பருத்தியில் திருப்தி: ஜவுளித் துறைக்கு நல்ல காலம்!
நடப்பு 2018-19ஆம் ஆண்டு பருத்தி சீசனில் (அக்டோபர் - செப்டம்பர்) விளைச்சல் திருப்திகரமாக இருக்கும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐ.சி.எஃப்.) தெரிவித்துள்ளது.


நடப்பு 2018-19ஆம் ஆண்டு பருத்தி சீசனில் (அக்டோபர் - செப்டம்பர்) விளைச்சல் திருப்திகரமாக இருக்கும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐ.சி.எஃப்.) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் வரையிலும் 122.38 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படும் என்று ஏற்கெனவே முன்கணிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அளவு அக்டோபர் மாதத்திலேயே எட்டப்பட்டுவிட்டது.
ஜவுளித் துறையில் கசப்பான நினைவுகள் நீங்கி இனி நல்ல காலம் பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) பொதுச் செயலர் கே.செல்வராஜு.
பஞ்சாலைகளின் மகிழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது, பருத்தி பயிரிடும் பரப்பளவு கடந்த காலங்களை விட அதிகமாகியுள்ளது. மேலும், விளைச்சலை வெகுவாக பாதிக்கும் காய்ப்புழுக்களின் தாக்கம் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. பி.டி. ரக பருத்தியை புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் சாதாரண ரக பருத்தி விதைகளின் விற்பனையும் இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. (பி.டி. பயிரிடும் வயல்களின் எல்லையோரங்களில் பயிரிடப்படும் சாதாரண ரக பருத்திச் செடிகள் போர் வீரர்களாகச் செயல்படுகிறது).
அதேபோல் இந்த ஆண்டு பருவ மழையும் சாதகமாக உள்ளது. மேலும், ஆலைகளுக்கு வரும் பருத்தியின் தரமும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலையை 26 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை அதிகரித்தும் பருத்தியின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமான விலைக்கு விற்பனையாகிறது. பருத்தியின் தரம் அதிகமாக இருப்பதால்தான் விலை அதிகரித்துள்ளது.
மேலும், இந்திய பருத்தி கழகமும் (சிசிஐ) தரக்கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இதனால் கலப்படம் குறைந்துள்ளது. உற்பத்தி, உற்பத்தித் திறன் அதிகரிக்கும். பருத்தி அளவு 380 லட்சம் பேல்கள் முதல் 390 லட்சம் பேல்கள் (ஒரு பேல் -170 கிலோ) வரும். கடந்த ஆண்டு 370 லட்சம் பேல்கள் இருந்தது. தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்திருப்பதால் பருத்தி பயிரிடும் பரப்பு அதிகரிக்கும். வழக்கமாக 5 லட்சம் பேல்கள் உற்பத்தி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிகபட்சம் 8 லட்சம் பேல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகளுக்கும் நல்லது
இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூற வேண்டும். கடந்த ஆண்டு சீசன் தொடங்கும்போது ஒரு கேண்டி பருத்தி (356 கிலோ) விலை ரூ.38 ஆயிரம் வரையே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகபட்சம் ரூ.47 ஆயிரமாக உள்ளது. இப்படி நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகளும் பயிரைப் பாதுகாப்பார்கள். விளைச்சலையும் அதிகரிக்க முயற்சி எடுப்பார்கள்.
அதேபோல் இந்த ஆண்டு பருத்தி ஏற்றுமதி சுமார் 60 லட்சம் முதல் 70 லட்சம் பேல்களாக இருக்கும். நமது உள்நாட்டுத் தேவை சுமார் 300 லட்சம் பேல்களாக இருக்கும். மேலும் இறக்குமதி சுமார் 15 லட்சம் முதல் 30 லட்சம் பேல்களாக இருக்கும். இதன் மூலம் தேவைக்கு அதிகமாகவே பருத்தி கையிருப்பு நம்மிடம் இருக்க வாய்ப்புள்ளது. தற்போது புதிய பருத்தி வரத்து அதிகரித்துள்ளதால் இறக்குமதி குறைந்துள்ளது.
மேலும், ஆலைகளிடம் போதுமான அளவுக்கு கையிருப்பும் உள்ளது. கடந்த 2016-17 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பெரிய ஆலைகளிடம் 49.6.6 கோடி கிலோ பருத்தி கையிருப்பில் இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்டில் இது 75.2.9 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. அதேபோல் சிறிய ஆலைகளிடமும் கையிருப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் வரை அதிகமாகவே உள்ளது. இதனால் "பருத்தி பற்றாக்குறை இருக்கும், விலை தாறுமாறாக உயரும்' என்ற வியாபாரிகளின் கணிப்பு பொய்த்திருக்கிறது.
உள்ளூர் தேவை தொடர்ந்து அதிகரிப்பு
அதேநேரம் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விலை குறையும் என்று ஆலைகள் எதிர்பார்க்கக் கூடாது. இந்த ஆண்டு ஜவுளித் தொழில் நிலையாக இருக்கும். ஆடைகள் வியாபாரமும் நன்றாக நடைபெறும். எனவே யாரும் அவசரப்படத் தேவையில்லை. ஏனெனில் வெளிநாட்டு பருத்தியை விட இந்திய பருத்தியின் விலை குறைவாகவே உள்ளது.
அதேபோல் வர்த்தகத்தைப் பொருத்த வரையிலும் ஜி.எஸ்.டி. பிரச்னைகள் சற்று தீர்ந்து, ஆரோக்கியமான வியாபார சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆயத்த ஆடைகளின் சில்லறை வர்த்தகமும் சாதகமாக இருக்கும். உள்ளூர் சந்தைக்கான தேவை அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் உள்நாட்டு ஜவுளி வியாபாரம் 108 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது சராசரியாக அதிகரித்துக் கொண்டே வந்து தற்போது 150 பில்லியன் டாலர்களாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து 250 பில்லியன் டாலர்களாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே போலவே ஆன்லைன் வர்த்தகத்தில் ஆடை வியாபாரம் இன்றைய தேதியில் சுமார் 7 முதல் 8 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது வரும் 2020-ஆம் ஆண்டில் 30 பில்லியன் டாலர்களாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. துணி வகைகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது, தனிநபர் வருவாய் உயர்ந்திருப்பது, உள்ளூரிலேயே நல்ல தரமான ஆடை ரகங்கள் (பிராண்டுகள்) கிடைப்பது போன்றவை இதற்கு காரணமாக உள்ளன.
தற்போதைக்கு ஏற்றுமதியில் மட்டுமே பிரச்னை உள்ளது. ஆனால் இதுவும் வரும் காலங்களில் இரு மடங்காக உயரும் என்று கணிக்கப்படுகிறது. உள்ளூர் சந்தை அபரிமிதமாக உயரும் என்பதால் ஏற்றுமதி பற்றி கவலைப்படத் தேவையில்லை. எனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செலவைக் குறைப்பது, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, மதிப்பு கூட்டு பொருள்களைத் தயாரிப்பது, கடன் அளவை குறைத்துக் கொள்வது, பஞ்சு வாங்குவதற்கென்றே தனி செயல்பாட்டு மூலதனம் வைத்துக் கொள்வது, தொழிலாளர்கள் விவகாரங்களை கவனிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் போதுமானது.
ஜவுளித் தொழிலுக்கு மோசமான காலங்கள் முடிந்து நல்ல காலம் பிறக்கும் நிலைமை வந்துள்ளது. இந்த நேரத்தில், அரசுத் தரப்பிலும் வட்டி விகிதம் குறைப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை விரைந்து திருப்பி வழங்குவது, புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
நூல் விலை மேலும் உயரும்
இந்த ஆண்டு பருத்தி, நூல் விலை மேலும் உயரும் என்பதால் இதைக் கருத்தில் கொண்டு ஜவுளித் துறையினர் செயல்பட வேண்டும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளார்.
""இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நல்லபடியாக உள்ளது. அதேநேரத்தில், தரமும் எதிர்பார்த்ததைவிட நன்றாக உள்ளது. இதனால் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு கேண்டி பருத்தியின் விலை ரூ.38,500 ஆக இருந்தது. இது பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.49 ஆயிரத்தை எட்டியது.
ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு கேண்டி பருத்தியின் விலை, எல்லா செலவுகளும் சேர்த்து ரூ.48,500 ஆக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது சுமார் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் மேலும் விலை உயரும். இதனால் நூலின் விலையும் அதிகரிக்கத் தொடங்கும். ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் இதை மனதில் வைத்தே ஆர்டர்களை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சுமார் 1.40 லட்சம் பேல்கள் வரை பருத்தி வந்து கொண்டிருக்கிறது. வரும் மாதங்களில் வரத்து எப்படி இருக்கும் என்பது தீபாவளிக்கு பிறகுதான் தெரியும்.
உலக அளவிலும் பருத்தி விலை இந்திய விலையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. போட்டி நாடுகள் யாருக்கும் பருத்தி குறைந்த விலைக்கு கிடைக்காது என்பதால் இந்திய ஏற்றுமதியும் நன்றாகவே இருக்கும். ஆனால், பருத்தி விலை உயர்வு, அதைத் தொடர்ந்து நூல் விலை உயர்வு போன்ற சங்கிலித் தொடர் நிகழ்வுகள் இனி அதிகரிக்க உள்ள நிலையில், ஜவுளித் துறையினர் எதிர்கொள்ளக் கூடிய ஒரே பிரச்னை மூலதன பற்றாக்குறைதான். இதற்கு வங்கிகள்தான் கருணை காட்ட வேண்டும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...