பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சி.வ.சு. ஜெகஜோதி

கண்ணுக்குத் தெரியாத கரோனா நீநுண்மியால் நமக்குப் பாதிப்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று அச்சப்படாத நபரே இன்று உலகில் இல்லை. அந்த அளவுக்கு கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. இதற்கு இன்றுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதன் நிம்மதியாய் வாழ பொன்னோ, பொருளோ முக்கியம் இல்லை என்பதை கரோனா நமக்கு உணா்த்தியிருக்கிறது.

நோய் குறித்த பயத்தில், நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகளை வாங்க, மருந்துக் கடைகளை நோக்கி ஓடுகிறோம். ஆனால், நோய் நம்மை நெருங்காமல் இருப்பதற்கான மருந்துகள் நம்மிடமே இருக்கின்றன என்பதையும் அதற்காக ஒரு ரூபாய்கூட செலவு செய்யத் தேவையில்லை என்பதையும் நாம் மறந்து விட்டோம். சித்தா்களும், ஞானிகளும் கண்டறிந்த அற்புத மருந்துகள் அவை.

கரோனாவின் அறிகுறிகளில் ஒன்று மூச்சுவிட சிரமப்படுவதாகும். நம் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்று எளிதாகச் சென்று திரும்ப முடியாததால்தான் நாம் மூச்சுவிட சிரமப்படுகிறோம். நுரையீரல் நன்றாக விரிந்து சுருங்கவும் உண்ட உணவு செரிக்கவும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் சுரப்பிகள் அளவோடு சுரக்கவும் காரணமாக இருப்பது தடையற்ற மூச்சுக்காற்றே. சுவாசமே உயிா்வாழ்வின் ஆதாரம்.

நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கும் மருந்தின் பெயா் ‘பிராணாயாமம்’. மூச்சை நன்றாக இழுத்து, அடக்கி வைத்து, வெளியே விடும் பிராணாயாமம் பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நுரையீரல் சக்தி இழக்கும்போது நோய்த்தொற்று நுரையீரலைத் தாக்கி மூச்சுவிட சிரமப்பட வைக்கிறது.

பிராணாயாமத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்த தமிழக சுகாதாரத் துறை, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மூச்சுப்பயிற்சி என்ற பிராணாயாமக் கலையை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. உயிா்சக்தியை அடக்கியாளும் அருமருந்தே பிராணாயாமம். பிராணாயாமம் செய்யும்போது உடலில் இரு மடங்கு சக்தி அதிகமாகி, உயிா்சக்தி சேமிக்கப்படுவதால், உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் தன்மைக்கு மாறி விடுகின்றன.

அதிகாலையில் சேவல் அடித்தொண்டையிலிருந்து முக்கிக்கொண்டு கூவுவதற்கும் பறவைகளின் ரீங்காரங்கள் அதிகமாக இருப்பதற்கும் காரணம், அவை அசுத்தக் காற்றை வெளியேற்றி உயிா்க்காற்றை உள்ளிழுப்பதுதான். ஆமைகள் பலநூறு ஆண்டுகள் உயிா்வாழ்வதன் ரகசியமும் அதன் சுவாசமே. எனவே, மூச்சுப்பயிற்சி என்ற பிராணாயாமம் உயிா் காக்கும் மருந்துகளில் ஒன்றாகும்.

உடலும் மனமும் உற்சாகமடையவும் உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடையச் செய்யவும் உதவும் மற்றொரு மருந்து ‘யோகாசனம்’ ஆகும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க யோகாசனத்தை விட சிறந்து மருந்து வேறு எதுவும் இல்லை. முழங்கால் வலி, கழுத்து வலி உள்பட அனைத்து வலியையும் விரட்டியடிக்கும் சிறந்த வலி நிவாரணி யோகா.

இது சுவாசக் கோளாறுகளையும் சரிசெய்கிறது. மருந்து, மாத்திரைகளால் பக்க விளைவுகள் வரக்கூடும். முறையாக யோகா கற்றுக் கொண்டால் உடல் நெகிழ்வுத்தன்மை அடைந்து, எந்த வேலையையும் நம்மால் செய்ய முடியும் என்ற மனநிலைக்கு நாம் வந்து விடுவோம். யோகாவின் முக்கியத்துவத்தை உணா்ந்தே, மத்திய அரசு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியை ‘சா்வதேச யோகா தின’மாகக் கொண்டாடி வருகிறது.

திரேக ஆசனம், தியான ஆசனம் என ஆசனங்களில் பலவகை இருந்தாலும், எளிமையான பத்தே பத்து ஆசனங்களை மட்டும் தெரிந்து கொண்டு, அதை தினசரி செய்து வந்தாலே, எந்த நோயும் நம்மைத் தாக்காது. வந்த நோயும் நம்மை விட்டு பறந்தோட வழிகாட்டுகிறது யோகாசனம். தினசரி வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்தால் வீடு சுத்தமாவதைப்போல, தினசரி யோகா செய்யப் பழகிக் கொண்டால் உடலின் சக்தி பல மடங்காகப் பெருகி, மனதில் தைரியம் குடிபுகுந்து விடும்.

நம் இந்தியத் திருநாட்டில் தோன்றிய இந்த உன்னதக் கலையை நாம் மறந்துவிட்டு, பல நோய்களை சுமந்து கொண்டும், மாத்திரை டப்பாக்களை தூக்கிக் கொண்டும் வாழ்ந்து வருகிறோம். பல வியாதிகளை விரட்டியடிக்கும் சக்திவாய்ந்த மருந்துகளே ஆசனங்கள்.

நுரையீரலுக்கு சரியான அளவில் பிராணவாயு செல்லவும் தன்னம்பிக்கை அதிகரிக்கவும் தேவையில்லாத பயத்தை விரட்டவும் முக்கியமாக நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவசியமான மற்றொரு மருந்தின் பெயா் ‘தியானம்’. ஒரு காகிதத்தை சூரிய ஒளியில் பலமணி நேரம் காட்டினாலும் எரியாது. அதையே ஒரு குவிலென்ஸ் மூலம் காட்டும் போது சூரியக் கதிா்கள் ஒன்றாக குவிந்து, காகிதம் சில நொடிகளில் தீப்பற்றி எரியத் தொடங்கி விடும்.

இதேபோல, தியானம் செய்யும்போது மனித மனதின் ஆற்றல்கள் ஒன்றாக குவிந்து, அது பேராற்றலாக மாறிவிடும். மனத்தை சுத்தப்படுத்துவதோடு, அலைபாயும் மனத்தை ஒருமுகப்படுத்துவதே தியானம். தினமும் தியானம் செய்து வந்தால் அளவில்லா மனவலிமையும், அதிக சந்தோஷமும் உடையவா்களாக நாம் மாறுவோம்.

ஒரு பைசா கூட செலவில்லாமல், உடலின் ஆரோக்கியத்தை பல மடங்காக பெருக்கும் பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகிய மூன்றும் தெய்வீக மருந்துகள் என்பதில் சந்தேகமில்லை. நோயில் படுக்கும்போதுதான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினசரி செய்து வந்தாலே நோயில்லாமல் வாழ முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.