை அடையாதபட்சத்தில் மாதவிலக்கு ஏற்படும் நாட்களில், இந்தச் சவ்வானது, தன்னிடத்திலிருந்து நழுவி, ரத்தத்துடன் வெளியேறிவிடுகிறது. மாறாக, கருப்பையின் உள்ளே வளராமல், சினைப் பையின் மேல் வளர்ந்தால், அடிவயிற்றில் கடும் வலியை ஏற்படுத்தும். இதற்கு சாக்லெட் சிஸ்ட் அல்லது என்டோமெட்ரியல் டெபாஸிட்ஸ் என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மாத விலக்கு நாட்களில் கருப்பையின் அதிகமான சுருங்கி விரியும் தன்மையாலும் அந்நாட்களில் உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படும் வகையில் உழைக்க நேர்ந்தாலும் கருப்பையினுள்ளே உள்ள இந்த சவ்வானது, அங்கிருந்து இடம் பெயர்ந்து, பெலோபியன் குழாயின் வழியாக, சினைப் பையின் மேலாகப் படர்ந்து விடுவதால், இந்நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கு ரெட்ரோகிரேடு மென்ஸ்ட்ருவேஷன் என்று பெயர்.

மலம், சிறுநீர், குடல் காற்று ஆகியவை உடலிலிருந்து பிரிந்து வெளியேறும்போது, கடும் வலி தென்படுவதும், அதிக அளவில் ரத்தப் பெருக்கும், சீரான இடைவெளிவிட்டு வராமல், எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஏற்படுவதும், அடிக்கடி உடல் சோர்வும், மாதவிடாய் வரும் முன்னால் ஒருவகை பதட்டமான செயல்பாடுகளும் இந்த உபாதையில் ஏற்படும் அறிகுறிகளாகும்.

இதுபோன்ற வலி உள்ள நிலைகளில் நீங்கள் செய்து கொள்ள வேண்டியது,

1. சூடான தண்ணீரை தோல் பை அல்லது ரப்பர் பையில் நிரப்பி, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

2. மலச்சிக்கல் இருந்தால், சீரகம் போட்டுக் காய்ச்சிய வெதுவெதுப்பான நீரைப் பருகவும்.

3. சீரான இடைவெளியில் வெந்நீரை அருந்தவும்.

4. எளிதில் செரிக்கும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் காலையில், சிட்டிகை இந்துப்புடன் 2 அல்லது 3 கிளாஸ் குடிக்கவும்.

5. மதிய உணவும், இரவு உணவும் எளிதில் செரிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளவும். உதாரணம்: மிளகு ரசம், கறிவேப்பிலைத் துவையல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வற்றல்.

6. உருளைக் கிழங்கு, வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பருவ காலங்களுக்குத் தக்கபடி கிடைக்கும் பழங்களை அன்றாடம் சாப்பிடவும்.

7. உடல் மற்றும் மனச்சோர்வு தரும் செயல்களை மாதவிடாய் நாட்களில் செய்வதைத் தவிர்க்கவும்.

8. அமர்ந்தோ அல்லது படுத்த நிலையிலோ, வயிற்றுத் தசைப் பகுதிகளைத் தளர்த்தி, அவற்றிற்கு ஓய்வு அளித்து சன்னமான ஒலியில், மனதிற்கு இதம் தரும் பாடல்களைக் கேட்கவும்.

தசமூலம் எனும் ஆயுர்வேத கஷாயத்தை, 15 மி.லி எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீருடன், ஒரு ஸ்பூன் சுகமாரம் எனும் நெய் மருந்தை உருக்கிக் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். உடலின் மேல் புற பூச்சு மருந்தாக, ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் உங்களுக்கு உதவிடக் கூடும். பல மருந்துகள் இருப்பதால், உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற தைலங்களை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகித்து, விரைவில் நிவாரணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.