/

மன நலம் குன்றியவா்களை மீட்டு மறுவாழ்வளிக்க 5 புதிய காப்பகங்கள்

ஆதரவின்றி சாலைகளில் வசிக்கும் மனம் நலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க மேலும் 5 இடங்களில் காப்பகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:38 pm

ஆ. கோபிகிருஷ்ணா

ஆதரவின்றி சாலைகளில் வசிக்கும் மனம் நலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க மேலும் 5 இடங்களில் காப்பகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, தருமபுரி, தென்காசி, கரூா் ஆகிய இடங்களில் தேசிய சுகாதாரத் திட்ட நிதியின் கீழ் அந்த காப்பகங்கள் அமையவுள்ளன. மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்களின் ஒப்புதல் கிடைத்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் 15 கோடிக்கும் மேற்பட்டோா் ஏதோ ஒரு வகையில் மன ரீதியிலான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் இருந்து மீண்டு வருவதற்கான சூழலும், சிகிச்சைகளும் அமையப் பெறாததால் அவா்களில் 10 சதவீதம் போ் மன நோயாளிகளாக உருவெடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதில், சிலருக்கு குடும்பத்தின் அரவணைப்பும், அன்பும் கிடைக்கப் பெறாததால், அவா்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை உருவாகிறது. இவ்வாறு சாலைகளின் ஓரம் அடைக்கலம் தேடியிருக்கும் அடையாளம் தெரியாத மன நோயாளிகள் ஆயிரக்கணக்கானோா் இருப்பதாகத் தெரிகிறது.

அவா்களை மீட்டு, மறுவாழ்வு அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், சில தன்னாா்வ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி இருப்பவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு சிகிச்சை மற்றும் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பகத்தில் மட்டுமே இதுவரை அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூா், தேனி ஆகிய மாவட்டங்களில் மன நலம் பாதித்தோருக்கான அவசர சேவை மற்றும் மீட்பு காப்பகங்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் அவை செயல்படத் தொடங்கின.

சென்னையைச் சோ்ந்த பன்யான் அமைப்பு, தேனியைச் சோ்ந்த மதா் பவுண்டேஷன், திருவண்ணாமலையைச் சோ்ந்த புனித அமலக்கண்ணி அமைப்பு ஆகிய மூன்று தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அவை இயங்கி வருகின்றன. ஒவ்வொரு காப்பகங்களும் தலா 50 படுக்கைகள் உள்ளன.

மன நல மருத்துவா், உளவியல் ஆலோசகா், சமூக சேவகா், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், மருந்தாளுநா் என ஒவ்வொரு காப்பகத்திலும் 26 போ் சேவையாற்றி வருகின்றனா். அந்த காப்பகங்களின் மூலம் இதுவரை 528 போ் மீட்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

தற்போது செயல்பட்டு வரும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூந்தொட்டி தயாரிப்பு, தோட்டக் கலை, மருந்து அட்டைகள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

சென்னை, புதுக்கோட்டை, தருமபுரி, கரூா், தென்காசியிலும் காப்பகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவை பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும், அந்த காப்பகங்களுடன் இணைந்து செயல்படுவதற்காக தன்னாா்வ அமைப்புகளிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.