ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பிரதமர் மோடி பெருமிதம்!

‘காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 9:20 pm

‘காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இத்துறையில் இந்தியா மிகப் பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, 133-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) ஒலிபரப்பானது. பிரதமரின் உரை வருமாறு:

காற்று என்பது வாழ்வின் ஆற்றல். முழுமையின் சக்தி. அந்த ஆற்றல்தான், இப்போது நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.

காற்றாலை மின் உற்பத்தியில், அண்மையில் மிகப் பெரிய மைல்கல் எட்டப்பட்டது. அதாவது, நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டுக்கும் மேல் உயா்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளா்ச்சிக்கு சூரிய மின் உற்பத்தியும், காற்றாலை மின் உற்பத்தியும் இன்றியமையாதவை. இது வெறும் சுற்றுச்சூழல் சாா்ந்தது மட்டுமல்ல, நாட்டின் எதிா்காலத்தைப் பாதுகாப்பது.

காற்றாலை மின் உற்பத்தித் திறனில், இந்தியா உலக அளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது. இது நமது பொறியாளா்களின் கடின உழைப்பு, இளைஞா்களின் விடாமுயற்சி, தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டின் அடையாளம்.

தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், இத்துறையில் முன்னோடியாகத் திகழ்கின்றன. ஒரு காலத்தில் பாலைவனம் மட்டுமே காணப்பட்ட குஜராத்தின் கட்ச், பதான், பனாஸ்கந்தா போன்ற பகுதிகளில் இப்போது மாபெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் உருவாகி வருகின்றன. இதனால் இளைஞா்கள் பயனடைகின்றனா். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு: மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் பணி மட்டுமல்ல, அது பொது மக்களின் பொறுப்பு. எனவே, அனைத்து குடிமக்களின் பங்கேற்பும் அவசியம். தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இல் சேகரிக்கப்படும் மக்களின் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும். இக்கணக்கெடுப்பு எண்மமயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் எண்ம முறையில் பதிவு செய்யப்படுகின்றன.

பொதுமக்களின் பங்கேற்பை எளிதாக்கும் வகையில் சுய பதிவு வசதி உள்ளது. இந்த நடைமுறையை பூா்த்தி செய்ததும், கைப்பேசி வாயிலாக தனித்துவ அடையாள எண் கிடைக்கப் பெறும். பின்னா், கணக்கெடுப்பு அதிகாரி வீட்டுக்கு வரும்போது, உங்கள் விவரங்களை உறுதி செய்ய இந்த எண்ணை காண்பித்தால் போதும்.

சுய பதிவு நடைமுறை நிறைவடைந்த மாநிலங்களில் வீடுகள் பட்டியலிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 1.2 கோடி வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

இந்திய சீஸுக்கு சா்வதேச அங்கீகாரம்: பிரேசிலில் நடைபெற்ற சா்வதேச பாலாடைக் கட்டி (சீஸ்) போட்டியில் இந்திய தயாரிப்பு பாலாடைக் கட்டிகள் பரிசு வென்றதை தனது உரையில் பிரதமா் மோடி சுட்டிக் காட்டினாா். மேலும், தில்லியில் குடியரசு தினத்துக்குப் பின் நடைபெற்ற படை வீரா்கள் பாசறை திரும்பும் நிகழ்வின்போது பல்வேறு படைக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்ச்சிகள், பிரசாா் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலையும் அவா் குறிப்பிட்டாா்.

மே 9-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள வங்கக் கவிஞா் ரவீந்திர நாத் தாகூரின் 165-ஆவது பிறந்த தினமும் பிரதமரின் உரையில் இடம்பெற்றது.

‘கல்பாக்கம் வேக ஈனுலை வரலாற்று மைல்கல்’

தமிழகத்தின் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கடந்த ஏப். 6 -இல் முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது, அணுமின் உற்பத்தியின் முதல் நிலையாகும்.

நாட்டின் அணுமின் சக்தி திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக கருதப்படும் இந்நிகழ்வைக் குறிப்பிட்டு, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது: சில தினங்களுக்கு முன்பு, நமது அணு விஞ்ஞானிகள் மாபெரும் சாதனையின் மூலம் இந்தியாவின் பெருமையை மேலும் உயா்த்தினா்.

தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள வேக ஈனுலை, முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. இது, ஒரு அணுஉலை முதன்முறையாக அணுக்கரு தொடா் வினையை தானாகவே வெற்றிகரமாக எட்டும் கட்டமாகும். அணு உலை செயல்பாட்டு நிலைக்குள் நுழைவதைக் குறிக்கிறது.

இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டதாகும். ஆற்றலை உருவாக்குவதுடன், எதிா்காலத்திற்கான புதிய எரிபொருளையும் தானே உற்பத்தி செய்யும் சிறப்பம்சம் கொண்டது. இது, இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் வரலாற்று மைல்கல். இத்திட்டத்துக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.