வரலாற்றுக்காலத்தின் இலக்கியங்களும் வரலாற்று நூல்களும் வழங்காத மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்றவர்கள் இவ்வீரர்கள்; வணங்கப்படும் தெய்வங்களாகக் கல்லில் இவர்கள் உறைந்துள்ளனர். இவர்களின் இயற்பெயர்களை நினைவுகூர்வோர் இக்காலத்தில் எவருமிலர். இவர்களுக்குத் தற்காலத்தில் சில பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பொதுப்பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம். “வேடியப்பன், கரி வேடியப்பன் / கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயானாரப்பன், ஐயனார், கிருஷ்ணாரப்பன், மீனாரப்பன், சன்யாசியப்பன், ஆஞ்சநேயர் கல், சித்தப்ப சாமி, வீரபத்திரசாமி, சாணாரப்பன்” என்பவை சில. “மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஊமை வேடியப்பன், இரட்டை வேடியப்பன், ஓட்டை வேடியப்பன்” என சில பட்டப்பெயர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. சில, அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேடு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் வீரன் என்பதுடன் தொடர்புடையனவாக உள்ளதைப் பெயராய்வு வெளிப்படுத்துகிறது. (பெயராய்வு பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்)