தமிழகத்திலிருந்து தள்ளி கொஞ்சம் ஆந்திரக் கதை. காலகஸ்தி கோவிலுக்குச் சென்றால் இரவு தங்கி வரவேண்டும் என ஐதீகம் என்பார்கள். ஒரு முறை நண்பருடன் சென்ற போது அரையெடுத்துத் தங்கியிருந்தோம். வெளியே பெரிய சப்தம். பக்கத்து அரைக்காரர் லாட்ஜ் உரிமையாளருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான்,. கோவிலுக்கு முதல் முதலாக பரிகார பூஜை பொருட்டு வந்திருந்த அவர் கோவில் பற்றி ஒரு விபரத்திற்காக லாட்ஜ்காரரிடம் விசாரிக்கப் போய், அந்த நபரிடம் லாட்ஜ் காரர் , பரிகார பூஜையில் உட்கார வேண்டுமென்றால், புது வேஷ்ட்டி அங்கவஸ்திரம் வாங்க வேண்டும், தேங்காய் பழம் விளக்குகள் எல்லாம் வாங்க வேண்டும், அர்ச்சனை தட்டுக்கள் தனியாக வாங்க வேண்டும், சுவாமிக்கு பெரிய மாலை வாங்க வேண்டுமென்றெல்லாம் கூறி கோவில் வாசலில் இருந்த அதற்கான கடைகளுக்கெல்லாம் அவரை அழைத்துப் போய் வாங்கச் செய்து ஏமாற்றி இருக்கிறார். ஆனால் நிஜம் என்னவென்றால் கோவிலுக்குள்ளேயே 250 ரூபாய் (இப்போதும் அது தான் என நினைக்கிறேன்) கொடுத்தால் அவர்களே பூஜைக்கான பொருட்களை வழங்கி விடுவார்கள். வெளியே வாங்க வேண்டியதே இல்லை. தன்னை இப்படி லாட்ஜ் காரர் ஏமாற்றி விட்டாரே என கடுப்பில் அந்த நபர் பலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.