/

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 12

வ.வே.சு. ஐயர் திருச்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஐந்தாண்டுக் காலம் தொழில் புரிந்து வந்தார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

த. ஸ்டாலின் குணசேகரன்


வ.வே.சு. ஐயர் திருச்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஐந்தாண்டுக் காலம் தொழில் புரிந்து வந்தார். பின்னர், ரங்கூன் சென்று ஆங்கிலேய பாரிஸ்டர் ஒருவரிடத்தில் இளநிலை வழக்குரைஞராகப் பணியாற்றினார். பாரிஸ்டர் பட்டம் பெற எண்ணிய ஐயர் 1907}இல் லண்டன் சென்றார்.

இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காக லண்டன் செல்லும் பல மாணவர்களைப்போலவே ஐயரும் அங்கிருந்த "இந்தியா ஹவுஸ்' விடுதியில் தங்கினார். அங்குதான் அவர் வீர சாவர்க்கரைச் சந்தித்தார். சாவர்க்கர் தலைமையில் "சுதந்திர இந்தியச் சங்கம்' என்ற ஓர் அமைப்பு இந்தியா ஹவுஸில் உருவாயிற்று. அதற்கு ஐயர் துணைத் தலைவரானார். 1857}இல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி சாவர்க்கர் "1857 முதலாவது சுதந்திரப் போர்' என்ற நூலை மராத்திய மொழியில் எழுதினார். ஐயரின் மேற்பார்வையில் அந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

 வங்கப் பிரிவினை எதிர்ப்பு நாள் லண்டனில் 11}10}1908}இல் நடைபெற்றது. லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால், காபர்தே முதலியோர் பேசினர். அதே நாளில் மேடம் காமா இந்தியா ஹவுஸில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளிலெல்லாம் ஐயரின் பங்களிப்பு வலுவாக இருந்தது. மதன்லால் திங்க்ரா எனும் இந்திய இளைஞன் 1}7}1909}இல் பிரிட்டிஷ் இந்திய விவகாரத் துணை அமைச்சரான கர்னல் சர் கர்சான் வில்லியை லண்டனில் சுட்டுக் கொன்றார். கெடுபிடி அதிகமாயிற்று.

ஐயர் பார்}அட்}லா தேர்வில் வெற்றி பெற்றார். ஆங்கிலேய மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் பாரிஸ்டர் பட்டம் கிடைத்துவிடும் நிலையில் மன்னருக்கு விசுவாசம் தெரிவிக்க மறுத்து பாரிஸ்டர் பட்டத்தைத் துறந்தார். அப்போது அவருக்கு வயது 29.

லண்டனிலிருந்து இந்திய விடுதலைக்குத் தொண்டாற்ற இயலாத சூழலில் ஐயர் பல நாடுகளின் வழியாக பல வேடங்களில் ரகசியப் பயணம் செய்து 1910}ஆம் ஆண்டு புதுச்சேரி வந்து சேர்ந்தார். லண்டனில் காந்தியடிகளை சாவர்க்கருடன் சந்தித்து நான்கைந்து நாள்கள் உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் ஐயர். காந்தியடிகள் 1915}ஆம் ஆண்டு புதுச்சேரி வந்திருந்தபோதும் அவரைச் சந்தித்துப் பேசினார். 

 பாரதியின் "இந்தியா' இதழில் எழுதிவந்தார் ஐயர். கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு ஆயுதப் பயிற்சியளித்தவரும் ஐயரே. 1920}இல் ஐயர் பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைந்தார். திரு.வி.க.விற்குப் பிறகு "தேசபக்தன்' நாளிதழின் ஆசிரியரானார். தேசபக்தனில் வெளியான தலையங்கத்திற்காக சிறைத் தண்டனை பெற்றார். 1923}இல் காக்கிநாடா, 1924}இல் பெல்காம் ஆகிய காங்கிரஸ் மாநாடுகளில் பங்கேற்று உரையாற்றினார்.

ஐயருக்கு அரசியலும் இலக்கியமும் இரண்டு கண்களாக விளங்கின.
 1925}ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி பாபநாசம் அருவியில் குளிக்கச் சென்ற ஐயர் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய தன் மகளைக் காப்பாற்ற முயன்றபோது தானும் மூழ்கி மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.