இந்நம்பிக்கையின்படி, தலைவர்கள், சமயக் குருமார்கள், அசாதாரணத் திறமை பெற்றுள்ளவர்கள், பெரும் புகழ் பெற்றுள்ள மனிதர்கள், மிகுந்த வலிமை பெற்றுள்ளவர்கள், கூரிய பார்வை பெற்றவர்கள் சிறப்புற்றிருப்பதற்குக் காரணம், அவர்களிடம் மனா ஆற்றல் உள்ளதே. இதனைப்போலவே, மனா ஆற்றலின் காரணமாகவே, கலைநுட்பம் மிகுந்த உருவாக்கும் திறமையைக் கைவினைஞர்கள் பெறுகிறார்கள்; கவிஞர்கள், புகழ்பெற்ற கவிதைகள் இயற்றுகிறார்கள்; பாடகர்கள், நல்ல குரல் வளம் பெற்று பாடுகிறார்கள். மேலும், சராசரிக்கு மேலாக ஒரு செயலில் திறமையைக் காட்டும் ஒருவன், மனா ஆற்றல் காரணமாகவே அத்தனித்துவமான செயலைப் புரிகிறான். உதாரணமாக, படகோட்டுவதில், போரிடுவதில் தனித்துவம் பெற்றிருத்தல். இவ்வாறே, இயல்பாகக் காணப்படாத மிகப்பெரிய பாறைகளும், இயற்கைப் பொருட்களும் மனா ஆற்றலைப் பெற்றுள்ளதாலாலேயே அவ்வாறு உள்ளன. ஆக, உயிர்ப்பொருள், ஜடப்பொருள் எதுவாயினும், அவற்றின் சிறப்பியல்புக்கு மனா ஆற்றலைப் பெற்றிருத்தலே காரணம்.