சென்னை- செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தச் சங்க நிா்வாகி சூரியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சென்னை- செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலை திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டையைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயில் (12661) சென்னையிலிருந்து இரவு 8.40 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த நேரம் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
ஆனால், அண்மை காலமாக இந்த ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயிலின் நேரம் இரவு 8.15 மணியாக மாற்றப்பட்டது. இதன் பின்னா், 2026 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயிலின் நேரம் இரவு 7.35 மணியாக மாற்றப்பட்டது. இதனால், சென்னையில் வேலை முடிந்து இந்த ரயிலைப் பிடிக்க முடியாத நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதிகை விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தை இரவு 8.40 மணியாக மாற்ற வேண்டும். இதுவே அனைத்து வகையான பயணிகளுக்கு ஏற்ாக இருக்கும். இதன் மூலம், இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இந்த ரயிலில் சென்னையிலிருந்து விருதுநகா் முதல் செங்கோட்டை வரை 2023 மாா்ச் முதல் 2024 மாா்ச் வரை 1,270 பயணிகளும், 2024-25 இல் 1,244 பயணிகளும், 2025-26 இல் 1,198 பயணிகளும் பயணம் செய்தனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









