/

தனியார் ஆக்கிரமிப்பில் கோயில் நிலம்!

ஈரோடு: மாநகரின் மையப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிவருகிறது.  ஈரோடு கோட்டை வாரணாம்பிகை உடனுறை ஆருத்ர கபால

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:02 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: மாநகரின் மையப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிவருகிறது.

 ஈரோடு கோட்டை வாரணாம்பிகை உடனுறை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், தற்போதைய தெப்பக்குள வீதியில் இருந்தது. 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இருந்த இக்குளம், நாளடைவில் பராமரிப்பு இல்லாமல், முற்றிலுமாக மூடப்பட்டு, சிறுவர்கள் விளையாட்டுத் திடலாக மாறியது. எனினும் அந்த இடம் தெப்பக்குள மைதானம் என்றே இப்போதும் அழைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் சம்ப்ரோக்ஷணப் பணிகள் நடந்தது. அதற்காக தெப்பக்குளம் மைதானத்தில் இரு புறமும் தாற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சிற்ப வேலைப்பாடுகள் நடந்தன. சம்ப்ரோக்ஷணம் முடிந்த பிறகு, தெப்பக்குள மைதானத்தை கோவில் நிர்வாகம் பராமரிக்காமல் விட்டது. தாற்காலிகக் கொட்டகைகள் ஒரு புறம் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.

 மேலும், இந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குடோன் போன்று பொருட்களை வைக்கும் இடமாகவும் மாறிவருகிறது. கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இந்த இடம் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி போடப்பட்டு, முன்புறம் கேட் அமைத்து பூட்டு போடும் வகையில் உள்ளது. அந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகள் புகலிடமாக மாறிவருகிறது. கோயிலுக்குச் சொந்தமான இரும்பு கம்பி உள்பட பல்வேறு பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திருடு போய் வருவதாகவும், இரவு நேரத்தில் இங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்கு என்று நிரந்தர வருமானம் எதுவும் இல்லை. இந்த இடம் தெப்பக்குளமாக இருந்ததால், கட்டடம் எதுவும் கட்ட முடியாது. ஈஸ்வரன் கோவில் தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 இந்த இடத்தை சுத்தம் செய்து, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றினால் போக்குவரத்து நெரிசலும் குறையும், கோயிலுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும். அதற்கான நடவடிக்கையை கோயில் நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றார். கவனத்தில் கொள்ளுமா அறநிலையத்துறை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.