/

மனுசங்களுக்காக பாடிய கவிஞர் இன்குலாப் - விருதுக்காக அல்ல! சாகித்ய அகாடமி விருதை மறுத்த இன்குலாப் குடும்பத்தினர்! 

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

வி. உமா

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டன. ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை தொகுப்புக்காக மறைந்த கவிஞர் இன்குலாப்பிற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. 1944-ம் ஆண்டு பிறந்த இன்குலாப், கடந்த வருடம் இதே மாதம் (1 டிசம்பர் 2016) தமது 72-ம் வயதில் மறைந்தார். அவரது மறைவிற்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள இந்த விருதை ஏற்க குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்

கவிஞர் இன்குலாபின் இயற்பெயர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. சமூக அநீதிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் இந்த எழுச்சிக் கவிஞர். சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். அடையாளமும், புகழும் அங்கீகாரமும் தேடி எழுத்தை நம்பி பிழைப்புவாதம் செய்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் ஒடுங்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே இன்குலாபின் குரல் ஓங்கி ஒலித்தது. `விருது, பாராட்டு இவையெல்லாம் ஒரு கலைஞனுக்கான, கவிஞனுக்கான அங்கீகாரம் அல்ல. தான் வாழும் சமூகத்தில் உள்ள மக்களின் துயர்களை, வலிகளைப் பேசுவதுதான் ஒரு கலைஞனுக்கான ஆகப்பெரிய அங்கீகாரம்’என்று தான் எழுதிய வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்தார் அவர்.

அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுகளையோ, விருதுகளையோ எனது தந்தை எப்போதும் பெறுவதில்லை என இன்குலாபின் மகள் அமினா பர்வீன் கூறினார். எனவே மத்திய அரசு வழங்கிய சாகித்ய அகாடமி விருதை பெற மறுத்துவிட்டார். அது அவரது தந்தைக்கு அவர் செய்த மரியாதை எனலாம்.  கவிஞர் இன்குலாபின் நாடகங்களை மேடையேற்றிய கவிஞர் மொழிபெயர்ப்பாளர் அ.மங்கையிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியது, ‘கவிஞர் இன்குலாப் உயிருடன் இருந்த போது இந்த விருதை மத்திய அரசு வாங்கியிருந்தால் அதைப் பெற்றுக் கொள்வதோ மறுப்பதோ அவரின் உரிமை. ஆனால் அவர் மறைந்துவிட்ட நிலையில், இந்த விருதை வாங்குவது அவரது கொள்கைக்கு விரோதமானதாகவே அவர் குடும்பத்தினர் கருதுகின்றனர்’ என்றார்.

தான் வாழும் காலத்தில் நிகழும் வன்கொடுமைகளையும், சமூகப் பிரச்னைகளையும் கண்டும் காணாமல் வாழ்பவர்கள் சாமானியர்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது வேறு வழியில்லை, எங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதே. ஆனால் சிலரால் இவற்றை எளிதாகக் கடந்து போக முடியாது. அவர்களில் சிலர் புரட்சியாளர்களாக களத்தில் நேரடியாக இறங்கிவிடுவார்கள். இன்னும் சிலர் பேனாவையே கருவியாக்கி எழுத்தையே ஆயுதமெனக் கொள்வார்கள்.  அவர்கள் இச்சமூகத்தின் போராளிகள். மொழிக்காக, இனத்துக்காக, தான் வாழும் சமூகத்துக்காக எண்ணற்ற போராளிகள் இன்றும் உள்ளனர். ஆனால் அவர்கள் புகழ்வெளிச்சத்தில் குளிர்காய விரும்பமாட்டார்கள். ஒவ்வொரு நாளும் செயலாற்றிக் கொண்டிருப்பார்கள். இன்குலாப் அத்தகையவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் இல்லாமல் செய்வதற்காக, மக்களோடு மக்களாக தம் வாழ்நாளில் இறுதிவரை போராடியவர். கவிஞர் இன்குலாபின் இந்த வரிகள் தலித் மக்களின் தேசிய கீதமாக உள்ளது. 

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா!

இப்படிப்பட்ட தீப்பொறி எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் இன்குலாப். எளிமையும் அதே சமயம் தீவிரமும் உள்ள எழுத்துக்கள் அவை. காரணம் அந்த எழுத்தின் உண்மைத்தன்மை. மனத்திலிருந்து நேரடியாக தோன்றும் வார்த்தைகள் அவை. கவி வாசகங்கள், சொற் சேர்க்கைகளை அவர் நம்பியிருக்கவில்லை. கூரிய வாளாக ஒரு சொல் போதும், ஏகாதிபத்தியங்களை எதிர்த்து முழங்கிட! வர்க்க பேதங்கள் இருக்கும் வரை இன்குலாப்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை இந்த சமூகம் ஏற்ற இறக்கங்கள் இன்றி எல்லோரும் சமமாக வாழும் ஓரிடமாக வேண்டும் என்பதே. கொள்கைக்கு எதிரான விருதுகள் அங்கீகாரங்கள் இவர்களுக்கு ஒருபோதும் தேவை இல்லை. எவ்வித ஆக்கமும் இல்லாத சமூகத்தில் அவை அர்த்தம் அற்றது. எவ்விதமாற்றமும் நிகழாத ஒரு சமூகத்தில் பாராட்டுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் மட்டும் தரப்படும் விருதுகளை மறுப்பதே அவர்தம் எழுத்துக்குச் செய்யும் பெருமை. கலை சார்ந்து இயங்குபவர்கள் எதிர்நோக்குவது தம் எழுத்தால் மாறக்கூடிய மனங்களை மட்டும்தான் விருதுகளை அல்ல.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.