அரசியல் சாசன முரண்!
நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் சாசன அமர்வு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மற்றும் 99-ஆவது அரசியல் சட்டத் திருத்தம்...


நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் சாசன அமர்வு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மற்றும் 99-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இரண்டையும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நிராகரித்தபோதே, அந்தத் தீர்ப்பில் கருத்து வேறுபாடுகள் தெரிவித்திருந்த நீதிபதி ஜே. செலமேஸ்வர், தான் "கொலீஜியம்' எனப்படும் நீதிபதி நியமனக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று விலகி நின்றதுதான் இப்போது தேசிய அளவில் நீதிபதிகள் நியமன முறை குறித்த விவாதத்தை மறுபடியும் எழுப்பி இருக்கிறது. இனிமேல், நீதிபதிகள் நியமனக் குழுவின் கூட்டங்களில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், தனது கருத்துகளை எழுத்து மூலம் பதிவு செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நீதித்துறைக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது இதுமுதல் தடவை அல்ல. 1950-இல் பிகார் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்தபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு மிகவும் ஆத்திரம் அடைந்ததாகவும், உடனடியாக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவந்து தீர்ப்பை முறியடித்ததாகவும் சொல்வார்கள். 1987-இல் நீதிபதிகள் நியமிக்கப்படாததில் மனம் வருத்தப்பட்டு அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வை.வி. சந்திரசூட் பேசியவை மறக்க முடியாத பதிவுகள்.
முதன்முதலில், நீதித் துறையும், நிர்வாகமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள நேர்ந்தது 1973-இல்தான். அன்றைய இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த சில சட்டங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசனம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை எவை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
இதன் எதிர்வினையாக, இந்திரா காந்தி அரசு பணிமூப்பு அடிப்படையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிக்காமல், அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளை ஓரங்கட்டிவிட்டு நான்காவது நீதிபதியை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தது. அதன்மூலம், நீதித்துறை தனது கட்டுப்பாட்டில் இயங்குவதை இந்திரா அரசு உறுதி செய்தது.
1989க்குப் பிறகு, எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலைமை ஏற்பட்டு, நிர்வாகம் பலவீனப்பட்டபோது, நீதித்துறை தனது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டத் தீர்மானித்தது. பொதுநல வழக்குகள் நீதித்துறையின் முக்கியத்துவத்தை அதிகரித்ததும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். 1993-இல் முதன்முதலில், "கலந்தாலோசிப்பது' என்பதை, "தெரிவிப்பது' என்று பொருள் கொள்ளும் வகையில் நீதிபதிகள் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது.
அதற்குப் பிறகு 1998-இல் நீதிபதிகள் நியமனம் குறித்த மூன்றாவது வழக்கில்தான் இப்போதைய கொலீஜியம் என்கிற நீதிபதிகள் நியமனக் குழு முழுவடிவம் பெற்றது. அதன் அடிப்படையில்தான் இதுவரை நியமனங்கள் நடந்து கொண்டிருந்தன.
நீதிபதி செலமேஸ்வர், இந்த மூன்றாவது நீதிபதிகள் வழக்கிற்குப் பிறகு உருவான "கொலீஜியம்' முறைக்கு, நீதிமன்றம் அப்போது விதித்திருந்த எந்தவித வரைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். ஐந்து பேர் கூடி, அவரவர்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து, ஏனைய உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெறுவது, அரசுக்குப் பரிந்துரைப்பது, அவர்கள் நியமிக்கப்படுவது என்பதுதான் 1998 முதல் பின்பற்றப்படுகிறது என்கிற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
1998-இல் மூன்றாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்புப்படி, கொலீஜியத்தில் உள்ள ஐந்து நீதிபதிகளின் கருத்தும் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களது கருத்துகளை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குத் தனது பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும். அதாவது, ஐந்து பேர் கொண்ட குழுவில் உள்ள அனைவரது கருத்துகளையும், எதிர் கருத்து இருந்தால் அதையும், அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
"கொலீஜியம்' முறை உருவாகி 16 ஆண்டுகளாகியும், இதுபோல பதிவு செய்யப்படுவதில்லை. அரசுக்குத் தெரிவிப்பதில்லை என்பது மட்டுமல்ல, "கொலீஜியம்' கூட்டங்கள் குறித்த குறிப்புகளும் வைத்துக் கொள்ளப்படவில்லை. இதைத்தான் நீதிபதி செலமேஸ்வர் தனது கடிதத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம், சுதந்திர தின உரையின்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்கூர், நீதிபதிகள் நியமனத்தில் அரசு தாமதம் செய்வதாகவும், இதனால் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், அரசுக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளப்படும் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, தேசமே அதிர்ந்தது. நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நிராகரித்த நீதித்துறையை அரசு பழிவாங்குகிறது என்கிற தோற்றத்தை ஊடகங்களும் ஏற்படுத்தின.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் நிராகரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பில், நடைமுறையில் உள்ள "கொலீஜியம்' முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை நீதிபதிகளே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், "கொலீஜியம்' முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறை ஒன்றைத் தயாரித்துத் தருமாறும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். அரசு நியமனத்துக்கான நடைமுறையைத் தயாரித்து அளித்துவிட்டது என்பதும், அது குறித்து நீதித்துறைதான் எந்த முடிவும் எடுக்காமல் தள்ளிப் போடுகிறது என்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
16 மாதங்களாக எந்தவித முடிவும் எடுக்கப்படாமல், 478 உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது உண்மை. நீதித்துறை பரிந்துரைத்திருக்கும் 74 பெயர்கள் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் இருக்கின்றன என்பதும் உண்மை. அதற்காக?
"கொலீஜியம்' முறையில் குறைபாடுகள் உள்ளன என்று தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நிராகரித்த ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வே ஏற்றுக்கொண்டிருக்கும்போது, "கொலீஜியம்' பரிந்துரைத்திருக்கும் நீதிபதிகள் பட்டியலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. ஒருவேளை, இந்த நியமன முறை தவறு என்று நீதிமன்றம் முடிவெடுக்குமானால், இப்போது நியமிக்கப்படுபவர்கள் தொடர்வார்களா, பதவி விலகுவார்களா?
நிர்வாக சீர்திருத்தம், பொருளாதார சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம், காவல் துறை சீர்திருத்தம் குறித்தெல்லாம் தீர்ப்புகள் வழங்கும் நீதித்துறை, தன்னையும் சீர்திருத்தத்திற்கு உட்படுத்திக்கொள்ளத் தயங்குவது விசித்திரமாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்பட எந்தவித வெளிப்படைத்தன்மைக்கும் தன்னை உள்படுத்திக் கொள்ள நீதித்துறை தயாராகாமல் இருப்பது, ஜனநாயக முரண். அரசியல் சாசன முரண். கட்டுப்பாடே இல்லாத, கேள்வி கேட்கவே முடியாத நீதித்துறை என்பது ஏற்புடையதல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...