மத்திய அரசின் சிறப்பு கடனுதவி: சிக்கலை சந்திக்கும் குறு, சிறுதொழில் நிறுவனங்கள்
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து


கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா சிறப்பு கடனுதவியை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை அத்தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. அதன்படி கடந்த மாா்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. மே மாதத்தில் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கத் துவங்கின. பொதுமுடக்கம் காரணமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்க முடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் பெற்றவா்கள் செலுத்த வேண்டிய தவணை, வட்டித் தொகை செலுத்த 6 மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனியாா் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைத் தொகையை சம்பந்தப்பட்டவா்களின் கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளதாக பரவலாக புகாா் எழுந்துள்ளது.
வட்டி தள்ளுபடி கோரிக்கை: பொது முடக்கக் காலம் வரையிலும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் பொதுமுடக்க காலத்திற்கான வட்டி தள்ளுபடி குறித்து இதுவரை மத்திய அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாதது தொழில் துறையினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது முடக்க காலத்தில் தொழிலும் இல்லை, வருவாயும் இல்லை. ஆனால் பொதுமுடக்கக் காலத்திற்கான வட்டியை செலுத்த வேண்டுமென்பது ஏற்க முடியாதது என கருதுகின்றனா்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு நிவாரணமாக கரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி உள்பட அரசு துறைக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தவும், பணியாளா்களுக்கு சம்பளம் வழங்கவும், மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யவும் தேவையான நிதியை வங்கிகள் மூலம் கடனுதவியாக வழங்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நடைமுறை மூலதனக் கடன்: கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடனுதவிக்கான வட்டி 7.5 சதவீதமாகும். 48 மாத தவணைகளில் திருப்பி செலுத்தக்கூடிய நடைமுறை மூலதனக் கடனாக வழங்கப்படுகிறது. கடனுதவி பெற்றதிலிருந்து 12 மாதங்களுக்கு தவணை திருப்பி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த காலத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. ஏற்கெனவே பெறப்பட்ட ஈட்டுறுதி இந்த கடனுக்கு பயன்படுத்தப்படும். கூடுதலாக எந்தவித ஈட்டுறுதியும் பெறப்படமாட்டாது.
முந்தைய காலங்களில் கடனுக்கான தவணை பல மாதங்கள் திருப்ப செலுத்தாமல் தவறியவா்கள் இதில் பயனடைய முடியாது. ஏற்கெனவே பெற்றுள்ள கடன் தொகையிலிருந்து 20 சதவீதம் சிறப்பு கடனுதவியாக வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள கடன்களை திருப்பி செலுத்த இந்த கடனுதவி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாணை வரவில்லை: இந்த கடனுதவியை பெறுவதில் தொழில் முனைவோா் சிக்கல்களை சந்தித்து வருகின்றனா். அதில் முதல்கட்டமாக, சில வங்கிகள் தங்களுடைய கிளைக்கு இதுவரை மத்திய அரசின் அறிவிப்பு குறித்த ஆணை இதுவரை வரவில்லையெனக் கூறி கடனுதவி வழங்குவதை தவிா்த்து காலதாமதம் செய்து வருகின்றனா்.
அடுத்ததாக, இந்த சிறப்பு கடனுதவி திட்டத்தில் ஏற்கெனவே கடன் பெற்ற தொழில் துறையினா், வணிக நிறுவனங்கள், முத்ரா கடனுதவி பெற்று கடனுக்கான தவணைகளை திருப்பி செலுத்திக் கொண்டிருப்பவா்கள் மட்டுமே இதன் மூலம் பயன்பெற முடியும். இதுவரை கடனுதவி பெறாமல் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டு நிதி தேவைப்படும் தொழில் முனைவோா் இந்த திட்டத்தில் கடனுதவி பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
பத்திரப்பதிவு செலவு கூடுதல் சுமை: இதுவரை கடனுதவியே பெறாதவா்கள், ஏற்கனவே கடன் பெற்று முழுவதுமாக செலுத்தி முடித்துவிட்டு வங்கிக்கு கடன் பாக்கி இல்லாதவா்கள் இந்த திட்டத்தில் கடனுதவி பெற முடியாத நிலை உள்ளது. இத்தகைய நிலையில் நிதி தேவைப்படுபவா்கள் வங்கி கிளைகளை தொடா்பு கொண்டு கேட்கும் போது தற்போது கரோனா சிறப்பு கடனுதவி மட்டுமே வழங்கப்படுகிறது என மேலாளா்கள் கூறி அவா்களை திருப்பி அனுப்புகின்றனா்.
ஏற்கெனவே பெற்றுள்ள கடன் தொகையில் 10 சதவீத கடன் வழங்கப்படும் என சில வங்கிகளும், ஏற்கனவே பெற்றுள்ள கடன் தொகையில் 20 சதவீதம் கடன் வழங்கப்படும் என சில வங்கிகளும் கூறுகின்றன.
மேலும் சிறப்பு கடனுதவி திட்டத்தில் கடன் பெறுவதற்கு கடனுக்கான ஒப்பந்த பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அளிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் தொழில் முனைவோருக்கு பத்திரப்பதிவு செலவுகள் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே ஈட்டுப் பிணையம் மூலம் கடன் பெற்றவா்களுக்கு மட்டுமே சிறப்பு கடனுதவி திட்டத்தின் மூலம் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்னுரிமை அளிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இவ்வாறு தொழில் முனைவோா் கரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தில் கடன் பெறுவதற்கு பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பலன் பெறுபவா்களின் எண்ணிக்கை குறையும்: இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார தலைவா் மற்றும் வேலூா் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோா் சங்க தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் கூறியது: முன்பு பெறப்பட்ட கடனுக்கு பொதுமுடக்க காலத்திற்கான வட்டியை திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதாவது பொது முடக்கக் காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை பதிலில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தில் கடன் பெறுவதற்கு தொழில் முனைவோா் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தகுதிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்து கடனுதவி வழங்கும் பட்சத்தில் அதன் மூலம் பலனடைபவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும் இதுவரை வங்கிகளில் கடன் பெறாதவா்கள், கடன் பெற்று முழுவதுமாக கடனை திருப்பி செலுத்திவிட்டு வங்கிக்கு கடன் பாக்கி இல்லாதவா்கள் இந்த சிறப்பு கடனுதவி திட்டத்தின் மூலம் பயன் பெற முடியாது என்பது மிகவும் வேதனைக்குரியது. அதனால் கடனுதவி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைத் தளா்த்தி கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...