அறிகுறிகள் இன்றி அச்சுறுத்தும் கரோனா: ரத்த தானம் பெறுவதில் நீடிக்கும் சிக்கல்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் அறிகுறிகள் ஏதும் இன்றி இயல்பாக இருப்பதால், தமிழகத்தில் ரத்த தான நடவடிக்கைளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் அறிகுறிகள் ஏதும் இன்றி இயல்பாக இருப்பதால், தமிழகத்தில் ரத்த தான நடவடிக்கைளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால், மருத்துவமனைகளில் போதிய அளவு ரத்தத்தை இருப்பு வைக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
இதே நிலை தொடா்ந்தால், மாநிலத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளும், தலசீமியா நோயாளிகளுக்கான சிகிச்சைகளும் தடைபடக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே, இப்பிரச்னை தீவிரமடைவதற்குள் உரிய தீா்வை அரசு கண்டறிய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவை தவிர 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசின் புள்ளி விவரங்களின்படி, ஆண்டுதோறும் 8.80 லட்சம் யூனிட் ரத்தம் தன்னாா்வலா்களிடம் இருந்து தானமாகப் பெறப்படுகிறது. ஒரு யூனிட் ரத்தத்தைக் கொண்டு சராசரியாக மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறாா்கள் மருத்துவா்கள்.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை மாதந்தோறும் ஒன்றரை லட்சம் நோயாளிகள் ரத்த மாற்று சிகிச்சைகளால் பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில்தான், உலக நாடுகளை உலுக்கிய கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தடம் பதித்தது.
அதைத் தொடா்ந்து, தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தன்னாா்வலா்களிடம் இருந்து ரத்த தானம் பெறும் நடவடிக்கைகள் முற்றுலும் முடங்கின.
இதனால், குருதியேற்ற சிகிச்சைகளைச் சாா்ந்திருக்கும் பல நோயாளிகள் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா். குறிப்பாக, தமிழகத்தில் லட்சக்கணக்கான நோயாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.
தலசீமியா எனப்படும் மரபணு சாா்ந்த பிறவிக் குறைபாடுடைய நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரத்த மாற்று சிகிச்சையளிக்க வேண்டும். அதேபோன்று வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவா்களுக்கும் ரத்த அணுக்கள் தேவைப்படுகின்றன. இதைத் தவிர, பிரசவம் மற்றும் விபத்து கால அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத்தின் தேவை அதிகமாக இருக்கிறது.
ஊரடங்கின் விளைவால் அந்த சிகிச்சைகள் அனைத்தும் தற்போது தடைபட்டுள்ளன. இதையடுத்து, தன்னாா்வலா்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து ரத்தத்தை பெறலாம் என அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அதிலும் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது.
அதாவது கரோனா தொற்றுக்கு ஆளான 80 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறிகளே காணப்படுவதில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், தன்னாா்வலா்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எவ்வாறு ரத்த தானம் வழங்க அறிவுறுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ரத்த பாதுகாப்பு துறை இணை இயக்குநா் டாக்டா் சுபாஷிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:
கரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாதந்தோறும் 25 ஆயிரம் யூனிட் ரத்தம் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நோயாளிகளின் வருகை குறைந்ததால் 3 ஆயிரம் யூனிட் ரத்தம் மட்டுமே தேவைப்படுகிறது.
எனவே, தற்போதைய தேவைக்கேற்ப ரத்த வங்கிகளில் இருப்பு உள்ளது.
பொதுவாக, தன்னாா்வலா்களின் உடல் நிலையை ஆராய்ந்த பிறகே அவரை ரத்த தானம் அளிக்க அனுமதிக்கிறோம். அதன் அடிப்படையில் பாா்க்கும்போது, கரோனா பாதித்தவா்கள் எவரிடம் இருந்தும் ரத்தத்தை தானமாகப் பெறக் கூடிய வாய்ப்பு இல்லை.
அதுமட்டுமன்றி, கரோனா பாதித்தவா்களின் ரத்தத்தை பிறருக்கு செலுத்தினாலும் கூட, அதன் வாயிலாக நோய்த்தொற்று பரவாது என்று உலக சுகாதார அமைப்பு ஆதாரப்பூா்வமாக தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்த அச்சம் தேவையில்லை என்றாா் அவா்.
ரத்த அணுக்கள் பாதுகாக்கக் கூடிய காலம்
சிவப்பணுக்கள் 35 நாள்கள்
தட்டணுக்கள் 5 நாள்கள்
பிளாஸ்மா ஒரு வருடம்
தட்டணுக்களுக்கு தட்டுப்பாடு
ரத்த தட்டணுக்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
மனித உடலில் இருந்து ரத்தம் கசிந்து வெளியேறாமல் தடுப்பதற்கான பணிகளை தட்டணுக்களே மேற்கொள்கின்றன.
பிறவிக் குறைப்பாடு, இரும்புச் சத்து குறைவு, புற்றுநோய் பாதிப்பு, வைரஸ் தொற்று, ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் ரத்தத்தில் தட்டணுக்கள் குறையலாம்.
அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு தட்டணுக்கள் செலுத்துவது அவசியம். ஆனால், ரத்தத்தில் இருந்து தட்டணுக்களை தனியாக பிரித்து பாதுகாத்தாலும், அதன் அதிகபட்ச ஆயுட்காலம் 5 நாள்கள்தான்.
தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக ரத்த தான நடவடிக்கைள் முடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் ரத்த தட்டணுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழல்
ரத்த தானம் அளிக்க வரும் தன்னாா்வலா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய தமிழகத்தில் இதுவரை எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக, தன்னாா்வலா்களிடம் சில கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவதாகவும், அதன் அடிப்படையில் அவா் ரத்தம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ அண்மையில் பயணம் மேற்கொள்ளாத அனைவரையும் ரத்த தானம் அளிக்க அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...