/

அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்: மலை கிராமப் பள்ளிகளில் பணியாற்ற தயங்கும் ஆசிரியர்கள்

தருமபுரி, மே 3: தருமபுரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால், காலிப் பணியிடங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் 758 தொடக்கப் பள்ளிகள்,

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:45 pm

ஆர்.சரவணன்

தருமபுரி, மே 3: தருமபுரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால், காலிப் பணியிடங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 758 தொடக்கப் பள்ளிகள், 398 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,156 பள்ளிகள் உள்ளன. மலைக் கிராமங்கள் அதிகம் உள்ள பென்னாகரம் ஒன்றியத்தில் 109 தொடக்கப் பள்ளிகளும், 88 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

பாலக்கோடு ஒன்றியத்தில் 97 தொடக்கப் பள்ளிகள், 54 நடுநிலைப் பள்ளிகள், அரூரில் 107 தொடக்கப் பள்ளிகள், 47 நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இம் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 60,249 மாணவர்கள், 56,833 மாணவிகள் பயின்று வருகின்றனர். மொத்தம் உள்ள 4,471 ஆசிரியர் பணியிடங்களில் 3,915 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

2009-10-ம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 375 ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பல்வேறு இடங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றனர்.

இதில் 75 சதவீதம் பேர் பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, கோட்டூர் மலை, வத்தல்மலை உள்ளிட்ட மலைக் கிராமப் பள்ளிகளில் பணி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், பெரும்பாலான ஆசிரியர்கள் மலைக் கிராமப் பள்ளிகளில் பணியாற்ற விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறு மாறுதல் கிடைக்காத சிலர் நீண்ட விடுப்பில் சென்று விடுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் 86 பள்ளிகள் மலைகள் மீதும், காடுகளிலும் உள்ளன. 178 பள்ளிகளுக்கு சுமார் 4 கி.மீ. தரை வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், நகர்ப் பகுதிகளுக்கு மாறுதலாகிச் செல்லவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 60 சதவீத தொடக்கப் பள்ளிகளில் 2 ஆசிரியர்களே உள்ளனர். குறிப்பாக மலைக் கிராமப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் ஓராண்டுக்குமேல் அப்பள்ளிகளில் பணியாற்றுவதில்லை. மேலும், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலையிருப்பதால் ஆசிரியர்கள் அவ்வப்போது விடுப்பு எடுக்கவே விரும்புகின்றனர். இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் 965 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. இதில் மலைக் கிராமங்களுக்கு நியமிக்கப்படுவோர் கட்டாயமாக ஓராண்டுக்காவது பணியாற்றியாக வேண்டும். அடுத்த ஆண்டே இடமாறுதல் பெறத் தயாராக இருப்பார்கள். அப்போது மீண்டும் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, அந்தந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் பணி மூப்பு அடிப்படையில், சுழற்சி முறையில் கட்டயமாக மலைக் கிராமப் பள்ளிகளில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று அரசு அறிவித்தால், மலைக் கிராமப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

மேலும், மலைக் கிராமங்களுக்குப் பயணிக்கும் ஆசிரியர்களுக்கு பயணப் படியை அதிகரித்து தர வேண்டும். இது குறித்து கல்வித்துறை துரித நடவடிக்கை எடுத்தால், மலைக் கிராமப் பள்ளிகளின் கல்வித் தரம் மேம்படும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. திருநாவுக்கரசு கூறியது:

மலைக் கிராமப் பள்ளிகளில் பணிபுரிவதற்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர். நகரங்களுக்கு மாறுதலாகிச் செல்லும் ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மலைக் கிராமப் பள்ளிகளில் பணியாற்றும் 42 சதவீத ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று நகர்ப்புறங்களுக்கு சென்றுள்ளனர். மலைக் கிராமங்களில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் சரிவிலிருந்து மீளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.