துவக்கம் முதலே, சமூகத்தின் நல்ல மூளைச் செயல்திறன் மிக்க ஒருவர் சாமியாடி ஆனார். சாமியாடிகள் ஒருபோதும் சந்ததி வழிப்பட்டோ, மரபு வழிப்பட்டோ உருவாவதில்லை. அதனை சமூகமும் ஏற்பதில்லை. கடுமையான பயிற்சி மூலமும், அறிவு விருத்தியுடனும், சமூகத்தின் ஆன்மிகத் தேவைகளை, மருத்துவத் தேவைகளை, உணவு முதலான அன்றாட வாழ்வியல் தேவைகளை, சந்ததிப் பெருக்கம் உள்பட, வளமை சார்ந்த எல்லா சடங்குகளை நிறைவேற்றித் தருபவரே சாமியாடி ஆயினர். ஆண்-பெண் பால் வேற்றுமையற்று சாமியாடிகள் உருவானார்கள். சாமியாடிகளில் இரு பாலினத்தினரும் சமமாக மதிக்கப்பெற்றனர். மக்களின் நோய் முதலான தீங்குகளை நீக்குவதில் யார் சிறந்தவரோ அவரே மக்களால் போற்றப்படுபவராகவும், சமூகத்தில் உயரிடம் கொண்டவராகவும் ஆனார். சாமியாடிகள் தங்கள் அறிவுக்கு உள்பட்ட எல்லாச் செயல்களையும் செய்தனர். ஆவியுலத்துடன் தொடர்பு, வேற்றுலக சஞ்சாரம், தாவரவியல், விலங்கியல், ரசாயனம் என்ற அறிவியியல் துறை சார்ந்த அறிவு, அவற்றின் பயன்பாடு போன்றவற்றில் அவர்களின் செயல்பாடு வளர்ந்தது.