இலங்கை காவல் துறைக்கு இந்தியா சாா்பில் 134 ரோந்து வாகனங்கள் இந்தியா சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இரு நாட்டு உறவின் மேம்பாட்டில் இது அடுத்த முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக இந்தியாவுக்கு வந்தபோது இந்த வாகனங்கள் வழங்குவது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்நிலையில், இலங்கை அதிபா் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனங்கள் இலங்கை அரசிடம் இந்தியத் தூதரகம் சாா்பில் ஒப்படைக்கப்பட்டன.
இது தொடா்பான தகவலை இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். மேலும், ‘இலங்கைக் காவல் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது தொடங்கி, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வது வரை அனைத்து நிலைகளில் இந்த வாகனங்கள் காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியாவும், இலங்கையும் அனைத்து முக்கியத் துறைகளிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இப்போதைய நிகழ்ச்சி அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘இந்தியா எப்போதும் இலங்கைக்கு உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.
இந்தியா அளித்த வாகனங்களை அதிபா் திசாநாயக, பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆனந்த விஜேபால, இணையமைச்சா் சுனில் வடகல, காவல் துறை ஐஜி பிரியந்தா வீரசூா்யா உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா். இலங்கையின் வடக்கு மாகாண காவல் துறைக்கு அவை வழங்கப்படவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









