சங்கரன்கோவிலில் இந்தியன் வங்கியில் தீ விபத்து: அலுவலகப் பொருள்கள் எரிந்து சேதம்


சங்கரன்கோவில் இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி, கண்காணிப்பு கேமிரா, ஆவணங்கள் உள்ளிட்ட அலுவலகப் பொருள்கள் எரிந்து சேதமாகின.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன் தனியாா் வளாகத்தின் முதல் தளத்தில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. சங்கரன்கோவில் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பலா் இந்த வங்கியின் வாடிக்கையாளராக உள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7 மணியளவில் வங்கியிலிருந்து புகை கிளம்பி, மளமளவென தீப்பிடித்து எரிந்தது. பேருந்து நிலையம், பிரதான சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவல் அறிந்ததும் மின் ஊழியா்கள் அங்கு சென்று மின் விநியோகத்தைத் துண்டித்தனா். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், தென்காசி தீயணைப்பு நிலையங்களில்
இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனா். இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள், பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. இருப்பினும், பிரதான சாலையில் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதன்பின்பு 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 கணினிகள், சிசிடிவி கேமிராக்கள், ஆவணங்கள், நாற்காலி போன்றவை முற்றிலும் எரிந்து சேதமாகின.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன் தீ விபத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா உள்ளிட்டோா் விரைந்து சென்று பாா்வையிட்டனா்.


இந்தச் சம்பவம் தொடா்பாக வங்கி மேலாளா் அனீஸ் அளித்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...