தமிழ் செய்திகள்
நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்களிடையே வளைகுடா போர் சூழலுக்கு இடையே, இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட 7 கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதைத் தொடர்ந்து கேஜரிவால் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானாவில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை முன்மொழிந்தார்.
ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெட்ரோல் - டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ரசாயன உரங்களை சார்ந்திருப்பதை தவிர்த்து இயற்கை வேளாண்மைக்கு திரும்புங்கள். வெளிநாட்டுப் பொருள்களுக்கு பதிலாக சுதேசி பொருள்களைப் பயன்படுத்துங்கள். ஓராண்டுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாவைத் தவிர்க்க வேண்டும் என 7 கோரிக்கைகளை நாட்டு மக்களிடம் முன்வைத்தார்.
இந்நிலையில், நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாகத் தெரிக்க வேண்டும் என அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுடன் கேஜரிவால் பேசியதாவது:
''1950 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் உடனான போர், சீனா உடனான போர், என பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை இந்தியா சந்தித்துள்ளது. ஆனால், அப்போது தலைவர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் குறிப்பிட்ட பொருள்களை வாங்காதீர்கள் என மக்களிடம் கூறவில்லை. இதுமட்டுமின்றி நாட்டில் எந்தவொரு அரசும் குடிமக்களிடம் இத்தகைய கோரிக்கையை வைத்ததில்லை. பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிரதமர் மோடியிடம் எனக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை வெளிப்படையாக நாட்டு மக்களிடம் கூற வேண்டும். எதிர்காலத்தில் என்ன எதிர்பார்ப்பு வைத்துள்ளோம். தற்போது பலதரப்பட்ட வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அவை நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்க இழக்கச் செய்கிறது.
ஈரான் - அமெரிக்க போரால் உலகமே நெருக்கடியை சந்தித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உலகின் எந்தவொரு அரசாங்கமும் மக்களிடம் இத்தகைய கோரிக்கைகளை வைத்ததில்லை. இதன் பின்னால் இருக்கும் காரணம் வேறு என நினைக்கிறேன்.
நடுத்தர மக்கள் மிகுந்த தேசபக்தி உடையவர்கள். ஆனால், முதலில் பாரம் ஏற்றிவைக்கப்படுவது அவர்கள் மீதுதான். தியாகம் அரசாங்கத்திடம் இருந்து தொடங்க வேண்டும். மக்களிடமிருந்து அல்ல'' என கேஜரிவால் பேசினார்.
Summary
Aam Aadmi Party Arvind Kejriwal sharply questioned Prime Minister Narendra Modisseven appeal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







