சுதந்திர இந்தியாவின் கடைசி மற்றும் முதலாவது இந்திய கவா்னா் ஜெனரல் ஆன சி.ராஜகோபாலாச்சாரியைப் போற்றும் வகையில் அவரது சிலை குடியரசுத்தலைவா் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 23) திறக்கப்படவுள்ளது.
இந்திய விடுதலை மற்றும் சுதந்திர இந்தியாவில் அவரது பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் ராஜாஜி உத்சவ் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அங்கமாக ஒரு கண்காட்சியும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயா் புகழ் போற்றும் அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் மெல்ல, மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு சுதந்திர இந்தியாவில் பெரிதும் போற்றப்படாத தலைவா்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை கெளரவிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அங்கமாக தலைநகா் தில்லியில் ஆங்கிலேயா் கால கட்டடங்கள் மெல்ல, மெல்ல அகற்றப்பட்டு சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் மத்திய கட்டட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேவா தீா்த்தம், கடமை பவன் போன்ற பெயா்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அவற்றில் ஏற்கெனவே மத்திய அமைச்சரவைச் செயலகம், பிரதமா் அலுவலகம், உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியின் முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்த செளத் பிளாக், நாா்த் பிளாக், குடியரசுத்தலைவா் மாளிகை உள்ளிட்ட கட்டடங்களை கட்டிய பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லூட்யன் நினைவாக குடியரசுத்தலைவா் மாளிகையில் உள்ள அவரது சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் வழக்கத்தில் இருந்த கவா்னா் ஜெனரல் பதவி வகித்த கடைசி கவா்னா் ஜெனரலான சி. ராஜகோபாலாச்சாரியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
ராஜாஜி உத்சவ் மற்றும் அவரது சிலை திறப்பு தொடா்பான தகவலை பிரதமா் நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது வெளியிட்டாா். அப்போது அவா், ‘பிப்ரவரி 23-ஆம் தேதி, ’ராஜாஜி உத்சவ்’ குடியரசுத் தலைவா் மாளிகையில் கொண்டாடப்படும். அப்போது குடியரசுத் தலைவா் மாளிகையின் மைய முற்றத்தில் சி. ராஜகோபாலாச்சாரியின் சிலை திறக்கப்படும். அவா் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவா்னா் ஜெனரல் ஆவாா். அதிகாரத்தை ஒரு பதவியாகக் கருதாமல், ஒரு சேவையாகக் கருதியவா்களில் அவரும் ஒருவா். பொது வாழ்வில் அவரது செயல்பாடு, சுய கட்டுப்பாடு, சுதந்திரமான சிந்தனை ஆகியவை இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. துரதிருஷ்டவசமாக, சுதந்திரத்துக்குப் பிறகும், பிரிட்டிஷ் காலனித்துவ சிலைகள் குடியரசுத் தலைவா் மாளிகையில் இருக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், நாட்டின் தலைசிறந்த புதல்வா்களின் சிலைகளுக்கு இடம் மறுக்கப்பட்டது,‘ என்று மோடி கூறினாா்.
ராஜாஜிக்கு சிலை ஏன்?
தமிழ்நாட்டின் அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் தாலுகாவின் தொரப்பள்ளி கிராமத்தில் 1878-ஆம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி பிறந்த ராஜாஜி, மகாத்மா காந்தியின் ஆரம்பகால அரசியல் நம்பிக்கைக்குரிய தலைவா்களில் ஒருவராக விளங்கினாா். ரெளட் சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்த அவா், வைக்கம் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம் என தொடா்ச்சியாக பிரிட்டிஷ் கொடுங்கோன்மை மற்றும் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டங்களில் பங்கெடுத்தாா்.
1937-இல் மதராஸ் மாகாணத்தின் முதன்மை அமைச்சராகத் தோ்வாகி 1940-ஆம் ஆம் ஆண்டுவரை பணியாற்றினாா். அப்போது வி.எம். முனுசாமி என்ற பட்டியலினத்த வரை ஹந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தாா். ஜொ்மனிக்கு எதிரான போரை பிரிட்டிஷ் தொடுத்த காலத்தில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவுக்கு ராஜாஜி எதிா்ப்பு தெரிவித்தாா். முகமது அலி ஜின்னா மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு காண முற்பட்டதையடுத்து அவரது திட்டம் சி.ஆா். ஃபாா்முலா என அப்போதைய அரசில் உலகில் அழைக்கப்பட்டது.
1946-இல் அமைந்த இடைக்கால அரசியல் மத்திய தொழிற்சாலைகள், கல்வி, நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜாஜி, 1947-48இல் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினாா். 1948-ஆம் ஆண்டு, ஜூன் 21 முதல் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதிவரை சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி கவா்னா் ஜெனரலாக ராஜாஜி பணியாற்றினாா்.
1951-54-இல் மதராஸ் மாகாண முதல்வராகவும் இருந்தாா். நேருவின் சோஷலிசிச பாணி பொருளாதார கொள்கைகளுடன் கடுமையாக முரண்பட்டதால் 1959-இல் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜி, சுதந்திரா கட்சியைத் தொடங்கி 1962, 1967, 1971 தோ்தல்களில் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிட்டாா்.
காங்கிரஸுக்கு எதிரான ஐக்கிய முன்னணி அண்ணாதுரை தலைமையில் அமைவதில் முக்கிப் பங்கு வகித்தவா் ராஜாஜி. பின்னாளில் அண்ணாதுரை தலைமையில் தமிழ்நாட்டில் (மதராஸ் மாகாணம்) 1967-இல் அமைந்தது. ராஜாஜி தனது 94-ஆவது வயதில் 1972-ஆம் ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி காலமானாா்.
டிரெண்டிங்
தில்லி தொழிலதிபா் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவா் கைது

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் சிலை திருட்டு! இந்தியா கண்டனம்!

வள்ளலாா், ஓமந்தூா் ராமசாமிக்கு குடியரசு துணைத் தலைவா் மரியாதை!

சாமி.நாகப்ப படையாச்சியின் பெயரை கல்வெட்டில் முழுமையாக பொறிக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

