பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு...


இஸ்ரேலைப் போல் இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (பிப். 25) இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இஸ்ரேலின் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றியுள்ளார். இதனால், அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமை தனக்கே உரியது எனவும், இந்தியா அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை அங்கீகரித்த 17 செப்டம்பர் 1950 அன்று தான் பிறந்ததாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
“2023 ஆம் ஆண்டு அக். 7 ஆம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை நான் கொண்டு வந்துள்ளேன். நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.
இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை நீண்டகாலமாக உணர்ந்துள்ளது. இஸ்ரேலியர்கள் உள்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் நினைவுகூருகிறோம். உங்களைப் போலவே எங்களுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடு இல்லாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன், காஸா அமைதித்திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் யூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீனக் கொள்கைக்கு எதிரான துரோகம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...