ஆடம்பரம் என்னும் தொற்று நோய்
மனித மனம் விசித்திரமானது; எதையும் சுயமாய்ச் செய்து முடிவெடுக்கத் தெரியும் வரை. போலச் செய்து பழகியிருப்பது. அது தொட்டில் பழக்கம்;


மனித மனம் விசித்திரமானது; எதையும் சுயமாய்ச் செய்து முடிவெடுக்கத் தெரியும் வரை. போலச் செய்து பழகியிருப்பது. அது தொட்டில் பழக்கம்; சுடுகாடு போகும் வரை இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், பலருக்கு அந்தப் பொழுதில்கூட, ஆடம்பரமாக இருந்தே தீரவேண்டும் என்கிற போக்கு அழுத்தமாக இருக்கிறது.
ஆடம்பரம் இயல்பானதன்று; பார்த்துப் பழகுவது. தொடக்கத்தில் பெருமை தருவதுபோல் இருக்கும்; போகப் போக, அனைத்துச் சிறுமைகளையும் அது தானாய்க் கொண்டுவந்து சேர்க்கும். பல நேரங்களில் நமக்கு நேரும் சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் காரணமான ஆடம்பரம் ஒரு நோய். அது தானாய் வருவதில்லை; தொற்றிக்கொள்வது; பின்னர் தொன்றுதொட்டு வருவதும்கூட!
புறத்தே பொலிவிழக்கச் செய்யும் மற்ற நோய்களைப் போல இல்லை இது. நாளுக்கு நாள் பொலிவும் பெருமையும் கூடிவருவதுபோல், புறத்தோற்றம் தந்து உள்ளே பொறாமையைத் தூண்டும். எரியும் தீயில் மெழுகாய் உருகும் மனதை, அந்த அழுக்காறு அரிக்கும். அதன் மேல் அடங்காப் பேராசை எனும் அவா வந்து படியும். நினைத்தது எல்லாம் நடக்காததாலும், தேடியதெல்லாம் கிடைக்காததாலும் வெகுளி வரும். அந்த ஆத்திரத்தில், இன்னார் இனியார் எனப் பார்க்காமல், இன்னாச்சொல் உதிர்க்கும். தன்னைச் செதுக்குவதுபோல் தொடங்கும் இதன் பணி- முழுக்கச் சிதைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். இவை நான்கும் அறக்கொல்லிகள்; தன்னைக் கொல்லத் தானே அமைத்துக் கொள்ளும் சுய கொள்ளிகள்; இவை, ஆடம்பரத்தின் நால்வகைப் படைகள்!
ஆடம்பர நோய் அதிதீவிரமாய்ப் பரவும் காலங்கள், விழாக் காலங்கள்; பலரையும் வீழ்த்தி, இயற்கையையும் பாழ்படுத்தும் கஷ்ட காலங்கள். இவை, நஷ்ட காலங்களும்கூட!
பண்டிகைக் காலங்களில், அடிப்படைத் தேவைகளுக்கு மேல், அள்ளியிறைக்கப்படும் பணமும் பொருள்களும் எவ்வளவு விரயங்கள்! இதற்கு எந்த மதமும் சாதியும் விதிவிலக்கில்லை; அரசியலிலும் இதற்குப் பெரிய ஆதாயம்தான். கட்சி பேதமில்லாமல் கவர்ந்திழுக்கும் வல்லமை மிக்கது, இது.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம்பப்படுவது திருமணம். இன்று எல்லாத் திருமணங்களையும் ஆடம்பரம்தான் ஆக்கிரமித்திருக்கின்றது. அதில் இன்றியமையாச்சடங்கு திருப்பூட்டுதல். அது இன்றைக்கு முழுக்கவும் திரைப்படப் பாணியின் படக்காட்சிப் பதிவாகவே அமைந்துவருகிறது. சரியாகப் படம் அமையவில்லை என்பதற்காக, ஒன்ஸ் மோர் கேட்கப்பட்டு, மறுபடியும் தாலி கட்டுகிற நிலைக்கு மணமகன் ஆளாகிவிடுகிறார். அந்த மங்கல வேளையில் மணமக்களின்முன் படப்பதிவாளர்களே நிறைந்து நிற்கிறார்கள். கெட்டிமேளம் முழங்க, மணமக்களை வாழ்த்திப் பெரியவர்கள் இடும் மலர்களையும் அட்சதைகளையும், இந்தப் படப்பதிவாளர்களே பெற்றுக் கொண்டுவிடுகிறார்கள். பாவம் மணமக்கள்.
முதல்நாள் வரவேற்பு நிகழ்வுக்குப்பின்னர், மணமக்களைப் படமெடுக்கும்போது, படப்பதிவாளர்கள் செய்யும், அட்டகாசம் குறித்துத் தனிக் கதையே எழுதலாம். நடப்பது என்ன திருமணமா, இல்லை சினிமா ஷுட்டிங்கா? என்று பெரியவர்களை முகஞ்சுழிக்கவைக்கிற நிகழ்வு அது.
இந்தப் பெருநோய் இப்போது, காதுகுத்து, பூப்புனித நீராட்டு எனும் சின்னஞ்சிறு நிகழ்வுகளைக்கூடக் காவு கொண்டிருக்கின்றன. 3 அடி உயரம் இருக்கும் குழந்தைகளின் படங்களை 30 அடிக்கும் பெரிதான பேனர்களில் அமைத்துத் தெரு முழுக்க நிறைக்கும் விளம்பரங்கள் என்ன? சிறுமியாய் இருந்து பெரியவளான பெண்மகளை, ஆகப் பெரிய திரைகளின் படப்பதிவாக்கி நிறுத்தவேண்டிய அவசியம் என்ன?
இந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்து, திருஷ்டி கழிக்க உடைக்கப்படும் பூசணிக்காய்களைக் கூட இந்த ஆடம்பரம் விட்டுவைக்கவில்லை.
எந்தச் சுபமுகூர்த்தங்களும் இல்லாத ஆடி மாதத்தின் அனைத்து நாள்களையும் தமக்கான சுபமுகூர்த்த தினங்களாக ஆக்கிவிடுகிறது வணிகச்சூழல். தள்ளுபடியென்றும், இலவசங்கள் என்றும் ஆயிரம் தூண்டில் நாக்குகள் இந்த ஆடம்பரத் தேவதைக்கு. தேவைக்குமேல் அனைத்தையும் தேட வைத்து வேடிக்கை பார்ப்பதே இதற்கு இலக்கு. மிக மிக அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட, அளவுக்கு மீறிய ஆடம்பர விளம்பரங்கள் தேவைப்படுகின்றன.
அண்டாக்களைவிடப் பெரிதான பாத்திரங்களில் உணவுப் பண்டங்களைச் சமைத்து வைத்தாலும், அலமாரிகள் முழுக்க உடைகளை அடுக்கி வைத்திருந்தாலும், எடுத்து உடுக்கவும் சுவைத்து உண்ணவும் பயன்படுவது எவ்வளவு? பண்டைக்காலப் புலவர் நக்கீரனார், ஒட்டுமொத்த உலகையே தன்குடைக்கீழ் கொண்டு வந்து ஆளுகிற வேந்தராயினும் மிக எளிய மாந்தராயினும் அவர்கள், உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்கிறார். இதற்கும் வழியற்று அல்லாடும் மக்களை அலட்சியப்படுத்திவிட்டு, இவை அனைத்தையும் தனக்கெனப் பறித்து வீணாக்கும் ஆடம்பரத்தைத் தவிர்க்க முயல்வதுகூட, இப்போது ஆடம்பரம் ஆகிவிட்டது.
இந்நோய்க்கு இலக்காகித் துன்புறுகிறவர்களைப் பார்த்து இரக்கப்படுகிறவர்கள்கூட இருப்பதில்லை; மாறாக, எள்ளி நகையாடுகிறவர்களும், சொல்லிக் காட்டுகிறவர்களுமே மிகுதியாக இருக்கிறார்கள். அதனால், விட்டுவிடலாம் என்று நினைப்பவர்களின் நாடி நரம்புகளில் வீம்பு முறுக்கேற்ற முன்னிலும் பலமடங்காய்க் காரியத்தில் இறங்கி, இந்த நோயைப் பலருக்கும் பலமடங்கு பரப்பிவிடுகிறவர்களாகப் பலரும் ஆகிவிடுகிறார்கள்.
இப்போது, பலரையும் பற்றியிருக்கும் நோய், சர்க்கரை. கூடாது என்று தெரிந்தும் பந்தி இலையில் பரிமாறப்படுகின்றன பல்வகை இனிப்புகள்.
கண் அவை காட்ட, நாக்கு நீர் சுரக்க, எடுக்க நீளும் கரத்தைத் தடுக்கப் பக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்த்து முறைக்கவும், விடாமல் கெஞ்சியும் தவிக்கவிடுகிறது ஆடம்பர இந்நோய், எத்தனையோ நோய்களுக்கு காரணமாய் இருந்துவிடுகிறது!
இது மாதிரியான நேரங்களில், தற்காத்துத் தற்கொண்டானையும் பேணுகிற பெண்களின் சொற்களிலும் அல்லவா, சூசகமாய் இந்நோய் போய்த் தொற்றிக்கொள்கிறது.
அகலக் கால் வைக்காதே, ஆபத்து என எச்சரிக்கும் பெரியவர்களை அலட்சியப்படுத்துவதிலிருந்து தொடங்கும் இந்நோய், கெளரவம் என்னும் பொன்னாடை தரித்துவரும். புகழ் என மினுக்கிக் காட்டும். பிரபலம் என்னும் பேராசை ஊட்டும். சரித்திரம் என்று உயரத்தில் தூக்கிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில் போடும்; விட்டெறியும். அந்தக் கணத்தில் எழும் அவமானத்தைத் துடைத்து, அதுவே தூக்கிவிடுவதாய் மீளவும் கை நீட்டும். அது பிச்சை பெற நீளும் கை என்று எச்சரிக்கை கொண்டவர்கள் பிழைத்துக்கொண்டவர்கள்; இச்சை கொண்டு போனவர்கள் மிச்சமேயில்லாமல், தங்களையும் சிதைத்துக் கொண்டார்கள்; அவர்களோடு சேர்ந்து இன்னலுறுபவர்கள், இவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத எல்லாரும், எல்லாமும்!
அடிப்படைத்தேவைக்கு வெற்றுக்குடங்கள் ஏந்திப் போராடும் நாம் ஆடம்பரத்திற்காகக் கொட்டிய நீர் அளவு எவ்வளவு? வியர்க்கவைத்து நின்று போகும் மின்சாரத்தை எத்தனை விதங்களில், இருக்கும்போது வீணடித்திருக்கிறோம்?
பசிப்பிணி போக்க, விடுதிகள் தேடி அலையும் அந்த ஒரு கணத்தில் ஆடம்பர விருந்து வைத்துச் சிந்திய சோற்றுப்பருக்கை பற்றிச் சிந்தித்திருப்போமா?
தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்துவிட்டு, அவசரத் தேவைக்கு, மிக மிகத் தேவையான பொருள்களை விற்றவர்கள் எத்தனைபேர்?
விலை கொடுத்தாலும் மீள வாங்க முடியாதவற்றில், மானமும் ஒன்று. அதில் தன்மானமும், பிறர் மானமும் அடக்கம். சன்மானம் என்றும் வெகுமானம் என்றும், பெறுகிற வருமானத்துக்கு அப்பாலுள்ள எல்லாமும், மானத்தை வாங்க வைக்கும் சூது பொருள்கள்! இவை ஆடம்பரம் பெற்ற செல்லப் பிள்ளைகள்! அன்பளிப்பு என்ற சொல்லுக்கு உள்பொருள், அன்பழிப்பு என்பது தெரிந்தும் உணரவிடாத கவர்ச்சி, ஆடம்பரத்துக்கு உண்டு.
மருந்துகளைவிட, நோய்களே அதிக விளம்பரத்திற்கு உள்ளாக்கப்படும் இந்தக் கலியுகத்தில் சர்வ வல்லமை படைத்த சக்தியாய் உலா வருகிற பெருநோய், ஆடம்பரம். புற்று நோயினும் கொடிய பற்று நோயான, ஆடம்பரம் என்னும் தொற்றுநோயிடம் இருந்து நிரந்தர விடுதலை பெறுவது எவ்வாறு?
இதனை ஒழிக்க மருந்தே இல்லையா? என்ற கவலை வந்துவிட்டால், அதுவே மருந்து. எதனைச் செய்யத் தொடங்கினாலும், இது தேவையா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, தேவைகளின் இன்றியமையாத் தேவைகளை மட்டும் கண்டு தெளிவது, அவற்றை மட்டுமே தேர்ந்து நடைமுறைப்படுத்துவது என முறைப்படுத்திக்கொண்டால், இந்நோய், படிப்படியாய் நம்மை விடத் தொடங்கும். எளிமை, சிக்கனம், சேமிப்பு என்கிற நன்மை தரும் பழக்கங்களை எதன் பொருட்டும் எப்போதும் தவிர்க்காமல் இருந்தால் போதும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...