1. நம்பிக்கை தாண்டிய உண்மை
ரத்தம் செத்தவன் தத்துவம் பேசுவான் என்றொரு சொலவடை உண்டு. ரத்தம் சுண்டிப்போன வயதான நபர்களின் அங்கலாய்ப்புதான் தத்துவம் என்பதான பொருளில் இந்தச் சொலவடை உருவாகியிருக்கிறது. இது மிகவும் தவறான கருத்து.


ரத்தம் செத்தவன் தத்துவம் பேசுவான் என்றொரு சொலவடை உண்டு. ரத்தம் சுண்டிப்போன வயதான நபர்களின் அங்கலாய்ப்புதான் தத்துவம் என்பதான பொருளில் இந்தச் சொலவடை உருவாகியிருக்கிறது. இது மிகவும் தவறான கருத்து.
ரத்தம் சுண்டிப்போனவர்களின் கையாலாகாத போதனைகள் அல்ல தத்துவம். வேறுசிலர் நினைப்பதைப்போல, ரத்தத்தைச் சூடாக்கி ரணகளப்படுத்தும் தந்திர உபாயங்களும் அல்ல தத்துவம். ரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளே தத்துவம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவைக்கும் அதிஅற்புதச் சாதனமே தத்துவம்.
தத்துவம் என்பதன் பொருள், ‘தத்’ ‘துவம்’ என்று பிரித்து நோக்கினால் அதன் தன்மை என்பதாகும். தத் என்றால் அது என்று பொருள். துவம் என்பது தன்மை என்பதைக் குறிக்கும் பின்னொட்டு. அதனுடைய தன்மை, அதாவது இந்த உலகின் தன்மை, இதில் வாழுகின்ற வாழ்க்கையின் தன்மை, அதை அனுபவிக்கின்ற நான் என்பதன் தன்மை ஆகிய அனைத்து அதுக்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்த கோட்பாடுகளே தத்துவம்.
இதே தத் துவம் என்பதற்கு வேறு வகையிலும் பொருள் காட்டப்படுகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். ஆக, அதுவே நீ என்று அர்த்தம். இதில் இருந்துதான் வேத மகாவாக்கியமாகிய தத்வமஸீ – ‘நீயே அதுவாக இருக்கிறாய்’ – உருவானது. ஒவ்வொரு நானும் இங்கே நீ என்று சுட்டப்படுகிறது.

நீ எதுவாக இருக்கிறாய்? ‘இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சக்தி எதுவோ, அதுவாகவே அதன் பகுதியாகவே நீ இருக்கிறாய்’ என்பது இதன் பொருள். ‘அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் காண்பாய்’ என்பது முன்னோர் வாக்கு. இந்தப் பேரண்டத்தின் தன்மை, அது இயற்கையோ, இறைவனோ அதன் சாரம், இதில் உருவாகியுள்ள அனைத்து வஸ்துக்களிலும் உள்ளது. நவீன விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது.
அனைத்து வஸ்துக்களிலும் உள்ள அது, நமக்குள்ளும் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. நம்மில் இருந்து வெளியிலும் இருக்கிறது. அந்த அது எது அதைப் பற்றிய நமது முன்னோர்களின், முனிவர்களின், சித்தர்களின், ஞானிகளின் ஆய்வுகளில் விளைந்தவையே தத்துவங்கள்.
இந்த உலகில் மிகப்பெரிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உண்மை, மற்றொன்று நம்பிக்கை. உண்மை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்படுவது. அது நிரந்தரமானது, மாறுபாடு இல்லாதது. நம்பிக்கை என்பது ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் நாம் ஏற்றுக்கொள்வது. அது நிரந்தரமற்றது, மாறுபடக்கூடியது.
ஆனால் விசித்திரம். மாறுபடக்கூடிய நம்பிக்கையில் நாம் விடாப்பிடியான உறுதி காட்டுகிறோம். மாற்றம் இல்லாத உண்மையோ, பல மாறுபாடுகளோடு நம் முன் காட்சி தருகிறது. ரயிலில் நாம் வேகமாகப் பயணம் செய்யும்போது, ஜன்னல் வழியே பார்த்தால், வெளிப்புறத்தில் நிலையாக நிற்கும் மரங்களும், கட்டடங்களும் வேகமாகப் பின்னோக்கிச் செல்லும். வேகமாக முன்செல்லும் ரயிலோ ஒரே இடத்தில் நிலையாக நிற்பதுபோல் தோன்றும்.
இது தோற்ற மயக்கம். இந்தத் தோற்ற மயக்கத்தை நாம் உண்மை என்று கொள்வோமோ? இல்லையே! அதுபோல்தான், உண்மையை ஆராயப் புகும்போது பல தோற்ற மயக்கங்கள் தோன்றுகின்றன. இந்த மயக்கங்களை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே தரிசனம். கண்களுக்குத் தென்படும் காட்சிகளை நம்புவதல்ல தரிசனம், காட்சிகளைக் கடந்து அதன் உட்பொருளை உய்த்துணர்வதே தரிசனம்.
நமது பாரத தேசத்தின் ஆன்றோர்கள், வெறும் நம்பிக்கையின் பாற்பட்டு தத்துவங்களைத் தரிசிக்கவில்லை. உண்மையை உய்த்துணர்ந்தே உரைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு மதங்கள், தத்துவங்களைப்போல, “இதைத்தான் நீ நம்ப வேண்டும், இதுமட்டுமே உண்மை, பெரியவர் ஒருவர் சொல்லிச் சென்ற கருத்தில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை” போன்ற சர்வாதிகாரம், வறட்டுப் பிடிவாதத்துக்கு அவர்கள் இடம் தரவில்லை. மாறாக, மாறுபடு அனுபவங்கள், மாறுபடு கோணங்கள் உள்ளிட்டவற்றால், ஒற்றை உண்மையே பல்வேறு மாற்று வடிவங்களில் காட்சி தருவதை அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்கள்.
ஏனெனில், உண்மை ஒன்றாக இருந்தபோதிலும் அதன் தோற்றங்கள், அதனைப் பற்றிய புரிந்துகொள்ளல்கள் வேறானவை. உதாரணத்துக்கு, ஒரு மனிதர் அவருடைய பெற்றோருக்கு மகன், மனைவிக்கு கணவன், பிள்ளைகளுக்குத் தகப்பன், ஆசிரியருக்கு மாணவன், மேலதிகாரிக்கு ஊழியன், சக ஊழியர்களுக்கு நண்பன், பிடிக்காதவர்களுக்கு எதிரி என்று பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி நிற்கிறார். இதில் ஏதேனும் ஒன்று மட்டுந்தான் உண்மை என்று கொள்ள முடியுமா? இவை அனைத்தும் அந்த ஒற்றை மனிதரின் பல்வேறு தோற்றங்கள்தானே! இதைப்போல்தான் உண்மையும், பல்வேறு தோற்றங்களில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்கட்டும். வேறு ஓர் உதாரணத்தைக் காண்போம். ஒருவர் நடுவீதியில் விழுந்து மயங்கிக் கிடக்கிறார். அவர் பசியில் மயங்கிக் கிடப்பதாக ஒருவர் நினைக்கிறார். வேறு ஒருவர், அவரை யாரோ அடித்துப் போட்டுவிட்டுச் சென்றிருப்பதாக எண்ணுகிறார். மற்றொருவர், அவர் குடித்துவிட்டு விழுந்து கிடப்பதாகக் கருதுகிறார். யாரும் அருகில் சென்று பார்க்க இயலாத சூழ்நிலை. அத்தகு சூழ்நிலையில் யாருடைய எண்ணம், கருத்து அல்லது நம்பிக்கை உண்மையானது. உறுதிப்படுத்தப்படும்வரை எல்லாவற்றுக்குமே வாய்ப்புள்ளது. இந்தச் சிறிய விஷயத்தில் உண்மையை அறிவதற்கே பல்வேறு ஊகங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் சம வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், பேருண்மையை அறிவதற்கு அதனை மறுதலிக்க முடியுமா?
ஆக, உண்மை ஒன்றுதான் என்றபோதிலும், அது எல்லாவித நம்பிக்கைகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கிறது. எனவே, நம்முடைய கருத்தில் நாம் உறுதியாக இருந்தாலும், மாற்றுக் கருத்து உடையவரின் கருத்தையும் நாம் மதித்தாக வேண்டும். ஏனெனில், உள்ளது உள்ளபடி உண்மை இதுவரை முழுமையாக விளங்கிக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அதனால்தான் நமது முன்னோர்கள், ‘ஏகம் சத், விப்ரா பஹுதா வதந்தி’ என்றார்கள். அதாவது “உண்மை ஒன்றுதான், அறிஞர்கள் அதனைப் பலவிதங்களில் சொல்கிறார்கள்” என்றனர்.
ஒற்றை உண்மையை அவரவர் கண்ணோடத்தில், அவரவர் அனுபவத்துக்குத் தகுந்தபடி உரைக்கிறார்கள் என்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் சம வாய்ப்பு, சம மதிப்பு தந்து ஏற்றுக்கொண்டனர் பாரதத்தின் சான்றோர்கள். நமது முன்னோர்களின் இந்தப் பண்பட்ட எண்ணம்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான தத்துவத்தை உலகுக்குத் தந்தது. தத்துவப் பெருக்கங்கள் இங்கே தழைத்தோங்கியதற்கு அதுவே காரணம்.
வெளிநாட்டு அறிஞர்களைப்போல, பாரதத்தின் முனிவர்களும் யோகிகளும் இதுதான், இதுதான் என்று தாங்கள் கண்டறிந்த உண்மையின் ஒரு துளியை வைத்துக்கொண்டு திருப்திப்படவில்லை, பிறருக்கு வலியுறுத்தவில்லை. மாறாக, ந இதி எனப்படும் நேதி, நேதி (அதாவது இதுவன்று இதுவன்று) என்று தேடலை விரிவுபடுத்தி, மெய்ஞான ஆய்வை மென்மேலும் விரித்துக்கொண்டே சென்றார்கள். இது அவநம்பிக்கை அல்ல. நம்பிக்கைச் சிறைக்குள் சிக்கிக்கொள்ளாமல் உண்மையை தரிசிப்பதற்கான முயற்சி, தவம்.
மாற்றுக் கருத்துகளைப் பேசக்கூடாது என்று நம் முன்னோர்கள் தடை செய்யவில்லை. மாறாக, விவாதித்தார்கள். விவாதத்தில் வெற்றிபெற்ற தத்துவம் அதற்குரிய காலம் வரை கோலோச்சியது. அதற்குப்பின் மாற்றுத் தத்துவம் மேலோங்கியபோது, தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு மேம்படுத்திக்கொண்டது. புதிய பொலிவுடன் போட்டியைத் தொடர்ந்தது.
இந்தியாவில் தோன்றிய எந்தவொரு தத்துவமும், போதிய ஆதரவாளர்களின்றி நசிந்துபோயிருக்கலாம், திரிந்துபோயிருக்கலாம். ஆனால், முற்றிலுமாக அழிந்துபோய்விடவில்லை. கண்டிப்பாக, அழிக்கப்படவும் இல்லை.
ஆகையால்தான்,
கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்;
பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்;
ஆன்மா உண்டு, ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்;
ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலை போதிக்கும் பௌத்தம்;
பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம்;
அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம்;
காரண – காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம்;
உடல் - மனக் கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம்;
வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை;
தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம், அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்;
இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு, சிவமே பரம் என்றுகூறும் சித்தாந்த சைவம்;
சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்;
மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்;
வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்;
பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்மஞான சபை, ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம்
என பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் பல்கிப் பெருகின, பெருகி வருகின்றன.
இதுபோன்ற தத்துவங்களை ஒவ்வொன்றாகக் காண்போம். இதில் முதலாவதாக, நாத்திக தரிசனத்தை அடுத்த வாரம் காண்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...