இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

33. துன்புறுத்தாமையே மாபெரும் அறம்

உலக உயிர்கள் அனைத்தின் நாட்டமும் இன்பமாக இருக்கின்றபோதிலும், துன்பமே வாழ்வின் சாராம்சமாக இருப்பது இயற்கையின் நியதி. ஆகையால்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

பத்மன்

உலக உயிர்கள் அனைத்தின் நாட்டமும் இன்பமாக இருக்கின்றபோதிலும், துன்பமே வாழ்வின் சாராம்சமாக இருப்பது இயற்கையின் நியதி. ஆகையால், இன்பத்தின் முதல் படி, துன்பத்தைத் தவிர்த்தல். இது தனக்கு மட்டுமல்ல, பிறருக்கும், பிறவற்றுக்கும்கூட என்று நினைப்பது மிகவும் பண்பட்ட கருத்து. அத்தகு உயர்ந்த பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதுதான் ஜைனம். மித்தி மே ஸவ்வ பூயேஸூ’ (அனைத்து உயிர்களிடமும் எனக்கு நட்புறவு உள்ளது) என்பது ஜைன தீர்த்தங்கரர் மகாவீரரின் வாக்கு. ‘வாழு, வாழ விடு’ என்பதே ஜைனத்தின் தாரக மந்திரம்.

‘அஹிம்ஸா பரமோ தர்ம’ என்று வேதத்திலே கூறப்பட்டுள்ளபோதிலும், சில வேள்விச் சடங்குகளில் உயிர்ப்பலி இருந்திருக்கிறது. கொல்லாமையை பௌத்தம் வலியுறுத்துகின்றபோதிலும், மாமிச உணவு புசிக்காமல் இருப்பதை அந்த அளவுக்கு வலியுறுத்தவில்லை. உணவுத் தேவைக்காக, பிறர் கொன்று தந்த மாமிச உணவை புத்தரே மறுதலிக்கவில்லை. ஆனால், கொல்லாமையை மிக உறுதியாகக் கடைப்பிடிப்பதுடன், சக மனிதர்கள், மிருகங்கள், புழு-பூச்சிகள் மற்றும் தாவரங்களுக்கும்கூட தமது சுயநலத்துக்காக சிறு துன்பமும் தந்துவிடக்கூடாது என்பதை அதே அளவுக்கு உறுதியுடன் கடைப்பிடிப்பதை வலியுறுத்தும் ஒரே மதம், தத்துவம் சமணம் எனப்படும் ஜைனம் மாத்திரமே.

ஜைன மதத்தைப் பின்பற்றுபவர் எவருமே புலால் உண்பதில்லை. இவர்களில் கடும் விரதம் பூண்டவர்கள், தன்னை அறியாமல்கூட நுண்ணுயிர்களைத் தின்றுவிடக்கூடாது என்பதற்காக, சூரிய வெளிச்சம் இல்லாத மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்பதுமில்லை. வேரோடு பிடுங்கப்படுவதால் வெங்காயம், பூண்டு போன்ற தாவரங்களைக்கூட இவர்கள் உண்பதில்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் நேரக்கூடாது என்பதற்காகத் தன்னையே வருத்திக்கொள்ளத் தயங்காதவர்கள் சமணர்கள். சமண திகம்பர தீட்சை பெறுவோர், தங்களது தலைமுடிகளில் உள்ள பேன் உள்ளிட்ட நுண்ணுயிர்களுக்குத் துன்பம் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, முடியை வெட்டாமல், கைகளாலேயே பிடுங்கி எறிந்துவிடுவார்கள். ஜைன திகம்பரத் துறவிகள் நடந்து செல்லும்போது, வழியில் நுண்ணுயிர்கள் மிதிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் செல்லும் வழியை சீடர்கள், மயிலிறகு துடைப்பத்தால் மென்மையாக துப்புரவு செய்வது வழக்கம்.

‘ஜின’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து ஜைன என்ற சொல் பிறந்தது. ஜின என்றால் வெற்றி என்று பொருள். இந்த வெற்றி பிறரை வென்று அடைவதல்ல; ஒருவர் தன்னைத் தானே வென்று எட்டுவது. வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி, தன்னை, தனது சுயநலத்தை, தனது மனத்தின் எண்ணங்களை வென்று அடக்குவதுதான். அப்படிப்பட்ட மாபெரும் வெற்றி பெற்றவர்களே ஜைனர்கள்.

Story image

ஜோஸஹஸ்ஸம் ஸஹஸ்ஸாணம், ஸங்கமே துஜ்ஜயே ஜியே
ஏகம் ஜிணேஜ்ஜ அப்பாணம், ஏஸ ஸே பரமோ ஜஓ

என்று மகாவீரர் மொழிந்திருப்பதாக, ஜைன மத நூலாகிய உத்தராத்யயனம் தெரிவிக்கிறது.

இதன் பொருள்: ‘கொடிய பெரும் போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை எதிர்த்து நின்று வெல்வதைக் காட்டிலும், தனது ஆன்மாவை வெல்வதே சிறந்த வெற்றியாகும்’ என்பதே. ஆக, ஜைன மதத்துக்கு சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், தவம் ஆகிய அற நெறிகளே அடிப்படை.

சமணம் என்ற சொல் சிரமணம் என்ற சொல் மருவி உருவானது. பொதுவாக, பௌத்தர்கள், ஜைனர்கள், அஜீவகர்கள் ஆகிய பிராமணர் அல்லாத தத்துவப் பிரிவினர்கள் அனைவருமே சிரமணர்கள் எனப்பட்டனர். இருப்பினும், சிரமணர் அல்லது சமணர் என்ற சொல், சிறப்பாக ஜைனர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதால் இது தமிழில் சமண மதம் என்றும் பெயர் பெற்றது.

வரலாற்று ரீதியில், கௌதம புத்தரின் சம காலத்தவரான வர்த்தமான மகாவீரரே ஜைன மதத்தைத் தோற்றுவித்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும், மகாவீரர் ஜைன மதத்தின் 24-வது தீர்த்தங்கரர்தான் (ஆசார்யர்தான்). இதன் முதல் தீர்த்தங்கரர் ரிஷபர் என்று ஜைன இலக்கியங்கள் கூறுகின்றன. இவர்தான் ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் என்பதால், ஆதி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ரிஷபர், ரிக் வேத காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பற்றிய குறிப்புகள், ரிக் வேதத்தில் மட்டுமின்றி வான்மீகி ராமாயணத்திலும் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஜைன தத்துவத்தை ஒரு கட்டுக்கோப்பான மதமாக வார்த்தெடுத்த பெருமை, வர்த்தமான மகாவீரரையே சாரும்.

பண்டைய பாரதத்தில், முடியரசுகளுக்கு இணையாக சிறிய குடியரசுகளும் கோலோச்சிய காலம் உண்டு. அத்தகைய காலகட்டத்தில், குடியரசாகத் திகழ்ந்த வைசாலி நாட்டில் குந்த கிராமத்தில், ஞாத்ரு வம்சத்தவரும் காசியப கோத்திரத்தைச் சேர்ந்தவருமான சித்தார்த்தன் என்ற ஜனக்குழு அதிபதிக்கும் (சிற்றரசனைப் போன்றவர்), அவரது மனைவியான வசிஷ்ட கோத்திரத்தில் உதித்த திரிசலை என்பாருக்கும் மகனாக கி.மு. 599-ல் அவதரித்தவர் வர்த்தமானர். இவர் பிறந்த குந்த கிராமம், தற்போது பிகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஈஸாட் என்ற ஊராகும்.

மகாவீரர் காலத்துக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு 23-வது ஜைன தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்த வர்த்தமானருக்கு, யோகத்திலும், தவத்திலும் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. இதனால் தனது 30-வது வயதில் துறவறம் பூண்ட வர்த்தமானர், சுமார் 12 ஆண்டுகள் கடும் தவமும், யோக சாதனைகளும் புரிந்து கேவலக்ஞானம் (தன்னிகரற்ற ஞானம்) பெற்று, மகாவீரர் ஆனார். (துறவறம் பூணுவதற்கு முன்பு வர்த்தமானருக்கு யசோதை என்பாருடன் திருமணம் ஆகி, அவர்களுக்கு அனவத்யா (அயோஜ்யா என்றும் கூறப்படுவது உண்டு) என்ற மகள் பிறந்ததாக ஜைனர்களில் ஒரு பிரிவினரான ஸ்வேதாம்பரர்கள் கூறுகின்றபோதிலும், அவர் பிரம்மசாரியாகத்தான் துறவு மேற்கொண்டார் என திகம்பரர்கள் கருதுகின்றனர்).

கேவலக்ஞானம் பெற்றதும் சமண சங்கத்தை நிறுவிய மகாவீரர், கி.மு. 527-ல் மகா நிர்வாணம் (உயிர் பிரிதல்) அடையும்வரை, சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று, தாம் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். இவர் வாய்மொழியாகக் கூறிய நல்லுரைகளை, தலையாய சீடர்களான கணாதரர்கள் பிற்காலத்தில், பிராகிருத மொழியில் குறிப்பாக அர்த்த மாகதி எனப்படும் வட்டார மொழியில் எழுதித் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்ட பழைமையான நூல்கள் 46. இவற்றில் அங்க நூல்கள் 12, உபாங்க நூல்கள் 12, பிரகீரண நூல்கள் 10, சேத நூல்கள் 6, மூல சூத்திரங்கள் 4, சுதந்திர நூல்கள் 2 ஆகும். இந்த நூல்கள் அனைத்தையும் ஸ்வேதாம்பரர்கள் ஏற்றுக்கொள்ள, திகம்பரப் பிரிவினர் அந்த நூல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அத்தகு பழைய நூல்களில் இடம்பெற்றிருந்த கருத்துகளை உள்ளடக்கிய ஷட கண்டாகமம் என்பது திகம்பரர்களின் மிகவும் முக்கியமான, பழைமையான நூலாகும். ஷட பிராப்ருதம், அஷ்ட பிராப்ருதம், திரிவர்ணாசாரம், பிரவசனசாரம், சிராவக சாரம், ஆப்த மீமாம்சை, தத்துவார்த்த சூத்திரம், சர்வார்த்த சித்தி உள்ளிட்ட நூல்களும் முக்கிய நூல்களாக மதிக்கப்படுகின்றன.

திகம்பரர் என்றால் திக்கு. அதாவது திசையேயே அம்பரமாக, அதாவது ஆடையாக அணிந்தவர்கள் என்று பொருள். ஆகையால் இவர்கள் துணி உடுத்துவதில்லை. (சிவபெருமானுக்கும் திகம்பரர் என்று பெயர் உண்டு. பைரவர், பிக்ஷாடணர் ஆகிய ரூபங்களில் சிவன் ஆடையின்றி காட்சி தருகிறார்). துறவு என்பது தனக்கென எதுவும் சொந்தமாக வைத்துக்கொள்ளாமல், அனைத்துவிதமான பற்றுகளையும் கைவிடுவதே ஆகும். அந்தவகையில், உடுத்துவதற்கான துணிகூட ஒரு வகையிலான பற்று என்று கருதி, அதனையும் திகம்பரர்கள் துறந்துவிடுகிறார்கள். இப்போது திகம்பர சன்யாசிகள் மட்டுமே ஆடை உடுத்துவதில்லை; சாதாரண மக்கள் அணிந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் வாழும் ஜைனர்களில் பெரும்பாலானோர் திகம்பரர்களே. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நயினார் எனப்படும் திகம்பரர்கள் சென்னை, திண்டிவனம், வந்தவாசி, ஆரணி, காஞ்சி, விழுப்புரம் ஆகிய ஊர்களில் அதிகம் உள்ளனர்.

ஸ்வேதாம்பரர்கள் என்றால் வெள்ளை ஆடை அணிந்தவர்கள் என்று பெயர். வட மாநிலங்களில் வாழும் பெரும்பாலான ஜைனர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் தற்போது வசிக்கும் மார்வாடிகள் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த ஸ்வேதாம்பரப் பிரிவில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தானகவாசிகள் என்ற தனிப் பிரிவினர் உருவாகினர். அவர்கள் எந்தவகையிலும் உருவ வழிபாடு செய்வதில்லை. இதர ஸ்வேதாம்பரர்களும், திகம்பரர்களும் ரிஷபதேவர் முதல் மகாவீரர் வரையிலான தீர்த்தங்கரர்களையும், ருத்ரர், ஆதித்தர், இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட 63 சலாகா புருஷர்களையும் (நன்னெறி நாயகர்களையும்), யக்ஷர் – யக்ஷிணிகள் உள்ளிட்ட தேவ வடிவங்களையும் சிலை உருவில் வணங்குகின்றனர். ஹிந்துக் கோவில்களில் நடப்பதைப் போன்றே இந்த விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆனால் வணங்கப்படும் தீர்த்தங்கரர்களும், தெய்வ வடிவங்களும் எல்லாம் வல்ல ஆண்டவன் என்றோ கடவுளின் அவதாரங்கள் என்றோ ஜைனர்கள் கூறவில்லை. தீர்த்தங்கரர்கள் உள்ளிட்டோர் அவர்களது குணவிசேஷங்கள் காரணமாக மரியாதைக்கு உரியவர்கள் என்பதால் வணங்கப்படுகிறார்கள் என்பதே ஜைனர்களின் விளக்கம்.

தீர்த்தங்கரர் என்றால், சம்சார சாகரமாகிய கடலைக் கடந்து கரையேறியவர்கள் என்று பொருள். நாமும் கடைத்தேற, முக்தி பெற அவர்கள் வழிகாட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் உலகைப் படைத்து, காத்து, நமது வேண்டுதலால் முக்தியையும் தரக்கூடிய எல்லாம் வல்ல ஆண்டவன் என்ற கருத்தை ஜைனம் நிராகரிக்கிறது. இந்த உலகம் இயற்கையானது. இது தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை, நிலையானது. எனினும், இந்த உலகம் காலச் சுழற்சிக்கு உட்பட்டது. இந்தக் காலச் சுழற்சியை உத்ஸர்ப்பினி, அவஸர்ப்பினி என்று இரண்டாகப் பிரிக்கிறது ஜைனம். இந்த இரு அரை வட்டங்களும் தலா 6 அராக்களாக (கூறுகளாக) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கூறுகளும் பல்லாயிரம் வருடங்களைக் கொண்டவை. உத்ஸர்ப்பினி அரை வட்டத்தில் உலகம் மேன்மையை நோக்கிச் செல்லும். மக்களிடையே அறப் பண்புகள் மேலோங்கி நிற்கும். ஆனால், அவஸர்ப்பினி அரை வட்டத்தில் உலகம் கீழ்மையை நோக்கிச் செல்லும். மனிதர்கள் அறப்பண்புகளை விடுத்து, தீய பழக்கங்களை மேற்கொள்வர். அப்போது உலகை நல்வழிப்படுத்துவதற்காகவும், முக்தி லட்சியத்தை வலியுறுத்துவதற்காகவும் தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள். பின்னர் அவஸர்ப்பினி பருவம் கழிந்து, மீண்டும் உத்ஸர்ப்பினி பருவம் தோன்றும். இவ்வாறாக, காலம் சுழன்று வருகிறது.

இதேபோல் உயிர்கள் தங்களது கர்மங்களுக்கு (வினைகளுக்கு) ஏற்ப மீண்டும் பிறந்து, இறக்கும் பிறவிச் சுழற்சியை அடைகின்றன. மறு பிறவிகளுக்குக் காரணமாகும் வினைக் கோட்பாட்டை ஜைனம் மிகவும் வலியுறுத்துகிறது. இதுபற்றி ஜைன நூலாகிய சூத்ர கிருதாங்கம் இவ்வாறு கூறுகிறது –

ஜமியம் ஜகயி புடோ ஜகா, கம்மேஹிம் லுப்பந்தி பாணினோ
ஸமமேவ கடேஹிம் காஹயீ, ணோ தஸ்ஸா முச்சேஜ்ஜ ()புட்டப

இந்த ஸ்லோகத்தின் பொருள் – ‘இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் தங்களது முற்பிறவியில் சேர்த்த கர்மங்கள் காரணமாகவே சம்சாரத்தில் வந்து உழல்கின்றன. அவை, தாம் முன்பு செய்த கர்மங்களுக்குத் தக்கபடி பல்வேறு யோனிகள் வந்து பிறக்கின்றன. முன்பு செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தாலன்றி அந்த உயிர்களுக்கு முக்தி கிடைப்பதில்லை’.

ஒவ்வோர் உயிரும் தமது சொந்த முயற்சியாலும், அறக் கோட்பாடுகளின்படி வாழ்ந்தும், தங்களது கர்ம வினைகளை அறுத்தெறிந்து, விடுதலை (முக்தி) பெற முடியும். இந்தக் காலச் சுழற்சியும், பிறவிச் சுழற்சியும், முக்தி பெறுவதற்கான முயற்சியும் இயல்பானவை என்கிறது ஜைனம். இதற்கு ஸ்வபாவவாதம் (இயல்புக் கோட்பாடு) என்று பெயர்.

உலகின் தோற்றம், வாழ்க்கை, முக்தி குறித்து சமணம் கூறும் இதர கோட்பாடுகள், முக்கியத் தத்துவங்கள் குறித்து அடுத்த வாரம் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.