/

சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா?

குற்றங்களைத் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்கவும், சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா என்ற

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:43 am

ஆர். வேல்முருகன்

குற்றங்களைத் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்கவும், சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனித் தனி வீடுகள் என்ற கருத்தும் இப்போது குறைந்து வருகிறது.
 பெருநகரங்களில் தங்கும் விடுதிகளுக்கான வாடகை மிகவும் அதிகமாக இருப்பதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானோர் தங்கினால் கூடுதல் வாடகை வசூலிப்பதாலும், சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் பெருகி வருகின்றன.
 வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து குடும்பத்துடன் வருபவர்கள் விடுதிகளில் தங்குவதற்காக மட்டும் தினசரி ஆயிரக் கணக்கில் செலவிட வேண்டும். ஆனால் "சர்வீஸ் அபார்ட்மென்ட்' என்றால் எத்தனை பேர் வேண்டுமாயினும் தங்கிக் கொள்ளலாம். இதற்கு நாள் வாடகையே வசூலிக்கப்படுகிறது.
 விடுதியில் தங்க வேண்டுமென்றால் உணவுக்காக வெளியில் செல்ல வேண்டும். அதற்குத் தனிச் செலவு.
 ஆனால் சர்வீஸ் அபார்ட்மென்ட்களில் தங்கினால், நமக்குத் தேவையானவற்றை நாமே சமைத்துக் கொள்ளலாம். சமையல் எரிவாயு, தண்ணீர் என எல்லாமே அபார்ட்மென்ட்டில் இருக்கும்.
 எனவே தான், வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வரும் பலரும், தங்கும் விடுதிகளை விட சர்வீஸ் அபார்ட்மென்ட்களை அதிகமாக விரும்புகின்றனர். இந்த அபார்ட்மென்ட்கள் நகருக்குள் இருப்பதால் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளுமே குறைகிறது.
 இந்த சர்வீஸ் அபார்ட்மென்ட்களில், பக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட்காரர் யாரென்று கூடத் தெரிவதில்லை. தினமும் புதிது புதிதாக ஆள்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் இங்கு ஏதாவது பிரச்னை என்றாலும், உடனடியாக யாருக்கும் தெரிவதில்லை.
 அண்மையில் கோவை நகரில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்ட்டில் பெண் ஒருவர் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
 எதிர்வீட்டில் இருந்த ஓர் இளைஞர் தான் அப்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, துர்நாற்றம் வீசியபோது தான் மற்றவர்களுக்கு இப்பிரச்னையே தெரியவந்தது.
 இத்தனைக்கும் அங்கு காவலுக்கும் ஆள் இருந்திருக்கிறார். ஏறக்குறைய இதே நிலை தான் சர்வீஸ் அபார்ட்மென்ட்களிலும்.
 சர்வீஸ் அபார்ட்மென்ட் வைத்திருந்தால் அதன்மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எனவே, சர்வீஸ் அபார்ட்மென்ட்டாக விடப்படும் வீடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கலாம். சம்பந்தப்பட்ட வீடுகளுக்குக் குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் கூடுதலாக வசூலிக்க வேண்டும். மேலும், இத்தகைய வீடுகளுக்குக் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு இணைப்புக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.
 சர்வீஸ் அபார்ட்மென்ட்டாக விடப்படும் வீடுகளை சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரலாம். இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.
 இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்குக் கூடுதல் வரி விதிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு சர்வீஸ் அபார்ட்மென்ட் என்று கண்டறியப்படும் வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.