சேலை உற்பத்திக்கோ அனுமதி; சாயப்பட்டறைக்கோ அனுமதி இல்லை: விரக்தியில் நெசவாளர்கள்
சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு சாயப்பட்டறை அமைக்க அனுமதி இல்லாததால், தமிழகம் முழுவதும் சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விருதுநகர் மாவட்ட நெசவாளர்கள்


சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு சாயப்பட்டறை அமைக்க அனுமதி இல்லாததால், தமிழகம் முழுவதும் சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விருதுநகர் மாவட்ட நெசவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருநகரம், புளியம்பட்டி, வெள்ளகோட்டை ராமலிங்கா நகர், புளியம்பட்டி காலனி, சொக்கலிங்காபுரம், கல்குறிச்சி, ஆத்திபட்டி, செம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றன.
மிகக் குறைவான வருமானத்தை உடைய இத்தொழிலால், விசைத்தறி உற்பத்தியாளர்கள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் நிலையுள்ளது. மேலும், விசைத்தறிகளில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் பருத்தி (காட்டன்) சேலை ரகங்கள் உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடு உள்ளது.
எனவே, தற்போது கைத்தறித் தொழில் செய்தோரின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துவிட்டது. ஆனால், கைத்தறி துணி ரகங்களின் தேவை அதிகளவு உள்ளது. இதன் காரணமாக, கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட துணி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்து, கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டதாக லேபிள் ஒட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பெரும்பாலும் பாலி காட்டன் சேலையையே உற்பத்தி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 3 சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். ஒரு சேலை உற்பத்தி செய்ய ரூ. 280 வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரிகளோ ஒரு சேலையை அதிகபட்சமாக ரூ. 295 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
மேலும், சேலை உற்பத்தி செய்யப்படும் நூலுக்கான சாயப்பட்டறை அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குவதில்லை. இதனால், நெசவாளர்கள் அனுமதியின்றி நூலுக்கு சாயமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் ஆய்வு நடத்தும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் அனுமதியின்றி சாயப்பட்டறை வைத்திருக்கும் நெசவாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். நூலுக்கு சாயம் இடாமல் சேலை உற்பத்தி செய்ய முடியாது.
விசைத்தறி பயன்படுத்த அனுமதி அளிக்கும் அரசு, சாயப் பட்டறை அமைக்க அனுமதி அளிக்காததால், அச்சத்துடனேயே சேலை உற்பத்தி செய்வதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் விசைத்தறி மூலம் செய்யப்படும் சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அருப்புக்கோட்டை நகர் மற்றும் கிராமப்புற விசைத்தறி தொழில் நல மேம்பாட்டுச் சங்கச் செயலர் ஆர். பாலமுருகன் கூறியது: விசைத்தறி தொழிலை சுமார் 300 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு சேலைக்கு ரூ. 15 வீதம் 3 சேலைகளுக்கு ரூ. 45 மட்டுமே ஒரு நாளைக்கு சம்பாதிக்க முடியும். இதனால், விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், சாயப்பட்டறைக்கு அனுமதி கிடைக்காததால், விசைத்தறி தொழில் தமிழகம் முழுவதும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. எனவே, தமிழக அரசு முக்கிய நகரங்களில் ஜவுளி பூங்கா அமைத்து அதன்மூலமும் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலமும் சேலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், ஊருக்கு வெளிப்புறத்தில் நெசவாளர்கள் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...