தென்னிந்தியாவில் பெருங் கற்காலப் பண்பாடு பொ.ஆ. 200 அளவில் முடிவுக்கு வந்தமை நிறுவப்பட்டுள்ளது. பெருங் கற்காலப் பண்பாட்டுக்குப் பிறகு மூத்தோர் நினைவுச் சின்னங்கள் நடுகற்களாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை சங்க இலக்கியச் சான்று கொண்டும் நிறுவப்பட்டுள்ளது. (இராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், (2004), பக்.8-42). இந்நாள் வரை கிடைக்கப்பெற்ற சான்றுகள் கொண்டு, நடுகல் பண்பாடு மு.பொ.ஆ. 400 அளவில் தோற்றம் கொண்டுள்ளது. (இராஜன்.கா. ‘புலிமான்கோம்பை சங்க கால நடுகற்கள்’, ஆவணம், எண்:17 (2006), பக்.1-5). இக்காலகட்டத்தில் வளர்ச்சியுற்ற நடுகல் பண்பாடு, பொ.ஆ. 200 அளவில் பெருங் கற்காலப் பண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. அதாவது, இக்காலகட்டத்துக்குப் பிறகு பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்வட்டம், கல்திட்டை, கல்பதுக்கை வகை ஈமச்சின்னங்களை எழுப்பும் மரபு நீங்கிவிடுகிறது.