பொதுவாக, சமூகத்தின் பெரிய மனிதர்கள் இயற்கையெய்துகிறபோதெல்லாம் இரங்கல் சொல்லும் பலரும் அறிந்தோ அறியாமலோ சொல்லுகிற தொடர், 'ஈடு செய்ய முடியாத இழப்பு' என்பது.
இது உண்மையாகச் சொல்லப்படுகிறதா அல்லது சம்பிரதாயமான சொற்பயன்பாடா என்ற எண்ணம் அடிக்கடி எழுவதுண்டு. புகழொடு வாழ்ந்தவர்களுக்குத் தோற்றம்- மறைவு என்று சொல்வது சரி. அவர்கள் இருந்தமைக்கான அடையாளம், அவர்கள் தங்களை அடுத்து வருகிறவர்களுக்கு முன்னோடிகளாக இருந்தால்தான் அந்தத் தொடர் பொருந்தும்.
மனிதராகப் பிறந்ததே பெருமைக்கும் புகழுக்கும் உரியதுதான். அந்த நிலைநின்று செயல்படாமல் மரித்தால், அவர்கள் இழந்தது புகழ். ஓரளவு செயல்பட்டிருந்தால்கூட எய்துவது புகழ்தான். அழகாகச் சொல்வான் கம்பன், கைகேயி கூறுவதாக, 'பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழே' என்று.
'வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்' என்பது அப்பர் பெருமானின் அனுபவ வாக்கு. அவரே குறிப்பிடுவதுபோல, 'குறிக்கோள் இலாது கெடுவதுதான்' இழிவு.
உலகில் தோன்றிய எவ்வுயிரும் தத்தமது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுகிறபோது, எய்துகிற நிலை புகழுக்கு உரியதுதான். அந்த அடிப்படையில்தான் நம் நாட்டில் மரமும் விலங்கும், பறவையும் மிருகங்களும்கூட தெய்வநிலை எய்துவதைப் பார்க்கிறோம்.
எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இயற்கையாகவே விடைபெற்றுக் கொள்வோரை இயற்கை எய்தினார் என்றே சொல்வது பொருத்தம். பெரும்புகழொடு மறைந்தவர்களைப் பண்டைக்காலத்தில் 'மாண்டார்' என்பர். போரில் வீரமரணம் எய்தியவர்கள், சமூகப்போராளிகள் உள்ளிட்ட மாட்சிமைக்குரிய சான்றோர்களை 'மாண்டார்' என்று குறிப்பது வழக்கம். 'உயிர் நீத்தார்' என்பது வடக்கிருந்து- உண்ணா நோன்பிருந்து -விடைபெற்றுக்கொண்ட சமயிகளைக் குறிக்கலாம்.
அவ்வாறே தத்தம் சமயநெறியில் வழுவாமல் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர்களை, சிவலோக பதவி எய்தினார், வைகுந்த பதவி அடைந்தார், திருநாடு அலங்கரித்தார் என்று மங்கலவழக்காகச் சொல்வது மரபு. குருபீடத்தில் இருந்து பெருநெறி புகட்டிய மகான்களின் மறைவுகுறித்துச் சொல்லும் தொடர்களை உலகம் அறியும். அவற்றின் உள்பொருள் புரிந்துகொள்ளாமல் போவதும் உண்டு.
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
இவ்வாறு நிலையாமை குறித்துப் பேசுகிற திருவள்ளுவரின் குரலில் சோகம் இருக்கிறதா, மெல்லிய எள்ளல் இருக்கிறதா, இந்தச் சமூகத்தின்மீது கோபம் இருக்கிறதா என்றெல்லாம் நினைக்க வைத்துவிடுகிறது இக்குறள். இந்தப் பெருமை இந்தக் கணம் முதல் இல்லாது போகிற ஒருவனிடம் சென்று சேர வேண்டியதல்லவா என்ற நுண்ணிய கோபம் அப்பேரறிஞனிடமிருந்து வெளிப்படுகிறது.
'இந்தப் பெருமையை நமதாக ஆக்கிக்கொள்ளாமல் மீண்டும் இருந்த உலகிற்கே திருப்பிச் செலுத்திவிட்டு இயற்கை எய்திவிட்டார்களே' என்ற வருத்தமும் இதில் தொனிக்கிறது.
ஒன்றுக்கும் பயனற்றவர்களின் இடத்தைக் காலி செய்துகொண்டதன் மூலமாக, இந்த உலகம் இப்பெருமையை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுவிட்டது என்று பயனற்ற வீணர்கள் குறித்து மெல்லிய நகையுடன் குறள் ஒலிப்பதாகவும் தோன்றுகிறது.
இந்த உலக வாழ்க்கை நிலையில்லாததுதான். இந்த யாக்கையும் செல்வமும் ஏன் பெருமையும் கூட நிலையில்லாததுதான். நமக்கிடப்பட்ட பெயர்கூட எத்தனையோ லட்சக்கணக்கானவர்களின் பெயர்களைப்போல ஒன்றுதான்.
ஆனால், இவையனைத்தும் இல்லாத நிலையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று பேசுகிறான் ஒரு பழந்தமிழ்ப்புலவன்.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே
என்று தமிழுக்காகத் தலைகொடுத்த குமணவள்ளலை வாழ்த்திப் பெருந்தலைச் சாத்தனார் பாடுகிறார்.
'மன்' என்பது நிலைபேறுடையது. இவ்வழி உருவான சொற்கள் மனம், மன்னர், மனிதர் என்பதெல்லாம்.
'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன்' என்று வள்ளலார் பெருமான் சொல்கிற மரபு நம் தமிழ் மரபு. இல்லங்கள்தோறும் நடக்கும் வைபவங்கள் அனைத்திற்கும் வாழை மரங்களைக் கட்டுகிற வழக்கம். அநியாயமாக, கனியும், காயும், தண்டும், இலையும், சருகும்கூடத் தருகிற வாழையை வெட்டிக் கொணர்ந்து வீட்டின் முன் கட்டுவது அர்த்தமற்ற சடங்காகப் போவதுகூட அவலமில்லை. அதன் உண்மைப் பொருளை உணராமல் வீணடிப்பதுதான் அவலம்.
'முன்னொருவன் பின்னொருவன் இல்லை' என்னும் நிலையில் வாழ்ந்து நிறைந்தானே வள்ளல் பாரி, நிழலே இல்லாத நீண்ட பயண வழியில் பயன்மிகு பழமரம்போலத் தனித்து நின்று அருளினவன் பாரி என்ற பொருளில், அவனை நீள நினைந்து கபிலர் பாடினார், 'நிழல்இல் நீள்இடைத் தனிமரம்' என்று.
அது அனைத்துத் துறைசார்ந்த தளங்களிலும் அமரராகிக் கொண்டு வருபவர்களுக்கு உரிய தொடராக மாறிவருவது வருந்தத்தக்கது.
ஈடு செய்ய முடியாதது இழப்புதான் என்றாலும் ஈடு செய்ய முயலாமல் இருப்பதே பேரிழப்பு என்பதை இனியேனும், மனித குலத்தினும் மகத்தானதாகத் தன்னினத்தைக் கருதிப் பார்க்கும் தமிழ் இனம் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

