நம்மூரில் தான் கழிவு நீர்க் கால்வாய்கள் அனைத்தும் முடிவில் கடலைத்தான் சென்றடைய வேண்டும் என்ற விதி இருக்கிறதே. ஆக உடைகளின் வழியே இந்த மைக்ரோ ஃபைபர்கள் கழிவுநீர்க் குழாய் வழியே வெளியேறி கடல் மட்டுமல்ல குளம், குட்டை, ஏரி என நீர் ஆதாரங்கள் அனைத்திலும் கலந்து விடுகின்றன. அதனால் தான் கடல் உணவுகளை உண்பவர்கள் ஆண்டுதோறும் 11,000 ஃபைபர் பிளாஸ்டிக் இழைகளையும் சேர்த்தே உட்கொள்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகையான மைக்ரோ ஃபைபர்கள் மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களில் மட்டுமல்ல நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தேன், சர்க்கரை, உப்பு, பீர் போன்ற பொருட்களிலும் கூட கலப்படம் ஆகின்றன. இதில் பீதியூட்டக் கூடிய விஷயம் என்னவென்றால் இந்த மைக்ரோ ஃபைபர்கள் நச்சு ரசாயணங்களை காந்தம் போல தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக் கூடியவை என்பதால் இவற்றை அறியாமல் உட்கொள்ளும் உயிரினங்களின் நிலை மிக அபாயகரமானதாக மாறுகிறது. மைக்ரோ ஃபைபர்களை உட்கொள்வதில் பிற எந்த உயிரினத்தைக் காட்டிலும் மனித இனமே மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. மைக்ரோ ஃபைபர்கள் நமக்கே தெரியாமல் நம் உடலில் கலந்து விடுவதால் மிக மோசமான உடல்நலக் கோளாறுகளில் எல்லாம் மாட்டிக் கொள்கிறோம்.