தலையிலும் முகத்திலும் நீங்கள் எண்ணெயைப் பூசிக் கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகிவிட வாய்ப்பிருக்கிறது. அது எப்படிச் சாத்தியம்? தோலின் மென்மையையும் சீதோஷ்ண சகிப்புத் தன்மையையும் பாதுகாப்பதற்காக தோலின் அடியே பரந்து நிற்கும் வியர்வைக் கோளங்களும் கொழுப்புப் பைகளும் உங்கள் விஷயத்தில் அதிகமாக இயங்குகின்றன. அதற்குக் காரணம் முகத்தில் எண்ணெய் தடவாமலிருப்பதால், வெயிலின் தாக்கத்தால் முகத்திலுள்ள தோல் வரண்டுவிடும்போது இயற்கையாகவே தோலின் உள்ளிருக்கும் கொழுப்புப் பைகளின் சேமிப்பு நிதியிலிருந்து வியர்வையுடன் வெளியேறி தோல் வறட்சியைக் குறைத்துத் தோலின் மென்மையையும் பளபளப்பையும் பாதுகாக்கிறது. இந்தநிலை தொடர்ந்து கொண்டேயிருந்தால் சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் கதைபோல, உங்களுடைய சேமிப்பு நிதி குறைந்துவிட்டால் தோல் இளைத்துப் புஷ்டி குறைந்து பளபளப்பின்றி மாறிவிடும். சூடும், தூசியும், டீசல் புகையும் நிறைந்த சென்னையில் முகத்தில் தோல் வறட்சியின் பாதிப்பு நிச்சயம் அதிகமாக இருக்கும். அதுவும் இருசக்கர வாகனத்தில், தலைக் கவசம் அணிந்து முகத்தை மூடும் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நீங்கள் பயணிக்கக் கூடியவராக இருந்தால், இந்தத் தாக்கம் மேலும் கூடும். வெளிப்புற மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் சக்தியைத் தோல் இயற்கையாகவே பெற்றிருப்பதால் வறட்சியைப் போக்க, தோலுக்கு எண்ணெய்க் கொழுப்பை அனுப்புவதால் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறது.