இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 9 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 2

கடந்த முப்பது-நாற்பது ஆண்டுகளாகப் புதிர்ப்பாதைகள் மீது பொதுத்தளத்தில் மக்களிடையே ஏற்பட்ட அதீத கவனம், ஈர்ப்பின் காரணமாக இவை பூங்காக்களில், விடுதிகளில் விளையாட்டுக் குணங்களுடன் மற்றும் கேளிக்கை நோக்கங்களுடன் அலங்காரத் தாவர வவகைகள் கொண்டு அமைக்கப்பட்டவைகளாகவும், காதணி, கழுத்தணி போன்ற அணிகலன்களாகவும், சட்டைப் பொத்தான்களில் பொறிக்கப்பட்டதாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:15 am

த. பார்த்திபன்

வளமைச் சின்ன வகைகள் - புதிர்ப்பாதை

வளமை குறித்த சிந்தனையில் இனம், மொழி, சமயம், நாடு, வாழ்வியல்முறை முதலான மனிதன் வகுத்த எல்லா பிரிவினைகளையும் மீறி அனைத்தையும் இணைக்கும் உலகப்பொதுவான தொன்மைச் சின்னமாகப் “புதிர்ப்பாதை” அன்றி வேறு ஒன்றை முன்னிறுத்த முடியாது. புதிர்ப்பாதையால் உருவாகும் வளமை என்பது பன்முகத்தன்மையானது. இப்பன்முகத்தன்மையின் காரணமாக இதன் பயன்பாடும் பன்முகத்தன்மையானது.  

தொல்லியல் சின்னம் வழியாக அறியப்பட்ட இதன் பழமை இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு குறைத்துக் கணிப்பிடமுடியாதது. மனித இன வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகளின் காலம், புதுமைகளைப் புகுத்திய காலம், புரட்சிகளை உருவாக்கிய காலம் என்று தொல்லியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ‘புதிய கற்கால’த்தின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இச்சின்னம் கருதப்படுகிறது. இருந்தும் இதன் உற்பத்தி, யாரால் எங்கு எப்பொழுது நிகழ்த்தப்பட்டது என்பது இன்று வரை ஒரு புதிராகவே உள்ளது.

இவை பல்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களால் அவரவர்களால் சுதந்தரமாக தன்னிச்சையாக உருவாக்கப்பட்டனவா அல்லது ஒரு பண்பாட்டால் கண்டுபிடிக்கப்பட்டு பிற இடங்களுக்கு இடப்பெயர்வின் காரணமாகவோ அல்லது பண்பாட்டின் தாக்கத்தாலோ பரவினவா என்ற கேள்வி ஆய்வாளர்களிடையே எழும்பி நிற்கிறது. எதிரும் புதிருமான இவ்விரண்டு காரணங்களுமே இருக்கக்கூடும் என மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். (Hermann Kern, Through the Labyrinth, (2000), p.26.) 

புதிர்ப்பாதை பெயர்

புதிர்ப்பாதை என்று குறிப்பிடப்படும் இச்சின்னம், ஆங்கிலத்தில் ‘Labyrinth’ என்று அழைக்கப்படுவதாகும். Labyrinth என்பதற்கு கீழ்க்கண்ட விளக்கங்களைத் தரலாம். 1. A Maze like network of tunnels or chambers or paths; it may either natural or manmade, 2. Confusing system of Passage. ஆங்கில-தமிழ் அகராதிகள், இச்சொல்லுக்கு “அரும்புதிர் நெறி, அரும்புதிர்ப்பாதை, புதிர்நெறிக்கூடம், அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டடம், திகைப்பூட்டும் திருக்குமறுக்குப் புதிர், கடுஞ்சிக்களமைவு, திகைப்பூட்டும் சிக்கல்நிலை மற்றும் சிக்கலமைவு’’ போன்ற பல சொற்களையும் விளக்கங்களையும் தருகின்றன. தமிழில் இவை ஒவ்வொரு பயன்பாட்டையும் வெவ்வேறான பொருளையும் சுட்டுபவையாக உள்ளன.

பொதுவாக Labyrinth என்பதற்கு இணையாக Maze என்ற சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இவ்விரு சொற்களும் குறிப்பிட்ட வேறுவேறு வடிவங்களுக்குப் பயன்படுத்தப்படுவன. Labyrinth என்பது கிளைகள் அற்ற ஒரு வழிப்பாதை. இப்பாதை சுற்றிச் சுற்றி வரும்; குறுக்கே எந்தத் தடையும் இருக்காது. இதனை தமிழில் ‘சிக்கல்வழி’ அல்லது ‘திருக்குமறுக்குப்பாதை’ எனலாம். சிக்கல் வழியில் பயணிப்பது என்பது திருக்குமறுக்கு வழிமுறையின்படி தொடர்ந்து நடக்கும் செயலாகும். ஆனால், Maze என்பது பல வழிகளையும் (Multi Cursal) கிளை வழிகளையும், முடிவுற்ற பாதை வழிகளையும் (Dead Ends) கொண்டிருப்பதாகும். இந்தப் பாதையில் பயணிப்பது என்பது வழியின் தடைகளை விடுவித்துத் தடையற்ற பாதையை தேர்ந்தெடுத்துப் பயணிப்பதாகும். இந்தப் பலவழிகளையும், கிளைவழிகளையும் முடிவுற்றப்பாதையும் கொண்ட Maze வடிவம் மிகவும் பிற்கால வடிவம் என்பது ஒருசாரார் கருத்து. ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று. ஏனென்றால் புராண, இதிகாசங்களில் வரும் சித்தரிப்புகள் இந்த வகைச் சித்தரிப்புகளையே காட்சிப்படுத்துகின்றன. தற்காலத்தில் இரு வடிவங்களுக்கும் தமிழில் ‘புதிர்ப்பாதை’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (த,பார்த்திபன். ‘கம்பைநல்லூர் புதிர்ப்பாதை’ கட்டுரை, நவம்பர்-2014, ப.3).

இருந்தும், இதன் பயன்பாட்டுப் பொருளில் இதற்கு நம் பயன்பாட்டில் உள்ள நெருக்கமான சொல்லாக ‘யந்திரம்’ அல்லது ’மண்டலம்’ என்ற சொல்லைக் கூறலாம்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உலக அளவில் தொல்லியல் துறை வளர்ச்சி அடைந்த வேகத்தில் பரிசீலனைக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய அறிதல்களுக்கும் உள்ளான பொருள்களுள் புதிர்ப்பாதை போன்று ஒரு சின்னத்தை இணையாகக் கூறமுடியாது. போலவே, உலக செவ்வியல் இலக்கியம் முதல் தற்கால நவீன இலக்கியம் படைத்த இலக்கிய ஆசிரியர்கள் வரை இலக்கிய உலகம் சுவீகரித்துக்கொண்ட வேறொரு தொல்லியல் சின்னத்தையும் காணமுடியாது. இந்திய மதங்களான இந்து மதம், பெளத்தம், சமணம் முதற்கொண்டு, கிறிஸ்தவம், இஸ்லாமியம், ஜொராஷ்டிரம், யூதம் வரையும் மத, சமய அடையாளமற்ற நிலையில், அமெரிக்க ஹோப்பி இந்தியப் பழங்குடியினர், ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர், தமிழகத்து உதகமண்டலத்துத் கோத்தர் பழங்குடியினர் வரை, மரபு வழிபட்ட  சடங்குகளுக்குப் பயன்படுத்தும் நிலையில் புதிர்ப்பாதை உள்ளது போன்று வேறொரு சின்னத்தைக் கூறமுடியாது. ஒருவேளை ’ஸ்வஸ்திக் சின்னம்’ இதற்கு இணையாக இனம் மொழி, சமயம் கடந்த உலகலாவியப் பயன்பாட்டில் இருக்கும் சின்னமாகக் குறிப்பிடலாம். நமது இந்திய மரபில், வீடுகளில் அல்லது விழாக்காலக் கோலங்களில் இவ்வகைப் புதிர்ப்பாதைச் சின்னங்கள் தொன்றுதொட்டு இடம் பெற்றுவருவது நமது மரபில் இவை பெற்றிருந்த பண்டைய செல்வாக்கைக் காட்டுவதாக உள்ளது.

Story image

(இந்தியக் கோலத்தில் வட்டப் புதிர்ப்பாதை)

இச்சின்னங்களுக்கும் தொல்குடிகளுக்கும் உள்ள தொடர்புகள் அடிப்படையிலான ஆய்வுகள் உலகளவில்கூட இன்னும் நிகழ்த்தப்படவில்லை. இதன் தொன்மையான நிலை மற்றும் உலகலாவிய நிலை இவ்வகை ஆய்வுகளுக்குப் பெருந்தடைகளாக உள்ளன.    

இந்தியப் புதிர்ப்பாதைகள் குறித்து விரிவான ஆய்வுகள் இந்தியத் தரப்பிலிருந்தும், இந்தியச் சிந்தனை மரபு வழிபட்டும், இந்தியப் பண்பாட்டின் பின்புலத்திலும் ஆய்வுகள் நிகழ்த்தப்படவில்லை.

உலகப் புதிர்ப்பாதைகள் குறித்த விரிவான ஆய்வு W.H. மேத்யூஸ் அவர்களால் 1922-ம் ஆண்டில் நூலாக்கம் பெற்றது. பின்னர் ஹெர்மன் கெர்ன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், உலக புதிர்ப்பாதைச் சின்னங்கள் குறித்த தொகுப்பும் ஜெர்மன் மொழியில், 1982-ல் வெளியானது, இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2000-ம் ஆண்டில் வெளியானது. இவ்விரண்டும், உலகளாவிய புதிர்ப்பாதைகள் குறித்த சிறந்த ஆவணங்களாகவும், தகவல்களின் ஊற்றாகவும் விளங்கிவருகின்றன.

புதிர்ப்பாதைகளின் பொதுகுணங்கள்

ஒற்றைவழியும் தடைகளற்ற பாதையும் கொண்ட எளிய புதிர்ப்பாதை வடிவமாகட்டும், கிளைவழிகளையும் முடிவுற்ற பாதைகளையும் கொண்ட வடிவமாகட்டும், புதிர்ப்பாதைகள் “வட்டப் புதிர்ப்பாதை” மற்றும் “சதுரப் புதிர்ப்பாதை” இரு வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அண்மைக்காலத்தில், இவை பல்வேறு வகையில் விலங்கு மற்றும் சித்திரப் புதிர்களின் வடிவங்களில் அமைக்கப்படுவதைக் காணமுடிகிறது. வட்டப் புதிர்ப்பாதையானது “சக்கரவடிவம் என்றும் சுழல் வடிவம்” என்றும் குறிக்கப்பெறுகின்றன.

இவை பாறை ஓவியங்களாகவும், பாறைக்கீறல்களாகவும், கோவில் மற்றும் வழிபாட்டிடங்களில் தூண்களிலும், சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்களாகவும், கீறல்களாகவும், தரை ஓவியங்களாகவும், நாணயங்களில் முத்திரைகளாகவும், களிமண் தட்டுகளில் கீறல்களாகவும், ஊர் கூடும் பொது மண்டுகளில் பலவகைக் கற்களிலும், மண் மற்றும் பீங்கான் பாத்திரங்களில் ஓவியங்களாகவும், கீறல்களாலும் கிடைத்துள்ளன. மத்திய வரலாற்றுக் காலத்தில் இருந்து கோயில்களில், தேவாலங்களில், தியான மையங்களில் தரை ஓவியங்களாகவும், மொசைக் போன்ற அலங்கார தரைப் பதிப்புக்கற்கள் கொண்டுப்பாவப்பட்ட நிலையிலும் இவை கிடைத்துவருகின்றன.

கடந்த முப்பது-நாற்பது ஆண்டுகளாகப் புதிர்ப்பாதைகள் மீது பொதுத்தளத்தில் மக்களிடையே ஏற்பட்ட அதீத கவனம், ஈர்ப்பின் காரணமாக இவை பூங்காக்களில், விடுதிகளில் விளையாட்டுக் குணங்களுடன் மற்றும் கேளிக்கை நோக்கங்களுடன் அலங்காரத் தாவர வவகைகள் கொண்டு அமைக்கப்பட்டவைகளாகவும், காதணி, கழுத்தணி போன்ற அணிகலன்களாகவும், சட்டைப் பொத்தான்களில் பொறிக்கப்பட்டதாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

செம்மை வடிவம்

மூன்று முதல் பதினொன்று வரையிலான சுற்றுகள் கொண்டதாக புதிர்ப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுள் எழு சுற்றுகள் கொண்டது செம்மை வடிவமாகக் கருதப்படுகிறது. ஆதி நிலையில் இருந்தே ஏழு சுற்றுகள் கொண்ட புதிர்ப்பாதைச் சின்னங்கள் கிடைத்து வருகின்றன.

ஆவணப்படுத்தலும் புதிர்ப்பாதை வகைகளும்

புதிர்ப்பாதைகளின் பயன்பாடு பன்முகத்தன்மையானது என்று முன்னர் விளக்கப்பட்டது. புதிர்ப்பாதை வடிவத்தை நினைவில் கொண்டால், இந்நாள் வரை அறியபட்டவைகளில் இருந்து புதிர்ப்பாதைகள் தனித்தனியான மூன்றுவிதமான பண்புகளுடன் வெளிப்பட்டிருப்பதை ஆவணப்படுத்திக்கொள்ள முடிகிறது. அவை - 1. இலக்கியக் காட்சி வகை (பெரும்பான்மையாக கிளைவழிகளையும் முடிவுற்ற பாதைகளையும் கொண்ட வடிவம்), 2. வரையுருவக்கலை வகை, 3. பயிற்சி கள வகை.

1. இலக்கியக் காட்சி வகை  

புதிர்ப்பாதை குறித்த மிகப் பழமைவாய்ந்த இலக்கியக் காட்சி வகைச் சித்தரிப்பு, ஹோமரின் இலியத் (Iliad) காவியத்தில் இடம்பெறுகிறது. கிரேக்கத்தின் வரலாற்று ஆசிரியன் ஹிராடோடஸ் மு.பொ.ஆ.500 அளவில் எகிப்தில் தாம் கண்ட புதிர்ப்பாதை கொண்ட கட்டட அமைப்பு ஒன்றை விவரிப்பதிலும் இடம்பெற்றுள்ளது. தற்காலத்தில் விர்ஜில், தாந்தோ, சாசர் முதல் நவீன இலக்கியவாதிகள் பலராலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புராணங்களின் தொன்மைக்காலத்தில் இருந்தே புதிர்ப்பாதைகள் அறியப்பட்ட சின்னமாக விளங்கியிருக்கின்றன. நசிகேசன், யமனை சந்திக்கச் செல்லும் நிகழ்ச்சி புதிர்ப்பாதையின் சித்தரிப்பு கொண்டதாகும். புகழ்பெற்ற இதிகாச உதாரணம், மகாபாரதப் போரின் பதின்மூன்றாம் நாள், துரோணர் அமைத்த சக்கர வியூகப் புதிர்ப்பாதையில் அபிமன்யு சிக்கி வெளியேற முடியாது மாயும் காட்சியின் சித்தரிப்பு ஆகும். ராமாயணத்தில், சீதையை ராவணன் சிறைவைத்த, யாரும் எளிதில் ஊடுருவமுடியாத கோட்டையின் அமைப்பு பற்றி விவரிப்பது ஒரு புதிர்ப்பாதையே என்பார் அல்புரூணி அவர்கள்.

2. வரையுருவக்கலை வகை

இந்தியாவில் கோவாவில் செங்கும் வட்டத்தில் பன்சாய்மோல் என்ற இடத்தில் ஆற்றின் படுக்கைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு சுற்றுவட்டப் புதிர்ப்பாதை ‘பாறைக்கீறல்’ வகையைச் சார்ந்தது. இதன் காலம் குறித்து அறிஞர்கள் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், மு.பொ.ஆ 2500-2000 (இன்றைக்கு 4500 - 4000) ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் கிடைக்கப்பெற்ற வரையுருவக்கலை புதிர்ப்பாதை வகையில் மிகவும் பழமைவாய்ந்தது.

Story image

(கோவா, பன்சாய்மோல் வட்டப் புதிர்ப்பாதை)

அடுத்ததாக கீரிட் தீவில் பைலோஸ் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயராலேயே அறியப்படும் களிமண் வில்லை மு.பொ.ஆ.1200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

Story image

(பைலோஸ் களிமண் வில்லை)

சிரியாவில் டெல் ரஃபியா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு சுற்று சதுரப் புதிர்ப்பாதை வரையப்பட்ட பானை ஓட்டின் காலம் மு.பொ.ஆ.1000 ஆகும்.

Story image

(சிரியா- டெல் ரஃபியா பானை ஓடு)

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் புதுகுளா என்ற இடத்தில் ஒரு பெருங் கற்கால கல்பதுக்கை வகை நினைவுச் சின்னத்தில் செதுக்கப்பட்ட வட்டப் புதிர்ப்பாதையின் காலம் மு.பொ.ஆ 1000 ஆகும்.

Story image

(புதுகுளா- நீலகிரி பெருங் கற்கால வட்ட புதிர்ப்பாதை)

வடஇந்தியக் குகைகளில் பல புதிர்ப்பாதை ஓவியங்களைக் காணமுடிகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிக்லா என்ற இடத்தில் உள்ள ஓவியம் மு.பொ.ஆ. 250 ஆகும். போலவே குருக்ஷேத்திரத்தில் உள்ள காளி கோயிலில் தரையில் வரையப்பட்டுள்ள சதுரப் புதிர்ப்பாதை (இது பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது) ஓவிய வரையுருவக்கலை வகையில் குறிப்பிடத்தகுந்தது. பாண்டவர்களோடு தொடர்புபடுத்தப்படும் இக்காளிக் கோயிலில், யுத்த களத்துக்குச் செல்லும்முன் பாண்டவர்கள் வணங்கியும், புதிர்ப்பாதையை அறிந்தும் செயல்பட்டனர் என்ற நம்பிக்கை வழக்கு உள்ளது.

Story image

(குருக்ஷேத்திரம், காளி கோவில் – சதுர புதிர்ப்பாதை ஓவியம்)

ஆந்திரப் பிரதேசத்தில் உண்டவல்லி குகைக்கோயிலில் சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏழு சுற்று வட்டப் புதிர்ப்பாதை பொ.நூ. 6-7 அளவினதாகக் கோயில் கட்டப்பட்ட காலம் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

Story image

(உண்டவல்லி குகைக்கோயில் வட்டப் புதிர்ப்பாதை)

கர்நாடகாவில் அளேபீடு என்ற இடத்தில் போசளர் மன்னர்களால் கட்டப்பட்ட ஹெய்சலேசுவரர் மற்றும் கேதேசுவரர் கோயில்கள் ஒவ்வொன்றிலும் மகாபாரத சக்கரவியூகப் போர்ப் புதிர்ப்பாதையில் அபிமன்யு வதம் மிக நுட்பமாக செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. இவை பொ. நூ. 12-13-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இவற்றில் ஐந்து சுற்றுகளே இடம்பெற்றுள்ளன.

Story image

(அளேபீடு – சக்கரவியூகம் - அபிமன்யூ வதம்)  

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தர் பழங்குடி மக்களின் குடியிருப்புகளான கூடலூர் கோக்கல் குடியிருப்பில் 4, சோளூர் குடியிருப்பில் 3 மற்றும் திரிசிகடை குடியிருப்பில் 5 எண்ணிக்கையில் உள்ள சுகார் 15-20 செ.மீ. அளவில் உள்ள சிறிய வட்டப் புதிர்ப்பாதைகள் அறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பாறைகளில், பலகைக் கற்களில், ஊர் கூடும் இடங்களில், புலியாட்டம் விளையாடும் பலகைகளில் என பலவகையாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை பொ.நூ. 14-க்குப் பிற்பட்டவை என கணிக்கப்பட்டுள்ளன.

(அடுத்தவாரம், வளமைச் சின்ன புதிர்ப்பாதை பகுதி தொடரும்)             

***

பார்வை நூல்கள்

W.H. Mattews, Maze and Labyrinths Their History and Development. Dover, (reprint) 1985 

Hermann Kern, Through the Labyrinth, Prestel, London, 2002.

Baring, Anne & Cashford,Jules, The Myth of the Goddess: Evolution of an Image, Penguine Arkanna, 1993.

Doob, Penelope Reed, The Idea of the Labyrinths, Cornell University Press, 1990.

Virginia Westbury, Labyrinths, Ancient Paths of Wisdom and Pease.

Caerdroia: The Journal of Mazes and Labyrinths.            

த.பார்த்திபன். ‘கம்பைநல்லூர் புதிர்ப்பாதை’ கட்டுரை, நீதிக்கண்ணாடி இதழ், மலர்-1, இதழ்-1, நவம்பர்-2014, பக்.3-9.

த.பார்த்திபன். ‘கம்பைநல்லூர் புதிர்ப்பாதை’ கட்டுரை, நீதிக்கண்ணாடி இதழ், மலர்-1, இதழ்-2, நவம்பர்16-22, 2014, பக்.3-9.

சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், எண்-44, சூலை-ஆக-செப்-2014.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.