சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

பங்கீடுதான் பிரச்னை!

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:16 pm

ஆசிரியர்

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நான்கு நாள் அரசு முறைப் பயணத்திற்குப் பிறகு இந்திய - வங்கதேச உறவு மேலும் வலுப்பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி தானே நேரில் சென்று வங்கதேசப் பிரதமரை வரவேற்றது, எந்த அளவுக்கு மத்திய அரசு வங்கதேசத்துடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் விஜயத்தின்போது எரிசக்திக் கூட்டுறவு, இரு நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட 22 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. தனியார் முதலீடு குறித்த 14 ஒப்பந்தங்களும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகி இருக்கின்றன. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தளவாடப் பரிமாற்றங்கள், ராணுவப் பயிற்சி, உயர்நிலை ராணுவக் கூட்டுறவு ஆகியவை புதுப்பிக்கப்பட்டிருப்பதும், புதிய பல தளங்களில் கூட்டுறவுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதும் இந்த விஜயத்தின் முக்கியமான அம்சங்கள்.
தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுமின்சக்தி ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. வங்கதேச விஞ்ஞானிகளுக்கு இந்திய அணுமின்சக்தி நிலையங்களில் பயிற்சி அளிப்பது தொடர்பாக சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. கொல்கத்தாவிலிருந்து குல்னா வழியாக வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கு பஸ் போக்குவரத்தும், புதிய ரயிலும் தொடங்கப்பட்டிருக்கிறது.
வங்கதேசத்திற்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலரும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்காக 5 பில்லியன் டாலரும் இந்தியா கடனுதவி வழங்க இருக்கிறது. இதுதான் இந்தியா இன்னொரு நாட்டிற்கு அளித்திருக்கும் அதிகபட்ச கடனுதவி என்பதிலிருந்து வங்கதேச உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். "சார்க்' அணியிலுள்ள வேறு எந்த நாட்டுக்கும் இந்தியா இந்த அளவுக்கு சலுகை அளித்ததில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையேயான வர்த்தக உறவு 7 பில்லியன் டாலர்கள் என்றால், சீனாவுடனான வங்கதேசத்தின் வர்த்தகம் 10 பில்லியன் டாலரிலும் அதிகம். நாம் 5 பில்லியன் டாலர் கடனுதவி அளிக்க முன்வந்திருக்கிறோம் என்றால், சீனா
வங்கதேசத்திற்கு அளித்திருக்கும் கடனுதவியின் அளவு 24 பில்லியன் டாலர்கள். ஆறு மாதத்திற்கு முன்னால்தான் சீனாவிடமிருந்து இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களை வங்கதேசம் வாங்கி இருக்கிறது. வங்கதேசத்தில் துறைமுகம் ஒன்று கட்டுவதற்கும் சீனா உதவி செய்ய முன் வந்திருக்கிறது.
வர்த்தக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ ஒப்பிடும்போது சீனா அளவுக்கு இந்தியாவால் ஒருநாளும் வங்கதேசத்துக்கு உதவ முடியாது என்றாலும், வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் இந்திய - வங்கதேச உறவு நெருக்கமானது. அதிலும் குறிப்பாக, "வங்கபந்து' ஷேக் முஜீபூர் ரஹ்மானின் புதல்வியான பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதில் சில தர்மசங்கடங்கள் உண்டு. வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சி இந்திய எதிர்ப்பை முன்வைத்து அரசியல் நடத்துகிறது. இந்தக் கட்சியுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எழுப்பும் கேள்வி எல்லாம், பொருளாதாரம் குறித்து அல்ல. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பாயும் நதிகள் குறித்தும், குறிப்பாக, தீஸ்தா நதிநீர்ப் பங்கீட்டுக் குறித்தும்தான் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே 54 நதிகள் பாய்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உருவாகி மேற்கு வங்காளம் வழியாகப் பாய்ந்து, வங்கதேசத்திற்குள் நுழைந்து அவை வங்காள விரிகுடாக் கடலை அடைகின்றன. ஒன்றுபட்ட இந்தியா இருந்த காலத்தில் இந்த நதிகள்தான் அந்தப் பகுதி மக்களின் வர்த்தக வாழ்வாதாரமாகத் திகழ்ந்தன. போக்குவரத்துக்கும் அவைதான் பயன்பட்டன. ஷேக் ஹசீனா அந்தப் பழைய நிலைமையை மீட்டெடுத்தால் அது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று கருதுகிறார்.
இந்த நதிநீர்ப் பிரச்னையில் மிகவும் முக்கியமானது தீஸ்தா என்கிற ஆறு. கடலிலிருந்து 17,487 அடி உயரத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள சோளமு என்கிற ஏரியிலிருந்து சிறிய ஓடையாக உரு
வாகும் தீஸ்தா, அடுத்த 100 கி.மீ. கடந்ததும் பல கிளை நதிகள் இணைந்து பெரிய ஆறாகப் பெருக்கெடுக்கிறது. பிறகு அதில் ரங்கீத் நதியும் இணையும்போது பிரவாகமாகி மேற்கு வங்காளத்தில் நுழைகிறது. மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டம் வரை கடந்து, வங்கதேசத்தில் ரங்பூர் மாவட்டத்தில் நுழைந்து கடைசியில் பிரம்மபுத்ராவில் கலந்து விடுகிறது தீஸ்தா.
தீஸ்தாவை இந்தியா புனல் மின்சக்திக்கும், பாசனத்துக்கு பயன்படுத்துவதால் வங்கதேசத்துக்குப் போதிய அளவு நீர் கிடைப்பதில்லை. சரிபாதியாக தீஸ்தா நதிநீரை இரண்டு நாடுகளும் பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என்பது வங்கதேசத்தின் கோரிக்கை. இந்தியாவில் நதிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நதீநீர்ப் பங்கீட்டுக்கு ஒத்துக் கொண்டால், அதனால் தனது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறுகிறது மேற்கு வங்க அரசு.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய விஜயம் தீஸ்தா நதிநீர்ப் பங்கீட்டு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிந்திருக்கிறது. தீஸ்தா குறித்த ஒப்பந்தத்தில்தான் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமும், ஷேக் ஹசீனாவின் அரசியல் வெற்றியும் அடங்கி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.