ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முறைகேடு இல்லை, ஆனால்...: சுங்கச் சாவடிகள் குறித்த தலையங்கம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தரமாகக் கட்டமைக்கப்பட்ட சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2022, 1:04 am

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தரமாகக் கட்டமைக்கப்பட்ட சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த சாலைகளை அமைப்பதற்கான மொத்த செலவும், சுங்கக் கட்டணமாக சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான், மேலைநாடுகளைப் போல சுத்தமான, அகலமான சாலைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை நமது ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது. அதன் விளைவாக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாநிலச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. 

சாலைகள் விரிவாக்கத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளால், ஆரம்பத்தில் இந்தத் திட்டப் பணிகள் மந்த கதியில் நடைபெற்றன. 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, நான்கு வழிச் சாலை திட்டப் பணிகள் வேகமெடுத்தன. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகளாகவும், எட்டு வழிச் சாலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

"தனியார் பங்களிப்புடன் கட்டுதல்-பராமரித்தல்-ஒப்படைத்தல்' என்ற அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாலைகளை அமைப்பதற்கான செலவுத் தொகையை ஈடுகட்டும் வகையில், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் கடந்த பிறகு, சாலைகளின் பராமரிப்புக்காக தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றன. சாலை அமைப்பதற்கான செலவை ஈடுகட்ட சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆனால், சாலை பராமரிப்புக்கு முந்தைய கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிப்பதன் நியாயம்தான் புரியவில்லை. 

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை இரு தொகுதிகளாகப் பிரித்து, ஆண்டுதோறும் ஏப்ரல் 1, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டைய சுங்கக் கட்டண விதிகளின்படி, ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் இந்தக் கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. சுங்கக் கட்டணம் உயர்ந்தால், சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து அதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தமிழகத்தில் மொத்தமுள்ள 48 சுங்கச் சாவடிகளில் 24}இல் கடந்த 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயல் - வாலாஜா பிரிவில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் மட்டும் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு 10 சதவீதமும், நல்லூர் சுங்கச் சாவடியில் 40 சதவீதமும், சூரப்பட்டில் 16 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தரமான சாலைகளால் கனரக வாகனங்களின் பராமரிப்புச் செலவும், பழுது ஏற்படுவதும் குறைவதோடு, நெடுஞ்சாலை அருகே வாகனங்களை நிறுத்துவதற்கும் ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறுகிறது. இந்த வசதிகளுக்காக வானக ஓட்டிகள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்றும் இதில் தவறு காண முடியாது என்றும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. 

வளர்ச்சி அடைந்த எல்லா நாடுகளிலும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எந்தவொரு சுங்கச் சாவடியிலும், எந்த வாகனமும் ஒரு வினாடிகூட நிற்க வேண்டிய அவசியமில்லை. இங்கே இருப்பதுபோல, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவலம் உலகில் வேறெங்கும் கிடையாது. தடையில்லாமல் விரைந்து பயணிப்பதற்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ஆணையம் நினைவில் கொள்ளவேண்டும். 

திருநெல்வேலியிலிருந்து 625 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு காரில் வருவதற்கு 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தியாக வேண்டும். 60 கி.மீ. தொலைவுக்கு  ஒன்று என்ற அடிப்படையில் சுங்கச் சாவடிகள் இருப்பதை மூன்று மாதங்களுக்குள் உறுதி செய்வோம் என அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் 40}45 கி.மீ. தொலைவுக்குள் ஒன்று என்ற அடிப்படையில் சுங்கச் சாவடிகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன.

இதை முறைப்படுத்தி, தேவையற்ற இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் கட்டண முறைகேடு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஆனால், அதே நேரத்தில், குறைந்த சுங்கக் கட்டணம், தடையில்லாப் பயணம், தரமான சாலைகள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.