அதே போல, சச்சின் தான் பந்து வீசுகின்ற தருணங்களில், தோனியின் கருத்துகளை கேட்பார். மைதானத்தின் தன்மை மற்றும் களத்தில் நின்றிருக்கும் பேட்ஸ்மேனின் அப்போதைய மனநிலை முதலியவற்றை கணக்கில் கொண்டு, சச்சினுக்கு தன்னால் இயன்ற வகையிலான ஆலோசனையை வழங்குவார் தோனி. பிற்காலத்தில், டிராவிட் இந்திய அணியின் தலைமையில் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்த போது, உடனடியாக அடுத்த தேர்வாக இருந்த ஒரு விளையாட்டாளர் சச்சின் மட்டும்தான். ஏனெனில், அவரளவுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேறு யாரும் அணியில் இல்லை. ஆனால், சச்சின் தனது ஆட்டத்தின் போக்கை கேப்டன் பொறுப்பு பாதிக்கிறது என்று சொல்லி, தோனியின் பெயரை சிபாரிசு செய்தார். எந்தவொரு கிரிக்கெட் வீரரின் மீது சிறு வயதில் தோனி பெரும் வியப்பு கொண்டிருந்தாரோ அதே சச்சின் இன்றைக்கு தோனியை இந்திய அணியின் கேட்பன் பொறுப்புக்கு முன்மொழிகின்றவராக மாறியிருந்தார்.