அன்று ஜெயலலலிதாவுக்கு ஒரு 'க்ளோசப்' ஷாட்; முதல் டேக் எடுத்து இரண்டாவது டேக் கூட எடுக்கவில்லை.அப்போது திபு திபு என்று, 'ஆய் ஊய்' என்று ஆவேச கூச்சல் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஐநூறு பேர் கைகளில் தடி,கம்பு , அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் வெறிபிடித்தவர்களைப் போல, 'எங்கே அவள்? 'எங்கே அவள்? சும்மா விடக்கூடாது அவளை! பிடியுங்கள், பிடியுங்கள்!என்று ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.படப்பிடிப்பு நடக்கும் ப்ளோருக்குள் நுழைந்து அப்போது ஜெயலலிதாவை நோக்கி வந்தவர்களை தடுத்து நிறுத்திய டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்களை நோக்கி , ' என்ன சமாச்சாரம்? ஏன் இப்படி கலாட்டா பண்றீங்க? என்று கேட்டார். அதற்கு அவர்கள் , 'இவள் (ஜெயலலிதா) தமிழ்நாட்டைச் சேர்ந்தவள், கன்னடம் தாய்மொழி இல்லை என்றும் சொல்லி இருக்கிறாள். அப்படி சொல்கிறவள் இங்கு இருக்கக் கூடாது. இல்லேன்னா மன்னிப்பு கேட்டுட்டு சொன்னதை மரியாதையா வாபஸ் வாங்கிக்கணும்' என்றார்கள்.