பாஜகவின் பெண் தலைவர்களில் வலிமை வாய்ந்தவர்களாகவும் அகில இந்திய அளவில் பெயர் சொன்னால் அடையாளம் காணக்கூடிய நபர்களாகவும் விளங்கக்கூடியவர்கள் வெகு குறைவான பெண்களே. ஆண் தலைவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளின் பிரபலங்களாக வலம் வருவதில் பெரிய ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை. ஆனால், பெண்கள் அவ்விதமாக இருப்பதும், செயலாற்றுவதும் எப்போதாவது நிகழக்கூடியது என்பதால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாஜகவைப் பொருத்தவரை கடந்த ஆட்சியில் அகில இந்திய அளவில் அறியப்பட்ட முகங்களாக வலம் வந்த பெண் அரசியல்வாதிகள் என்றால் அது வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரப்பிரதேச முன்னால் முதல்வரான உமாபாரதி, விலங்குகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மற்றும் தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்டோர் மட்டுமே! இவர்களில் முன்னவர்கள் இருவரும் அவர்களது அதிரடியான கறார் பேச்சுக்காக எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். ஸ்மிருதியும், தமிழிசையும் தங்களது தொடர் செயல்பாடுகளாலும் காண்ட்ரோவர்ஷியல் கருத்துக்களாலும் ஊடகங்களின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள்.