இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 23 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 16

உருளைக்கற்களின் பயன்பாடு, பலகைக்கற்களுக்கு இடையே உருவாகும் இடைவெளிகளை அடைத்து, கல்லறையின் வடிவத்தை முழுமை அடையச் செய்வதாகும் என்பது கவனிக்கத்தக்கது. இப்பயன்பாடு, மூலப்பொருட்களின் கிடைப்பே ஈமச்சின்ன வடிவத்தை தீர்மானித்துள்ளது என்பதற்குச் சான்றாகிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

த. பார்த்திபன்

பல்கூட்டு ஈமச்சின்னங்கள் (தொடர்ச்சி)

பல்கூட்டு வடிவங்களின் மற்றொரு குணம், ஒன்றுக்கும் மேற்பட்ட முதன்மை அலகுகளை ஒரு ஈமச்சின்னம் கொண்டிருப்பதாகும். உதாரணமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட தாழிகளைக் கொண்டவை: ஒன்றுக்கும் மேற்பட்ட பேழைகளைக் கொண்டவை: ஒன்றுக்கும் மேற்பட்ட கல்பதுக்கைகள் கொண்டவை; ஒரு தொகுப்பாக அமைக்கப்பட்ட கல்திட்டைகள் என்பவை முக்கியப் பங்காற்றுகின்றன.

ஈமச்சின்னங்கள் குறித்த கட்டடக் கலை அல்லது கட்டுமானத் தொழில்நுட்பத்தை முழுமையாக அறிய இவ்வடிவங்கள் கூடுதல் தகவல்களை அளிப்பவையாக இல்லை. எனினும், ஒரு ஈமச்சின்னம் எழுப்பப்படும் நோக்கம், பயன்பாடு, மூலப்பொருட்களின் குணங்கள் போன்றவற்றை அறிய அவை உதவுகின்றன.

இந்த அமைப்பின் ஒரு வெளிப்பாடாக உருளைக்கல் வரிசை (Stone Row), உருளைக்கல் இணை வரிசை (Stone Alignment), குத்துக்கல் வரிசை (Menhir Row), குத்துக்கல் இணைவரிசை (Mehir Alignment) ஆகியவற்றையும் கருதத் தோன்றுகிறது. அதே சமயத்தில், இவை ஈமத்தைக் கொண்டிராத நினைவுச்சின்னங்களாகவும், அதாவது வெற்றுச்சின்னங்களாகவும் அமைக்கப்பட்டிருப்பதை பிரம்மகிரி அகழாய்வு வெளிப்படுத்தியிருப்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். மேலும், குத்துக்கல் ஈமச்சின்னமும், மனித வடிவம் பெற்ற தாய் தெய்வ ஆந்த்ரோமார்ஃபிக் வடிவமும் பல்கூட்டு ஈமச்சின்னமாகவே எழுப்பப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இங்கு, மேலும் சில பல்கூட்டு வடிவ ஈமச்சின்னங்களை அறிமுகம் கொள்வோம்.

Story image

உறுப்புகள்

இரு அறையாகப் பகுக்கப்பட்ட முதன்மைக் கல்லறை

ஈடுபொருள் பானையின் மூடுகல்

துணைக் கல்லறை

உருளைக்கல் உயர் சுவர் அடுக்குகள் (Butteresses)

துணைக் கல்லறையின் சுவர் அரண்

உருளைக்கல் வட்டம் (உள் வரிசை)

உருளைக்கல் வட்டம் (வெளி வரிசை)

பலகைக்கல் வட்டம்

இடுபொருட்கள் – (வாள், அம்புமுனைகள், வில்-அம்பு உள்ளிட்ட பல வகை)

Story image

(இரு பேழைகள் இயற்கை கற்பலக்கை கல்பதுக்கை போன்ற கல்திட்டை பல்கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

பேழைகள்

இயற்கை கற்பலகைக் கற்களால் ஆன கல்பதுக்கை போன்ற கல்திட்டை

உருளைக் கற்கள்

இச்சின்னத்தில், இயற்கையாகக் கிடைக்கும் கரடுமுரடான பலகைக்கற்கள் பலவற்றைக் கொண்டு கல்பதுக்கை போன்ற கல்திட்டையின் கல்லறை உருவாக்கப்பட்டுள்ளது. பலகைக் கற்களுக்கு இடையே உருவான இடைவெளிகளை நிரப்புவதற்கு உருளைக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இங்கு உருளைக்கற்களின் பயன்பாடு, பலகைக்கற்களுக்கு இடையே உருவாகும் இடைவெளிகளை அடைத்து, கல்லறையின் வடிவத்தை முழுமை அடையச் செய்வதாகும் என்பது கவனிக்கத்தக்கது. இப்பயன்பாடு, மூலப்பொருட்களின் கிடைப்பே ஈமச்சின்ன வடிவத்தை தீர்மானித்துள்ளது என்பதற்குச் சான்றாகிறது.

Story image

(ஒரு வரிசை உருளைகல் வட்டம் ஒரு வரிசை பலகைக்கல் வரிசைக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை பல்கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

கல்லறை

கல்லறை இடுதுளை வில்வளைவு மூடுகல்

பலகைக்கல் வட்டம்

உருளைக்கல் வட்டம்.

கல்பதுக்கை போன்ற கல்திட்டை வகையைச் சேர்ந்த இந்த ஈமச்சின்னத்தில், கல்லறையின் மூடுகல் வட்ட வடிவம் கொண்டுள்ளது. மேலும், இந்த ஈமச்சின்னத்தில் இடுதுளையின் மூடுகல்லானது வில்வளைவு வடிவம் கொண்டதாகும். இவ்வில்வளைவு மூடுகல், கல்கறையின் மூடுகல்லைவிட அளவில் பெரியதாகவும், கல்லறையின் உயரத்தைவிட அதிக உயரத்துடனும் உள்ளன. இச்சின்னம், ஒரு வரிசை சிறிய அளவிலான பலகைக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உள்வட்டமும், இரண்டாம் வரிசையான வெளிவட்டமானது அளவில் பெரிய கரடுமுரடான உருளைக்கற்கள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஈமச்சின்ன்ங்களில் இரு வரிசை உருளைக்கல் வட்டங்களைக் கொண்ட அமைப்பையும் காணமுடிகிறது. அந்நிலையில், உள் வரிசை உருளைகல் வட்டத்துக்கு அளவில் சிறிய கற்களும் வெளிவட்டத்துக்கு அளவில் பெரிய கரடுமுரடான உருளைக்கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.   

Story image

(உருளைக்கல் வட்ட திறந்த இடைக்கழி கல்பதுக்கை போன்ற கல்திட்டை)

உறுப்புகள்

கல்பதுக்கை போன்ற கல்திட்டை

திறந்த இடைக்கழி

பலகைக்கற்கள்

உருளைக்கல் வட்டம்

இவ்வடிவமும், குறிப்பிடத்தக்க அரிய வடிவமாகும். இதில் ஒரு வரிசை உருளைக்கல் வட்டம் அமைக்கப்பெற்றுள்ளது. கல்வட்டத்தின் மையத்தில் கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஒன்று பலகைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கல்லறையின் இடுதுளையின் முன், திறந்த இடைக்கழி என்ற தரை மட்டத்துக்கு மேல் வெளியே தெரியும் வாயில் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பான ஈமச்சின்னங்கள் - கல்திட்டைகள்

தொகுப்பான ஈமச்சின்னங்கள் மற்றொரு வகையிலான பெருங் கற்படைச் சின்னங்களின் அமைப்பாகும். இவ்வகையில் அமைக்கப்பட்டவை, பழநி மலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆறுக்கும் மேற்பட்டு பத்து வரை வெவ்வேறு அளவிலும், உயரத்திலும், வடிவிலும், மூலக்கற்களாலும் அமைக்கப்பெற்ற கல்திட்டைகள் ஒரு வரையறுப்பில் காணமுடிவது இதன் சிறப்பாகும். இக்கல்திட்டைகளுக்கு இடையிலான இடைவெளி மண்கொண்டு நிரவப்பட்டுள்ளன. கல்திட்டைகளில் கல்லறைகளை அமைக்க, பக்கத்துக்கு ஒன்று முதல் பல பலகைக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுபோலவே, கல்லறையின் மூடுகல்லுக்கும் ஒன்று முதல் இரண்டுக்கும் மேற்பட்ட பலகைக்கற்கள் வரை பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.   

இவற்றின் ஒன்றில் இருந்து ஒன்றை வரையறுக்கும் சிறிய தட்டையான கற்கள் கொண்டு இணைப்புச் சாந்து ஏதுமின்றி எழுப்பப்பட்ட சுவராகும். இந்த வரையறுப்புச் சுவர் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நீள்சதுரம் (Rectangular), சதுரம் (Square), கேடகம் (இணையற்றப் பக்கங்கள் கொண்ட சதுர அல்லது செவ்வக வடிவம்) (Trapozoidal). ஆப்சிடல் – வெட்டப்பட்ட நீள் வட்டம் (Apsidal), முட்டை அல்லது நீள்வட்டம் (Oval), வட்டம் (Circular) போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

Story image

(தொகுப்பான கல்திட்டைகள் – பழநி மலை)

வகைகள்

ஆப்சிடல் – வெட்டப்பட்ட நீள் வட்டம் (Apsidal)

முட்டை அல்லது நீள்வட்டம் (Oval)

வட்டம் (Circular)

ஒழுங்குமுறையற்றது (Irregular)

சதுரம் (Square)

கேடகம் (Trapozoidal)

விளக்கப்பட்ட வடிவங்களில், வரையறுப்புச் சுவருக்கு வெளிப்புறம், முறையே கேடகமாகவும், சதுரமாகவும் சீரான இடைவெளியில் நடப்பட்ட கல்வரிசையைக் காணமுடிகிறது.

சேந்துகிணறு வடிவம்

ஊட்டியில் காணப்பட்ட அரிய வடிவ ஈமச்சின்னம் சேந்துகிணறு வடிவமாகும். இதன் வடிவத்தின் முழுமையை அறிந்துகொள்வதில் இன்று சில சிக்கல்கள் உள்ளன. பிரிக்ஸ் அவர்களின் விவரிப்பு, இவ்வடிவம் ஒரு பல்கூட்டு வடிவம் என்பதை உறுதி செய்கின்றன.

Story image

(சேந்துகிணறு வடிவ பல்கூட்டு ஈமச்சின்னம் - ஊட்டி)

இவ்வடிவம், வட்ட வடிவமாகமும் உயரமாகவும் அடுக்கப்பட்டதாகும். இது பரல் உயர் பதுக்கை போன்ற அமைப்பை நினைவுபடுத்தினாலும், வடிவமைப்பில் வேறுபாடு கொண்டதாகும்

சங்க இலக்கியம் சிறப்பித்துக்கூறும் “பரல் உயர் பதுக்கை”யின் புற அமைப்பு கொண்டு, இதனை “கற்குவி கல்வட்டம் எனலாம்”. வட்ட வடிவில் கற்கள் கொண்டு அமைக்கப்படும் எல்லா வகையினமும் “கல்வட்டம்” என்னும் ஒரு பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன என்பது முன்னர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது. பரல் உயர் பதுக்கை வகை கல்வட்டம் மற்றொரு அரிய கட்டுமானத்தை வெளிப்படுத்துவதாகும். இவ்வடிவத்தில், இயற்கையாகக் கிடைக்கும் பெரிய பெரிய உருளை அல்லது நீளுருளைக் கற்களை வட்டவடிவில் நட்டு, அதன் மேல் உட்புறம் நிரவலாகவும் அடர்த்தியாகவும் சிறுசிறு கற்கள், மணல், மண் கொண்டு உயரமாக அடுக்கிவைத்து உருவாக்குவதாகும்.

பொதுவாக, கற்களைக் குவியலாகக் கொட்டி ஈமச்சின்னங்களை உருவாக்குவதாகும். ஆனால், சேந்துகிணறு வடிவம் என்று குறிப்பிடப்படும் வடிவத்தில், உட்புறம் திறந்த அமைப்பாக இருக்கும். இதன் தரைமட்டத்தில் பலகைக்கற்கள், தாழி, எலும்புத்துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களையும் காணமுடிகிறது என பிரிக்ஸ் அவர்கள் விவரிக்கிறார்.

Story image

(பரல் உயர்பதுக்கை வடிவம் – ஆதனூர் - தருமபுரி மாவட்டம்)

குறுக்குவெட்டுத் தோற்றங்கள்

பல்கூட்டு வடிவங்களை முழுமையாக அறிந்துகொள்ள, அகழாய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கல்பதுக்கைகளின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள் வெகுவாக உதவுகின்றன.

Story image

குறுக்குவெட்டுத் தோற்றம் - 1

உறுப்புகள்

கல்பதுக்கை கல்லறை

இடைக்கழி மூடுகல்

கல் நிரவல்

கல்லறை மூடுகல்

பலகைக்கல் வட்டம் 

Story image

குறுக்குவெட்டுத் தோற்றம் - 2

உறுப்புகள்

குழி

விசிப்பலகைக் கல்பதுக்கை கல்லறை

கல்லறை மூடுகல்

கல் நிரவல்

கற்குவைத் திரள் அல்லது இயற்கை மண் நிரவல்

Story image

குறுக்குவெட்டுத் தோற்றம் - 3

உறுப்புகள்

கல்பதுக்கை கல்லறை

கல்பதுக்கை தரைப்பலகைக் கல்

இடுதுளை

இடைக்கழி

மண் மற்றும் கூழாங்கல் நிரவல்

உருளைக்கல் வட்டம்

பலகைக்கல் வட்டம்

உருளைக்கல் உயர் சுவர் அடுக்குகள் (Butteresses)

Story image

குறுக்குவெட்டுத் தோற்றம் - 4

உறுப்புகள்

குழி

பகுக்கப்பட்ட கல்லறை - 1

பகுக்கப்பட்ட கல்லறை - 2

மண் மற்றும் கூழாங்கல் நிரவல்

தாழி

தாழி மூடுகல்

உருளைக்கல் உயர் சுவர் அடுக்குகள் (Butteresses)

உருளைக்கல் வட்டம்

இயற்கை மண் நிரவல்

பலகைக்கல் வட்டம்

(நன்றி - இந்த அத்தியாயத்தில் இடம்பெற்ற ஈமசின்னங்களின் வரைபடங்களும், குறுக்குவெட்டுத் தோற்றங்களின் வரைபடங்களும், தொகுப்பான கல்திட்டை (பழநி மலை) வரைபடங்களும் முறையே, B. Narashimaiah, Neolithic and Megalithic Cultures in Tamil Nadu, K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, K.S. Ramachandran, Archaeology of South India நூல்களில் இருந்து மறுஆக்கம் பெற்றவை. J.W. Breeks, சேந்துகிணறு வடிவம் (ஊட்டி), K.S. Ramachandran, A Bibliography of Indian Megaliths நூலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. விரிப்புகளின் அடிப்படைகள் அவர்களுடையதே. என் புரிதல் சார்ந்து சில கூடுதல் விவரங்கள் இணைத்துள்ளேன். இதன் பொறுப்பு என்னைச் சார்ந்தது).                      

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.