அமராவதி அணை நீரில் உரிமை கோரும் கரூர் விவசாயிகள்
அமராவதி நதியின் குறுக்கே 1957-இல் அப்போதைய முதல்வர் காமராஜரால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை 4 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் கட்டப்பட்டது.


அமராவதி நதியின் குறுக்கே 1957-இல் அப்போதைய முதல்வர் காமராஜரால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை 4 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் கட்டப்பட்டது.
கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் பயன்படும் இந்த நதியின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 8 வாய்க்கால்கள் மூலம் 750 ஹெக்டேர் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களும், 2,900 ஹெக்டேர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களும் பயனடைந்து வருகின்றன. மேலும், கரூர் மாவட்டத்தில் 13,000 ஹெக்டேர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களும் பயன் பெறுகின்றன.
அமராவதி அணையை நம்பி கரூர் மாவட்டத்தின் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் சின்னதாராபுரம் முதல் கரூர் திருமுக்கூடலூர் வரை நெல், கரும்பு, மஞ்சள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைகின்றன.
தென் மேற்கு, வட கிழக்குப் பருவமழை பருவம் தவறாமல் பெய்யும் போது கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை பொய்த்ததால், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கச் செயலர் ராமலிங்கம் கூறியதாவது:
அமராவதி அணை கட்டப்படும் முன்பே கரூர் மாவட்டத்துக்கு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் கடைமடை வரை தண்ணீர் திறந்த பிறகே திருப்பூர் மாவட்டத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்துக்குப் போதிய தண்ணீர் திறக்கப்படாமல், திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் திறக்கப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டு வருகிறது. மேலும், கரூர் மாவட்டத்துக்கு குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர்தான், திருப்பூர் மாவட்டப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்ட புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் கிடைக்காமல் மழையை நம்பி விதைத்த மானாவாரிப் பயிர்களான சோளம், நிலக்கடலை ஆகியவை காய்ந்து கருகுகின்றன.
ஆடு, மாடுகளுக்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் அவற்றை அடிமாட்டு விலைக்கு சந்தைகளில் விற்று வருகிறோம். சில கால்நடைகள் வெப்பத்தால் கோமாரி உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றன. ஆனால், அங்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கிறார்கள்.
அமராவதி ஆற்றின் கரையோரம் சில இடங்களில் கிணறுகள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கும் இப்போது விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், ஆறு முழுவதும் ஆங்காங்கே மணல் கொள்ளை தாராளமாக நடைபெறுகிறது. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்ற பின்னர்தான், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அடிக்கடி திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது கரூர் ஆட்சியரின் கவனத்துக்கு வருகிறதா அல்லது அவருக்குத் தெரியாமல்தான் தண்ணீர் திறக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.
ஒரே மாநிலத்தில் அடுத்தடுத்து உள்ள இரு மாவட்டங்களுக்கு இடையே தண்ணீரைப் பகிர்ந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
எனவே, வட கிழக்குப் பருவ மழை கை கொடுத்து அணை நிரம்பினால், இந்த ஆண்டில் இருந்தாவது இந்தப் பாரபட்சம் களையப்பட வேண்டும். இல்லாவிடில், அமராவதி பாசன விவசாயிகளை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். நாங்களும் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார் அவர்.
இதுதொடர்பாக அமராவதி அணைநீர் கோட்டப் பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்ட பாசனப் பகுதிகள் 231 கி.மீ. தொலைவில் உள்ளன. அணையில் 80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்து அணைக்கு நொடிக்கு 2,000 கன அடி நீர் வரத்து வந்தால் மட்டுமே கரூர் மாவட்ட பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
அதாவது, 135 நாளைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்துக்கு ஆண்டுக்கு 8 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும். அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவோ 4 டிஎம்சிதான். இதனால், மழைக் காலங்களில் மட்டுமே கரூர் மாவட்டத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில் பாசனப் பகுதிகள் அணையில் இருந்து 31 கி.மீ. தொலைவில்தான் உள்ளன. இதனால், 100 கன அடி திறந்தால்கூட அங்குள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.
தற்போது அணையில் 37 அடி உயரத்துக்குத்தான் தண்ணீர் உள்ளது. இந்தத் தண்ணீரை மூன்று நாள்களுக்கு கரூர் மாவட்டத்துக்கு திறந்தால் அணை நீர் முற்றிலும் வற்றி, அங்குள்ள முதலைப்பண்ணைகளில் இருக்கும் முதலைகள் கரூருக்குள் வந்துவிடும் ஆபத்து உள்ளது.
எனவே, இனி வருண பகவானின் கருணையால் மட்டுமே கரூர் மாவட்டத்துக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...