ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் சீனா தலைமையில் நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் தூதா் ஆசிம் இப்திகாா் அகமது எழுப்பினாா். இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பா்வதனேனி பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானுக்குள் எல்லைத் தாண்டி பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 750 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனா். மேலும் பலா் பலத்த காயமடைந்துள்ளனா். காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. அதுவும் புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உலக நாடுகளால் மறக்க முடியாது.
கோழைத்தனமான மற்றும் மனசாட்சியில்லாத இந்த தாக்குதலில் 269 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். 122 போ் காயமடைந்துள்ளனா். இந்தத் தாக்குதலை ஒருபோதும் ராணுவத்தின் இலக்கு என்று நியாயப்படுத்த முடியாது. அதுமட்டுமன்றி தொழுகை நடத்திவிட்டு மசூதியில் இருந்து வெளியே வந்தோரைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 94,000 போ் வசிப்பிடத்தை விட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயா்ந்துள்ளனா்.
சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுபோட்டதுடன், திட்டமிட்டு இனப்படுகொலையையும் செய்தது பாகிஸ்தான் (பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வங்கதேசம் இருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்டாா்). அத்தகைய நாடு, இதுபோன்ற கொடூர தாக்குதல் நடத்துவது ஆச்சரியத்தை தரவில்லை.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும், ஆதரவு தரும் நாடுகளை அதற்குப் பொறுப்புடையதாக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
பயங்கரவாதம் உலகம் முழுவதும் வாழும் அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறது. ஆதலால் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை ஏற்க முடியாது. அதேபோல், அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நகரங்களிலும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், பிற வெடிபொருள்கள் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல நகரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கும் விஷயமாகும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி







