/

உரிமம் இன்றி இனி சிகரெட் விற்க முடியாது: நிகழாண்டுக்குள் அறிமுகமாகிறது புதிய நடைமுறை

பீடி, சிகரெட் ஆகிய புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை நிகழாண்டுக்குள் அமலாக்கப்பட உள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:02 am

ஆ. கோபிகிருஷ்ணா


பீடி, சிகரெட் ஆகிய புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை நிகழாண்டுக்குள் அமலாக்கப்பட உள்ளது. அதற்கான வரைவுத் திட்டத்தை விரைவில் அரசின் ஒப்புதலுக்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுப்ப உள்ளனர்.
புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, பீடி மற்றும் சிகரெட்டுகளை மட்டும் விற்பனை செய்வதற்கான உரிமம் கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகளில் அவற்றைத் தவிர, வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதேபோன்று, பெட்டிக் கடை, தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல வரும் நாள்களில் பீடி, சிகரெட் விற்க முடியாது.
அந்த விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும்  அந்த வரைவுத் திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட தேசமான இந்தியாவில் புகையிலைப் பயன்பாடும், உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. சர்வதேச தரவுகளை ஆய்வு செய்தால் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து நம் நாட்டில்தான் பீடி, சிகரெட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இங்கு 20 கோடிக்கும் அதிகமான மக்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 6 விநாடிக்கு ஒருவர் அப்பழக்கத்தால் உயிரிழப்பதாகத் தெரிகிறது.  இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதத்துக்கு புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதை ஏற்று, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்திலும் அதுபோன்றதொரு கட்டுப்பாட்டை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான வரைவுத் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வகுக்கப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தன.
ஆனால், அந்த வாதத்தை பொது சுகாதாரத் துறை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த சில மாதங்களாக அதற்கான வரைவுத் திட்டத்தை இறுதி செய்யும் பணிகளை சுகாதாரத் துறை முன்னெடுக்காமல் இருந்தது.
தற்போது அந்தத் தடை நீங்கியதால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:
தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக் கடைகள், சிறிய மளிகைக் கடைகள், தேநீரகங்கள் உள்ளன. அவை அனைத்திலும் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறாருக்கு அவற்றை விற்பனை செய்யக் கூடாது; அதுகுறித்த அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்க வேண்டும் என எத்தனையோ விதிகள் இருந்தாலும், அவற்றை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை அளவுக்கு அதிகமாக நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
அதைக் கருத்தில் கொண்டே, பீடி, சிகரெட்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான தனி உரிமம் வழங்கும் நடைமுறையைக் கொண்டுவரத் திட்டமிட்டோம். அதன் வாயிலாக, விற்பனையைக் குறைக்க முடியும். சிறுவர்கள், குழந்தைகளிடையே புகைப் பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
அடுத்த இரு வாரங்களுக்குள் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டு அரசின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வரைவுத் திட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 31) கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.