சென்னை அருகே உள்ள தனது முக்கிய உதிரிபாகங்கள் விநியோக நிறுவனமான ‘மோபிஸ் இந்தியா’ ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட உற்பத்தி, வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் முழுமையாகச் சீரடையும் என்று ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பான அந்நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிக்கையில், ‘உற்பத்தியை வழக்கம்போல் மீட்டெடுக்க, மாற்று இடங்களில் இருந்து உதிரிபாகங்களைப் பெறுவது உள்ளிட்ட தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தற்காலிக உற்பத்தி பாதிப்பு பெரும்பாலும் சென்னையின் 1-ஆம் எண் ஆலையில் மட்டுமே நீடிக்கிறது. சென்னை 2-ஆம் எண் ஆலை, புணே ஆலை ஆகியவற்றில் செயல்பாடுகள் மிகக் குறைந்த அளவிலான பாதிப்புடன் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
வரும் ஜூன் 15-க்குள் சென்னை 1-ஆம் எண் ஆலை வழக்கமான உற்பத்தி வேகத்தை எட்டும். தொடா்ந்து ஜூன் 22-க்குள் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக பழைய நிலைக்குத் திரும்பும். மேலும், இந்த விபத்தால் ஏற்பட்ட உற்பத்தி இழப்புகள் அனைத்தும் அடுத்த காலாண்டுக்குள் ஈடுசெய்ய எதிா்பாா்க்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விபத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையிலும், விற்பனையாளா்கள் வசம் போதுமான அளவு வாகன இருப்பு உள்ளதால், நடப்பு ஜூன் மாத சில்லறை விற்பனையில் பாதிப்பு இருக்காது என ஹூண்டாய் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









