நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?: மேலும் இருவர் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகப் புகார்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் இரு மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் இரு மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவரும், ஒரு மாணவியும் அவ்வாறு சேர்ந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இருவரின் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு புகைப்படங்களும், மருத்துவ இடம் ஒதுக்கீடு செய்ததற்கான அனுமதிக் கடிதத்தில் இருந்த புகைப்படங்களும் வேறு வேறாக உள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த உண்மை தெரியவந்ததாகவும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் முறைகேடாக சேர்ந்த விவகாரத்தால் உருவான சர்ச்சைகளே இன்னும் அடங்காத நிலையில், தற்போது மேலும் இரு மாணவர்களின் சேர்க்கையிலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நிகழாண்டு நீட் தேர்வினை எழுதினார். சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வெழுதிய அவர், 351 மதிப்பெண்கள் பெற்றார்.
கலந்தாய்வில் முதலில் காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த அவர், அதன் பின்னர் நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வில் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு பெற்றார்.
அதைத் தொடர்ந்து அந்த மாணவர் பிஎஸ்ஜி கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களது சான்றிதழ்களைச் சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட மாணவரின் நீட் நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் இருந்த புகைப்படத்துக்கும், கல்லூரி இட ஒதுக்கீட்டு அனுமதி கடிதத்தில் இருந்த புகைப்படத்துக்கும் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் இடம் பெற்றிருப்பதற்கானமுகாந்திரம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோன்று, தருமபுரி மாவட்டம், கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நிகழாண்டு நீட் தேர்வினை சேலத்தில் உள்ள நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் எழுதினார். அதில் அவர் 437 மதிப்பெண்கள் பெற்று கலந்தாய்வில் பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்தார். அவரது சான்றிதழ்களில் உள்ள புகைப்படங்களிலும் மாறுபாடு காணப்படுவதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அந்த இருவரது விவரங்களையும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தப்பட்ட கல்லூரி அனுப்பியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபுவுக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சரும், மருத்துவக் கல்வி அதிகாரிகளும் கூறி வரும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அதற்கு முற்றிலும் முரண்பட்டுள்ளன.
நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துவதால், அதில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
ஒரு வகையில் அது சரி என்றாலும், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக மாணவர்கள் சேருவதை தடுப்பதற்கான தார்மிகப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
நிகழாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு உயர் நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதே தற்போது பரவலாக முன்வைக்கப்படும் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...