முடங்கிய முட்டை விற்பனை
கரோனா பீதியால் முட்டை விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தள்ளது. பண்ணைகளில் தேங்கியுள்ள முட்டைகளை, தனியார் குளிர்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கான நடவடிக்கைகளை நாமக்கல் மண்டல கோழிப்


கரோனா பீதியால் முட்டை விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தள்ளது. பண்ணைகளில் தேங்கியுள்ள முட்டைகளை, தனியார் குளிர்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கான நடவடிக்கைகளை நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் கரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொழில் துறையிலும் பிற துறைகளிலும் கடும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, முட்டை விற்பனை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் 23 மண்டலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் மூலம், நாள்தோறும் சுமார் 90 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
தமிழகம், புதுச்சேரி, கேரளத்தை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில், 1,100 கோழிப் பண்ணைகளில் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
கரோனா பாதிப்பு ஏற்படுவதாக, சமூக வலைதளங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து பரவிய வதந்திகளால், கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனையானது சரிவடைந்துள்ளது. ரூ.4.20-க்கு விற்பனையான ஒரு முட்டை, ஒரே மாதத்தில் ரூ.1.95-ஆக கீழிறங்கியது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ரூ.1.95 என விலை நிர்ணயித்தாலும், பண்ணையாளர்கள் இருப்பதை தேக்கி வைக்காமல் அவற்றை அனுப்பிவிடும் வகையில் ரூ.1-க்கு தற்போது விற்பனை செய்யும் நிலையே உள்ளது. இதுவரை வியாபாரிகள் நேரடியாக பண்ணைகளுக்கு சென்று முட்டை வாங்கிய நிலையில், கோழிப் பண்ணையாளர்களே, கிராமங்களிலும் நகரங்களிலும் வாகனங்களில் எடுத்துச் சென்று முட்டைகளை கூவிக் கூவி விற்கும் நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளனர்.
முட்டை விலை குறைந்தபோதும், மக்களிடையே அவற்றை வாங்க போதிய ஆர்வம் இல்லாததால், பண்ணைகளில் ஒரு வார முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தேங்கிய முட்டைகளைப் பாதுகாக்க, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு குளிர்பதனக் கிடங்குகளில் வைக்க மானியம் அறிவித்துள்ளது. ஒரு கோடி முட்டையை வைத்தால், 100 முட்டைக்கு ரூ.10 வீதம் மானியம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் பெரிய பண்ணையாளர்கள் அவற்றை குளிர்பதனக் கிடங்குகளில் வைக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால், 20, 30 லட்சம் எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்யும் சிறிய பண்ணையாளர்கள் தனியார் குளிர்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். தனியார் கிடங்குகளில் ஒரு முட்டைக்கு 20 காசுகள் வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவும் ஒரு மாதம் மட்டுமே முட்டைகள் குளிர்பதனக் கிடங்கில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் இருந்தால் கூடுதல் கட்டணம் அல்லது திரும்ப எடுத்துச் செல்லுதல் வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் விற்பனைக்குச் செல்லாமல் பண்ணையில் தேங்கும் முட்டைகளை கொண்டு வந்து வைக்கின்றனர்.
கரோனா வைரûஸ தடுக்கும் விதமாக மார்ச் 31-ஆம் தேதி வரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாலும், வேலைவாய்ப்பு குறைந்து மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளதாலும், பள்ளிகள் விடுமுறையால் சத்துணவுக்கு அனுப்ப வேண்டிய முட்டைகள் தேக்கமடைவதாலும் பெரும்பாலான பண்ணைகளில் முட்டை உற்பத்தியைக் குறைக்க கோழிகளுக்கு தீவனமிடுதலும் குஞ்சுகள் விடுதலும் நிறுத்தப்பட்டுள்ளன. 72 வாரம் கொண்ட முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக கொண்டு செல்வதும் தடைபட்டுள்ளது.
கேரளத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால், தமிழகத்தில் இருந்து முட்டைக் கோழிகளை அங்கு இறைச்சி விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. முட்டையைப் போல், கோழிகளையும் மிகவும் குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்பதால், பண்ணையாளர்கள் பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். முட்டை தேக்கம் ஒரு புறம், கோழி விற்பனையாகாதது மறுபுறம் என கோழிப் பண்ணைத் தொழில் மீண்டு வருவதற்கு வழியில்லாமல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் வள்ளிபுரத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணையாளர்கள் கூறியது: முட்டை விலை ரூ.1-க்கும் குறைவாகவே வியாபாரிகள் கேட்கின்றனர். வாகனங்களில் வைத்து ஊர், ஊராகச் சென்று விற்பனை செய்வதென்பது இயலாத காரியம். எல்லா பண்ணையாளர்களாலும் அதனைச் செய்ய முடியாது. சிறிய பண்ணைகளில் ஒரு வார முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பெரிய பண்ணைகளில், 3, 4 நாள் முட்டைகள் தேக்கமடைந்திருக்கின்றன. சத்துணவுக்கு அனுப்புவதும் நிறுத்தப்பட்டுவிட்டது.
கரோனா வைரஸ் பற்றிய அச்சம் முழுமையாக மக்களிடம் இருந்து மறைவதற்கு இன்னும் ஒரு மாதமாகி விடும். அதுவரையில் தேங்கிய முட்டைகளை வைத்து பார்த்துக் கொண்டிருப்பதைவிட, நஷ்டமடையாமல் தடுக்க குளிர்பதனக் கிடங்குகளில் வைக்கிறோம்.
முட்டையை விற்பனைக்கு அனுப்பும் வியாபாரிகள் வைத்திருக்கும் குளிர்பதனக் கிடங்குகளில் குறைந்தபட்சம் 30 லட்சம் முட்டைகளைத் தேக்கி வைக்க முடியும். எங்களைப் போன்ற சிறிய பண்ணையாளர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரையில் வைக்கிறோம்.
ஒரு முட்டைக்கு 20 காசுகள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு மாதம் மட்டும்தான் கால அவகாசம் வழங்கப்படும். அதற்கான பணிகள்தான் நடைபெற்று வருகின்றன. முட்டைக் கோழிகள் பெரும்பாலும், கேரளத்தில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு இறைச்சிக்காக அனுப்பப்படும். அதுவும் தற்போது சரிவர விற்பனைக்கு அனுப்பப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக கோழிப் பண்ணைத் தொழில் சரிவடைந்துள்ளது. வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடன்களை எவ்வாறு திரும்பச் செலுத்தப் போகிறோம் என்ற கவலைதான் தற்போது பண்ணையாளர்கள் அனைவரிடத்திலும் உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...