சாத்தூர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற 3 ஆயிரம் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருள்களை ஏழாயிரம்பண்ணை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-ஏழாயிரம்பண்ணை சாலை வழியாக அனுமதியில்லாமல் கல்குவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் கொண்டு செல்வதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் பேரில் உடனே ஆய்வு செய்வதற்கு ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட சாலைப்பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் 3 ஆயிரம் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 50 சாதாரண டெட்டனேட்டர்கள், 475 கிலோ நைட்ரேட் மிக்ஸர் வெடிபொருள்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
உடனே அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த ஜோசப்(36) என்பவரிடம் விசாரித்தனர். அதில் குடோனில் இருந்து கல்குவாரிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கு காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், சாத்தூர் டி.எஸ்.பி வெள்ளையன், சிவகாசி டி.எஸ்.பி குமார் ஆகியோர் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர் கூறிய வெடிபொருள் குடோனை ஆய்வு செய்தனர். அங்கு, வெடி பொருள் வைத்திருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
உடனே ஏழாயிரம்பண்ணை போலீஸார் ஜோசப் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், வாகனம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெடிபொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வெடிபொருள்கள் எங்கேயிருந்து கொண்டு வரப்படுகிறது, எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.