16 மணி நேர மின்வெட்டு: கேள்விக்குறியாகும் தமிழக ஜவுளித் துறையின் எதிர்காலம்
தமிழகத்தில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டால் ஜவுளித் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது


கோவை, டிச. 3: தமிழகத்தில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டால் ஜவுளித் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2 மாதங்களாக மட்டும் தினமும் ரூ.100 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் டீசலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவது ஜவுளித் தொழில். தேசிய அளவில் 1759 பெரிய நூற்பாலைகளும், 1326 சிறிய நூற்பாலைகளும் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 917 பெரிய நூற்பாலைகளும், 1031 சிறிய நூற்பாலைகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள மில்களின் நூல் உற்பத்தி 1600 மில்லியன் கிலோ.
கடந்த 2008-ஆம் ஆண்டு இறுதியில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு அமலுக்கு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தினமும் 16 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான மில்களில் 2 ஷிப்டுகள் மட்டும் இயங்குகின்றன. இதனால் தினமும் ரூ. 100 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜூன் முதல் மின்சாரத் தேவை பூர்த்தியாகும் என்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரத்தைத் தமிழகத்துக்குத் தரும் மின்பாதை சரியில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.
ஜவுளித் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலின் மிக முக்கியத் தேவை மின்சாரம். நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஜவுளித் துறைக்கு மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் எஸ்.தினகரன் திங்கள்கிழமை கூறியது:
வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்குத் தேவையான மின்பாதைகளைப் போர்க்கால அடிப்படையில் நிறுவ வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் தர வேண்டும்.
இதேபோல நூற்பாலைகளுக்குத் தேவையான மின்சாரத்துக்கு காற்றாலைகள் இருக்கும்போது பிரச்னையில்லை. ஜெனரேட்டர்களில் பயன்படுத்தும் டீசலுக்கு மாநில அரசு வாட் வரியையும், மத்திய அரசு கலால் மற்றும் இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். சுமார் 250 கேவிஏவுக்கு மேல் பயன்படுத்தும் ஜெனரேட்டர்களுக்கு வரியில்லாத டீசலை மத்திய அரசு ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு வழங்கினால்கூடப் போதும்.
மின்சாரம் இல்லாததால் இப்போது தினமும் ரூ.100 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கும் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்களுக்கும் பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜவுளித் தொழிலில் பிரதானமாக விளங்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இதற்கு இங்குள்ள மத்திய அமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதே நிலை தொடர்ந்தால் பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 9 கோடி பேரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்பதே ஜவுளித் துறையினரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...